யாத்திராகமம்
ஆசிரியர்
இந்த புத்தகமும் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியான மோசேயினால் எழுதப்பட்டது என்று யூத பாரம்பரியம் சொல்லுகிறது. சந்தேகப்படாமல் மோசே தான் இதின் தெய்வீகமாக வழி நடத்தப்பட்ட ஆசிரியர் என்று இரண்டு காரியங்களால் ஏற்றுக்கொள்ளலாம். யாத்திராகமமே மோசே எழுதின காரியங்களை குறிப்பிடுகிறது. பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; என்று யாத் 34:27 ல் சொல்கிறது யாத். 24:4 ல் சொல்கிறது மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து; ஆகையால் இந்த புத்தகத்தை மோசே தான் எழுதினார் என்பது நியாயமாக இருக்கிறது. இரண்டாவதாக, மோசே தாமே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்குப்பெற்றவன் பார்வோனுடைய குடும்பத்தில் வளர்க்கப்பட்டு கல்வி கற்றவன். ஆகையால் எழுதுவதிலும் ஞானம் பெற்றவனாய் இருந்தான்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு. 1,446 க்கும் 1,405 க்கும். இடையில் எழுதப்பட்டது.
இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய அவிசுவாசத்தினால் 40 வருடங்கள் வனாந்திரத்தில் வீணாக சுற்றி அலைக்கழிக்கப்பட்டார்கள். இந்த நாட்களில் தான் இந்த புத்தகம் அதிகமாக எழுதப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
எகிப்திலிருந்து மீட்கப்பட்ட ஜனங்களுக்காகவே இது எழுதப்பட்டது. எகிப்திலிருந்து வெளியே வந்த சீனாய் ஜனங்களுக்காக மோசே எழிதினான். (யாத் 17:14; 24:4; 34:27-28).
எழுதப்பட்ட நோக்கம்
இஸ்ரவேலர்கள் எப்படி யெகோவாவின் ஜனங்களாக மாறினார்கள் என்பதையும். தேவனுடைய ஜனங்களாக உடன்படிக்கையின்படி எப்படி வாழவேண்டும் என்பதையும் விவரித்துக் காட்டுகிறது இஸ்ரவேல் ஜனங்களுடன் உடன்படிக்கை செய்த தேவன் உண்மையுள்ளவர், பரிசுத்தமானவர், சகல வல்லமையுள்ளவர். ஆபிரகாமுக்கு செய்யப்பட்ட வாக்குத்தத்ததை ஆபிரகாமின் சந்ததியாரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தபோது தேவனின் குணங்களை தேவனின் பெயர் மூலமாகவும் அவருடைய வல்லமையான செயல்கள் மூலமாகவும் வெளிப்படுத்தபடுவதை காண்கிறோம். ஒரு தனிக் குடும்பம் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டு, தேசமாக உருவாகுவதை இந்த புத்தகம் சொல்கிறது. யாத். 2:24; 6:5; 12:37.
மையக் கருத்து
விடுதலை
பொருளடக்கம் 1. முன்னுரை — 1:1-2:25 2. எகிப்தின் அடிமைதனத்திலிருந்து இஸ்ரவேலின் மீட்பு — 3:1-18:27 3. சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட உடன்படிக்கை — 19:1-24:18 4. தேவனுடைய இராஜரீக கூடாரம் — 25:1-31:18 5. கலகத்தினால் தேவனின் சமூகத்தை இழத்தல் — 32:1-34:35 6. தேவனுடைய இராஜரீக கூடாரம் ஸ்தாபிக்கப்பட்டது — 35:1-40:38Chapter 1
அத்தியாயம் 1
இஸ்ரவேலர்கள் எகிப்தில் துன்புறுத்தப்படுதல்
1 எகிப்திற்குப் போன இஸ்ரவேலுடைய மகன்களின் பெயர்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, 2 இசக்கார், செபுலோன், பென்யமீன், 3 தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே. 4 இவர்கள் யாக்கோபுடன் தங்கள் தங்கள் குடும்பங்களோடு போனார்கள். 5 யோசேப்போ அதற்கு முன்பே எகிப்திற்கு போயிருந்தான். யாக்கோபின் சந்ததியார்கள் எல்லோரும் எழுபது பேர். 6 யோசேப்பும் அவனுடைய சகோதரர்கள் அனைவரும், அந்தத் தலைமுறையினர் எல்லோரும் மரணமடைந்தார்கள். 7 இஸ்ரவேலர்கள் அதிகமாக பலுகி, ஏராளமாகப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது.
8 யோசேப்பை அறியாத புதிய ராஜா ஒருவன் எகிப்தில் தோன்றினான். 9 அவன் தன்னுடைய மக்களை நோக்கி: “இதோ, இஸ்ரவேலர்களுடைய மக்கள் நம்மைவிட ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாக இருக்கிறார்கள். 10 அவர்கள் பெருகாதபடியும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைவரோடு கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்செய்து, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடியும், நாம் அவர்களைக்குறித்து ஒரு தீர்மானம் செய்யவேண்டும்” என்றான். 11 அப்படியே அவர்களைச் சுமை சுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படி, அவர்கள்மேல் மேற்பார்வையாளர்களை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் சேமிப்புக் கிடங்கு பட்டணங்களைக் கட்டினார்கள். 12 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாக அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேலர்களைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள். 13 எகிப்தியர்கள் இஸ்ரவேர்களைக் கொடுமையாக வேலைவாங்கினார்கள். 14 கலவையும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையாலும், வயலில் செய்யும் எல்லாவித வேலையாலும், அவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்த எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாக நடத்தினார்கள். 15 அதுமட்டுமில்லாமல், எகிப்தின் ராஜா சிப்பிராள், பூவாள் என்னும் பெயருடைய எபிரெய மருத்துவச்சிகளுடன் பேசி: 16 “நீங்கள் எபிரெய பெண்களுக்கு பிரசவம் பார்க்கும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது பார்த்து, ஆண்பிள்ளையாக இருந்தால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையாக இருந்தால் உயிரோடு இருக்கட்டும்” என்றான். 17 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடு காப்பாற்றினார்கள். 18 அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைத்து: “நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடு காப்பாற்றுகிற காரியம் என்ன” என்று கேட்டான். 19 அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: “எபிரெய பெண்கள் எகிப்திய பெண்களைப்போல் இல்லை, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடம் போவதற்கு முன்பே அவர்கள் பிரசவித்துவிடுகிறார்கள்” என்றார்கள். 20 இதினால் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். மக்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள். 21 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததால், அவர்களுடைய குடும்பங்கள் செழிக்கும்படிச் செய்தார். 22 அப்பொழுது பார்வோன், “எபிரெயருக்கு பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நைல் நதியிலே போடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடு வைக்கவும்” தன்னுடைய மக்கள் எல்லோருக்கும் கட்டளையிட்டான்.
Chapter 2
அத்தியாயம் 2
மோசேயின் பிறப்பு
1 லேவியின் கோத்திரத்தாரில் ஒருவன் லேவியின் மகள்களில் ஒருத்தியைத் திருமணம்செய்தான். 2 அந்த பெண் கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதங்கள் ஒளித்துவைத்தாள். 3 அதன்பின்பு அவள் பிள்ளையை ஒளித்துவைக்கமுடியாமல், ஒரு நாணல்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் தாரும் பூசி, அதிலே பிள்ளையை வைத்து, நைல் நதியோரமாக நாணலுக்குள்ளே வைத்தாள். 4 அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் சகோதரி தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். 5 அப்பொழுது பார்வோனுடைய மகள் நதியில் குளிக்க வந்தாள்; அவளுடைய பணிப்பெண்கள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன்னுடைய பணிப்பெண்ணை அனுப்பி அதைக் கொண்டுவரும்படிச் செய்தாள். 6 அதைத் திறந்தபோது பிள்ளையைக்கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, “இது எபிரெயர்களின் பிள்ளைகளில் ஒன்று” என்றாள். 7 அப்பொழுது அப்பிள்ளையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி: “உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய பெண்களில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா” என்றாள். 8 அதற்குப் பார்வோனுடைய மகள்: “அழைத்துக்கொண்டுவா” என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். 9 பார்வோனுடைய மகள் அவளை நோக்கி: “நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்காக வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன்” என்றாள். அந்தப் பெண், பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். 10 பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய மகளிடம் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் மகனானான். அவள்: “அவனை தண்ணீரிலிருந்து எடுத்தேன்” என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.
மோசே மீதியான் தேசத்திற்குத் தப்பியோடுதல்
11 மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, 12 அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான். 13 அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனிதர்கள் இருவர் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயம் செய்கிறவனை நோக்கி: “நீ உன்னுடைய தோழனை அடிக்கிறது ஏன்” என்று கேட்டான். 14 அதற்கு அவன்: “எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ” என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான். 15 பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய முயற்சித்தான். மோசே பார்வோனிடத்திலிருந்து தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு கிணற்றின் அருகில் உட்கார்ந்திருந்தான். 16 மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு மகள்கள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படி அங்கே வந்து, தண்ணீர் எடுத்து, தொட்டிகளை நிரப்பினார்கள். 17 அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்து, அவர்களுக்குத் துணை நின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். 18 அவர்கள் தங்களுடைய தகப்பனாகிய ரெகுவேலிடம் வந்தபோது, அவன்: “நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாக வந்தது ஏன்” என்று கேட்டான். 19 அதற்கு அவர்கள்: “எகிப்தியன் ஒருவன் மேய்ப்பர்களின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான்” என்றார்கள். 20 அப்பொழுது அவன் தன்னுடைய மகள்களைப் பார்த்து, “அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது ஏன்? சாப்பிடும்படி அவனை அழைத்துக்கொண்டு வாருங்கள்” என்றான். 21 மோசே அந்த மனிதனிடம் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன்னுடைய மகளை மோசேக்குக் கொடுத்தான். 22 அவள் ஒரு மகனைப் பெற்றாள். “நான் அந்நிய தேசத்தில் பரதேசியாக இருக்கிறேன்” என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்.
23 சிலகாலம் சென்றபின்பு, எகிப்தின் ராஜா இறந்தான். இஸ்ரவேலர்கள் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. 24 தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். 25 தேவன் இஸ்ரவேலர்களைப் பார்த்தார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.
Chapter 3
அத்தியாயம் 3
மோசேயும் எரிகிற முட்செடியும்
1 மோசே மீதியான் தேசத்தின் ஆசாரியனாக இருந்த தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தில் தூரமாக நடத்தி, தேவனுடைய மலையாகிய [1] ஓரேப்வரை வந்தான். 2 அங்கே யெகோவாவுடைய தூதன் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினித்தழலில் நின்று அவனுக்கு தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் பற்றி எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. 3 அப்பொழுது மோசே: “இந்த முட்செடி வெந்துபோகாமல் இருக்கிறது ஏன், நான் அருகில் போய் இந்த அற்புதக்காட்சியைப் பார்ப்பேன்” என்றான். 4 அவன் பார்க்கும்படி அருகில் வருகிறதைக் யெகோவா கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: “மோசே, மோசே” என்று கூப்பிட்டார். அவன்: “இதோ, அடியேன்” என்றான். 5 அப்பொழுது அவர்: “இங்கே அருகில் வராமல் இரு; உன்னுடைய கால்களில் இருக்கிற காலணியைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி” என்றார். 6 பின்னும் அவர்: “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாக இருக்கிறேன்” என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததால், தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டான். 7 அப்பொழுது யெகோவா: “எகிப்திலிருக்கிற என்னுடைய மக்களின் உபத்திரவத்தை நான் பார்த்து, மேற்பார்வையாளர்களால் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். 8 அவர்களை எகிப்தியர்களின் கைகளுக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்த தேசத்திலிருந்து நீக்கி, கானானியர்களும், ஏத்தியர்களும், எமோரியர்களும், பெரிசியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும் இருக்கிற இடமாகிய செழிப்பான நலமும் விசாலமுமான தேசத்தில் [2] கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். 9 இப்பொழுதும் இஸ்ரவேல் மக்களின் கூக்குரல் என்னுடைய சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். 10 நீ இஸ்ரவேல் மக்களாகிய என்னுடைய மக்களை எகிப்திலிருந்து அழைத்துவரும்படி உன்னை பார்வோனிடம் அனுப்புவேன் வா” என்றார். 11 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “பார்வோனிடம் போகவும், இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். 12 அதற்கு அவர்: “நான் உன்னோடு இருப்பேன்; நீ மக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின்பு, நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம்” என்றார்.
தேவனுடைய நாமம் வெளிப்படுத்தப்பட்டது
13 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: “நான் இஸ்ரவேலர்களிடம் போய், உங்கள் முன்னோர்களுடைய தேவன் உங்களிடம் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன்” என்றான். 14 அதற்கு தேவன்: “இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடன் சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று இஸ்ரவேலர்களுடன் சொல்” என்றார். 15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: “ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்று நீ இஸ்ரவேலர்களுக்கு சொல்; என்றைக்கும் இதுவே என்னுடைய நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என்றென்றைக்கும் என்னுடைய நாமம். 16 நீ போய், இஸ்ரவேலின் மூப்பர்களைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களுடைய தேவனாக இருக்கிற உங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா எனக்கு தரிசனமாகி, உங்களை நிச்சயமாக சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும், 17 நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்களுடைய தேசத்திற்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்று சொல். 18 அவர்கள் உன்னுடைய வார்த்தையை கேட்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பர்களும் எகிப்தின் ராஜாவினிடம் போய்: எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணம்போய், எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள். 19 ஆனாலும், எகிப்து ராஜா என்னுடைய கையின் வல்லமையைக் கண்டாலொழிய, உங்களைப் போகவிடமாட்டான் என்று நான் அறிவேன். 20 ஆகையால், நான் என்னுடைய கையை நீட்டி, எகிப்தின் நடுவில் நான் செய்யும் எல்லாவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின்பு அவன் உங்களைப் போகவிடுவான். 21 அப்பொழுது இந்த மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கச்செய்வேன்; நீங்கள் போகும்போது வெறுமையாகப் போவதில்லை. 22 ஒவ்வொரு பெண்ணும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியையும், பொன் நகைகளையும், ஆடைகளையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்களுடைய மகன்களுக்கும் உங்களுடைய மகள்களுக்கும் அணிவித்து, எகிப்தியர்களைக் கொள்ளையிடுவீர்கள்” என்றார்.
Chapter 4
அத்தியாயம் 4
தேவன் மோசேக்கு கொடுத்த அடையாளங்கள்
1 அப்பொழுது மோசே: “அவர்கள் என்னை நம்பமாட்டார்கள்; என்னுடைய வார்த்தையை கேட்கமாட்டார்கள்; யெகோவா உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள்” என்றான். 2 யெகோவா அவனை நோக்கி: “உன்னுடைய கையில் இருக்கிறது என்ன” என்றார். “ஒரு கோல்” என்றான். 3 “அதைத் தரையிலே போடு” என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது பாம்பாக மாறியது; மோசே அதற்கு விலகி ஓடினான். 4 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “உன்னுடைய கையை நீட்டி, அதின் வாலைப் பிடி” என்றார்; அவன் தன்னுடைய கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவனுடைய கையிலே கோலானது. 5 ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாக இருக்கிற தங்கள் முன்னோர்களுடைய தேவனாகிய யெகோவா உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். 6 மேலும், யெகோவா அவனை நோக்கி: “உன் கையை உன்னுடைய மடியிலே போடு” என்றார்; அவன் தன் கையைத் தன்னுடைய மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவனுடைய கை உறைந்த பனியைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. 7 அவர்: “உன்னுடைய கையைத் திரும்பவும் உன்னுடைய உன் மடியிலே போடு” என்றார். அவன் தன்னுடைய கையைத் திரும்பத் தன்னுடைய மடியிலே போட்டு, மீண்டும் வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலானது. 8 அப்பொழுது அவர்: “முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்காமலும்போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். 9 இந்த இரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன்னுடைய வார்த்தையைக் கேட்காமலும் இருந்தால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை எடுத்து நிலத்தில் ஊற்று; நதியில் எடுத்த தண்ணீர் காய்ந்த நிலத்தில் இரத்தமாகும்” என்றார். 10 அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “ஆண்டவரே, இதற்கு முன்பாவது, தேவரீர் உமது அடியேனோடு பேசினதற்குப் பின்பாவது நான் பேச்சில் வல்லவன் இல்லை; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்” என்றான். 11 அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “மனிதனுக்கு வாயை உண்டாக்கியவர் யார்? ஊமையனையும், செவிடனையும், பார்வையுள்ளவனையும், பார்வையற்றவனையும் உண்டாக்கினவர் யார்? யெகோவாவாகிய நான் அல்லவா? 12 ஆதலால், நீ போ; நான் உன்னுடைய வாயோடு இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” என்றார். 13 அதற்கு அவன்: “ஆண்டவரே. நீர் அனுப்ப விரும்புகிற யாரையாவது அனுப்பும்” என்றான். 14 அப்பொழுது யெகோவா மோசேயின்மேல் கோபப்பட்டு: “லேவியனாகிய ஆரோன் உன்னுடைய சகோதரன் அல்லவா? அவன் நன்றாக பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு வருகிறான்; உன்னைக் காணும்போது அவனுடைய இருதயம் மகிழும். 15 நீ அவனுடன் பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன்னுடைய வாயிலும் அவனுடைய வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்குக் காட்டுவேன். 16 அவன் உனக்குப் பதிலாக மக்களோடு பேசுவான்; இந்தவிதமாக அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்கு தேவனாக இருப்பாய். 17 இந்தக் கோலையும் உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய்” என்றார்.
மோசே எகிப்திற்குத் திரும்பினான்.
18 மோசே தன்னுடைய மாமனாகிய எத்திரோவிடம் வந்து: “நான் எகிப்திலிருக்கிற என்னுடைய சகோதரர்களிடத்திற்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்திரவு தரவேண்டும்” என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: “சுகமாகப் போய்வாரும்” என்றான். 19 பின்னும் யெகோவா மீதியானிலே மோசேயை நோக்கி: “நீ எகிப்திற்குத் திரும்பிப் போ, உன்னுடைய உயிரை எடுக்கத்தேடின மனிதர்கள் எல்லோரும் இறந்துபோனார்கள்” என்றார். 20 அப்பொழுது மோசே தன்னுடைய மனைவியையும் தன்னுடைய பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்திற்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு போனான். 21 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின்பு, நான் உன்னுடைய கையில் கொடுத்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாக செய்யும்படி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், நான் அவனுடைய இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் மக்களைப் போகவிடமாட்டான். 22 அப்பொழுது நீ பார்வோனோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய மகன், என்னுடைய மூத்தமகன். 23 எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மகனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்று சொன்னால் நான் உன்னுடைய மகனை, உன்னுடைய மூத்தமகனை கொல்லுவேன் என்று யெகோவா சொன்னார் என்று சொல்” என்றார். 24 வழியிலே தங்கும் இடத்தில் யெகோவா மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார். 25 அப்பொழுது சிப்போராள் ஒரு கூர்மையான கல்லை எடுத்து, தன் மகனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவனுடைய கால்களுக்கு [1] முன்பாக போட்டு: “நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள். 26 பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: “விருத்தசேதனத்தினால் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான கணவன்” என்றாள்.
27 ஆரோனை நோக்கி: “நீ வனாந்திரத்தில் மோசேயை சந்திக்கப்போ” என்றார். அவன் போய், தேவனுடைய மலையில் அவனைச் சந்தித்து, அவனை முத்தமிட்டான். 28 அப்பொழுது மோசே தன்னை அனுப்பின யெகோவாவுடைய எல்லா வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட எல்லா அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான். 29 மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேலர்களுடைய மூப்பர்கள் எல்லோரையும் கூடிவரச் செய்தார்கள். 30 யெகோவா மோசேக்குச் சொல்லிய எல்லா வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, மக்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான். 31 மக்கள் விசுவாசித்தார்கள்; யெகோவா இஸ்ரவேலர்களைச் சந்தித்தார் என்றும், அவர்களுடைய உபத்திரவங்களைக் கண்ணோக்கிப் பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்து தொழுதுகொண்டார்கள்.
Chapter 5
அத்தியாயம் 5
பார்வோனின் முன்னே மோசேயும் ஆரோனும்
1 பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய்: “இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா வனாந்திரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என்னுடைய மக்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார்” என்றார்கள். 2 அதற்குப் பார்வோன்: “நான் இஸ்ரவேலைப் போகவிடக் யெகோவாவின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? எனக்கு யெகோவாவை தெரியாது; நான் இஸ்ரவேலைப் போகவிடமாட்டேன்” என்றான். 3 அப்பொழுது அவர்கள்: “எபிரெயர்களுடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்திரத்தில் மூன்றுநாட்கள் பயணமாக போய், எங்கள் தேவனாகிய யெகோவாவிற்கு பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாமலிருந்தால், அவர் கொள்ளைநோயையும், பட்டயத்தையும் எங்கள்மேல் வரச்செய்வார்” என்றார்கள். 4 எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: “மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் மக்களைத் தங்களுடைய வேலைகளைவிட்டுக் கலையச்செய்கிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள்” என்றான். 5 பின்னும் பார்வோன்: “இதோ, தேசத்தில் மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதைவிட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே” என்றான். 6 அன்றியும், அந்த நாளிலே பார்வோன் மக்களின் மேற்பார்வையாளர்களையும் அவர்களுடைய தலைவர்களையும் நோக்கி: 7 “செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி மக்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும். 8 அவர்கள் முன்பு செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்களுடைய தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள். 9 அந்த மனிதர்கள்மேல் முன்பைவிட அதிக வேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; அவர்கள் வீண்வார்த்தைகளைக் கேட்கவிடாதீர்கள்” என்று கட்டளையிட்டான். 10 அப்பொழுது மக்களின் மேற்பார்வையாளர்களும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப்போய் மக்களை நோக்கி: “உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை; 11 நீங்களே போய் உங்களுக்கு கிடைக்கிற இடங்களில் வைக்கோல் சேகரியுங்கள்; ஆனாலும் உங்களுடைய வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார்” என்றார்கள். 12 அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாக அதின் தாளடிகளைச் சேர்க்கும்படி மக்கள் எகிப்துதேசம் எங்கும் அலைந்து திரிந்தார்கள். 13 மேற்பார்வையாளர்கள் அவர்களை நோக்கி: வைக்கோல் இருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் அவசரப்படுத்தினார்கள். 14 பார்வோனுடைய மேற்பார்வையாளர்கள் இஸ்ரவேலர்கள் மேல்வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: “செங்கல் வேலையில் நீங்கள் முன்பு செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை” என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள். 15 அப்பொழுது இஸ்ரவேலர்களின் தலைவர்கள் பார்வோனிடம் போய் கூக்குரலிட்டு: “உமது அடியார்களுக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன? 16 உமது அடியார்களுக்கு வைக்கோல் கொடுக்காமல் இருந்தும், செங்கல் அறுக்கவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய மக்களிடம் குற்றம் இருக்க, உமது அடியார்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்” என்றார்கள். 17 அதற்கு அவன்: “நீங்கள் சோம்பேறிகளாக இருக்கிறீர்கள்; அதினால்தான் போகவேண்டும், யெகோவாவுக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள். 18 போய், வேலை செய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை அறுத்துக் கொடுக்கவேண்டும்” என்றான். 19 நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுக்கவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கக்கூடாது என்று சொல்லப்பட்டதால், இஸ்ரவேலர்களின் தலைவர்கள் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள். 20 அவர்கள் பார்வோனுடைய சமுகத்தை விட்டுப் புறப்படும்போது, வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு, 21 அவர்களை நோக்கி: “நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் எங்களுடைய வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்களுடைய கையிலே பட்டயத்தைக் கொடுத்ததால், யெகோவா உங்களைப் பார்த்து நியாயம் தீர்க்கக்கடவர்” என்றார்கள். 22 அப்பொழுது மோசே யெகோவாவிடம் திரும்பிப்போய்: “ஆண்டவரே, இந்த மக்களுக்குத் தீங்குவரச்செய்ததென்ன? ஏன் என்னை அனுப்பினீர்? 23 நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடம் சென்றதுமுதல் அவன் இந்த மக்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய மக்களை விடுதலையாக்கவில்லையே” என்றான்.
Chapter 6
அத்தியாயம் 6
யெகோவாவின் விடுதலை வாக்குத்தத்தம்
1 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; என் வலிமையான கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, அவர்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து துரத்திவிடுவான்” என்றார்.
2 மேலும், தேவன் மோசேயை நோக்கி: “நான் யேகோவா, 3 சர்வவல்லமையுள்ள [1] தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என்னுடைய நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. 4 அவர்கள் பரதேசிகளாகத் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடு என்னுடைய உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன். 5 எகிப்தியர்கள் அடிமையாக வைத்திருக்கிற இஸ்ரவேலர்களின் பெருமூச்சையும் நான் கேட்டு, என்னுடைய உடன்படிக்கையை நினைத்தேன். 6 ஆதலால், இஸ்ரவேலர்களை நோக்கி: நானே யெகோவா, உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு, நீங்கலாக்கி, பலத்த கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, 7 உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள். 8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; நான் யெகோவா என்று அவர்களுக்குச் சொல் என்றார். 9 இப்படியாக மோசே இஸ்ரவேலர்களுக்குச் சொன்னான்; அவர்களோ மனவருத்தத்தாலும் கொடுமையான வேலையாலும் மோசேயின் வார்த்தைகளை கேட்காமற்போனார்கள். 10 பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: 11 “நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடம் போய், அவன் தன்னுடைய தேசத்திலிருந்து இஸ்ரவேல் மக்களைப் போகவிடும்படி அவனுடன் பேசு” என்றார். 12 மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில் நின்று, “இஸ்ரவேலர்களே நான் சொல்வதைக் கேட்கவில்லை; பார்வோன் எப்படி நான் சொல்வதைக் கேட்பான்? நான் திக்கு வாயுள்ளவன்” என்றான்.
ஆரோன், மோசேயின் வம்சவரலாறு
13 யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேலர்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படி, அவர்களை இஸ்ரவேலர்களிடத்திற்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்திற்கும் கட்டளைக் கொடுத்து அனுப்பினார்.
14 அவர்களுடைய தகப்பன்மார்களுடைய வீட்டார்களின் தலைவர்கள் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்தவனாகிய ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்கள். 15 சிமியோனின் மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே. 16 வம்சப்பட்டியலின்படி பிறந்த லேவியின் மகன்களுடைய பெயர்கள், கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான். 17 அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் மகன்கள் லிப்னி, சீமேயி என்பவர்கள். 18 கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்றுமுப்பத்துமூன்று வருடங்கள் உயிரோடு இருந்தான். 19 மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர்கள் இவர்களே. 20 அம்ராம் தன்னுடைய அத்தையாகிய யோகெபேத்தைத் திருமணம் செய்தான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருடங்கள் உயிரோடு இருந்தான். 21 இத்சேயாரின் மகன்கள் கோராகு, நெப்பேக், சிக்ரி என்பவர்கள். 22 ஊசியேலின் மகன்கள் மீசாயேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள். 23 ஆரோன் அம்மினதாபின் மகளும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை திருமணம் செய்தான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலெயசரையும், இத்தாமாரையும் பெற்றாள். 24 கோராகின் மகன்கள் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியர்களின் வம்சத்தலைவர்கள் இவர்களே. 25 ஆரோனின் மகனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்தான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியர்களுடைய தகப்பன்மார்களாகிய தலைவர்கள் இவர்களே. 26 இஸ்ரவேலர்களை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குக் யெகோவால் கட்டளை” பெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே. 27 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடு பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே.
மோசேக்காக ஆரோன் பேசுதல்
28 யெகோவா எகிப்துதேசத்தில் மோசேயோடு பேசின நாளில்; 29 யெகோவா மோசேயை நோக்கி: “நானே யெகோவா; நான் உன்னோடு சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல்” என்று சொன்னபோது, 30 மோசே யெகோவாவுடைய சந்நிதானத்தில்: “நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எப்படி என்னுடைய சொல்லைக் கேட்பான் என்றான்.
Chapter 7
அத்தியாயம் 7
ஆரோனுடைய கோல் பாம்பாக மாறுதல்
1 யெகோவா மோசேயை நோக்கி: “பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன்னுடைய தீர்க்கதரிசியாக இருப்பான். 2 நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் அவனிடம் பேசவேண்டும். 3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்துதேசத்தில் என்னுடைய அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாக நடப்பிப்பேன். 4 பார்வோன் உங்களுடைய சொல்லைக்கேட்கமாட்டான்; ஆகையால் எகிப்திற்கு விரோதமாக நான் என்னுடைய கையை நீட்டி, கொடிய தண்டனையினால் என்னுடைய சேனைகளும் என்னுடைய மக்களுமாகிய இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்வேன். 5 நான் எகிப்தின்மேல் என்னுடைய கையை நீட்டி, இஸ்ரவேலர்களை அவர்கள் நடுவிலிருந்து புறப்படச்செய்யும்போது, நானே யெகோவா என்று எகிப்தியர்கள் அறிவார்கள்” என்றார். 6 மோசேயும் ஆரோனும் யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 7 அவர்கள் பார்வோனோடு பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாக இருந்தது.
ஆரோனுடைய கோல் பாம்பாக மாறியது.
8 யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 9 “உங்களை ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடு சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன்னுடைய கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது பாம்பாகும்” என்றார். 10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், யெகோவா தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களுக்கு முன்பாகவும் தன்னுடைய கோலைப் போட்டான், அது பாம்பானது. 11 அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். 12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் பாம்புகளாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கியது. 13 யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.
1 வது வாதை-இரத்தமாகிய வாதை
14 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “பார்வோனின் இருதயம் கடினமானது; மக்களை விடமாட்டேன் என்கிறான். 15 காலையில் நீ பார்வோனிடம் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்தில் நின்று, பாம்பாக மாறின கோலை உன்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, 16 அவனை நோக்கி: வனாந்திரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இது வரைக்கும் நீர் கேட்காமற்போனீர். 17 இதோ, என்னுடைய கையில் இருக்கிற கோலால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாக மாறி, 18 நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போகும்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர்கள் குடிக்கமுடியாமல் அருவருப்பார்கள்; இதினால் நானே யெகோவா என்பதை அறிந்துகொள்வாய் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார். 19 மேலும், யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனிடம் உன்னுடைய கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படி, உன்னுடைய கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாகும் என்று சொல்” என்றார். 20 யெகோவா கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவனுடைய வேலைக்காரர்களின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாக மாறியது. 21 நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போனது; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியர்களுக்கு முடியாமற்போனது; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாக இருந்தது. 22 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான். 23 பார்வோன் இதையும் சிந்திக்காமல், தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப்போனான். 24 நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர்கள் எல்லோரும் நதியோரத்தில் ஊற்று தோண்டினார்கள். 25 யெகோவா நதியை அடித்து ஏழுநாட்கள் ஆனது.
Chapter 8
அத்தியாயம் 8
2 வது-தவளைகளின் வாதை
1 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: “எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு. 2 நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்று சொன்னால், உன்னுடைய எல்லை முழுவதும் தவளைகளால் வாதிப்பேன். 3 நதி தவளைகளைத் திரளாக பிறப்பிக்கும்; அவைகள் உன்னுடைய வீட்டிலும் படுக்கை அறையிலும், படுக்கையின்மேலும், வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், மக்களிடத்திலும், அடுப்புகளிலும், மாவுபிசைகிற உன்னுடைய பாத்திரங்களிலும் வந்து ஏறும். 4 அந்தத் தவளைகள் உன்மேலும், உன்னுடைய மக்கள்மேலும், வேலைக்காரர்கள் எல்லோர்மேலும் வந்து ஏறும் என்று யெகோவா சொல்லுகிறார் என்று சொல்” என்றார். 5 மேலும் யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி:” நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல்” என்றார். 6 அப்படியே ஆரோன் தன்னுடைய கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது. 7 மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரச்செய்தார்கள். 8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “அந்தத் தவளைகள் என்னையும் என்னுடைய மக்களையும்விட்டு நீங்கும்படி யெகோவாவை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; யெகோவாவுக்குப் பலியிடும்படி மக்களைப் போகவிடுவேன்” என்றான். 9 அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: “தவளைகள் நதியிலே மட்டும் இருக்கும்படி அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிச் செய்ய, உமக்காகவும் உம்முடைய வேலைக்காரர்களுக்காகவும் உம்முடைய மக்களுக்காகவும் நான் விண்ணப்பம் செய்யவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக” என்றான். 10 அதற்கு அவன்: “நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: “எங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படி உம்முடைய வார்த்தையின்படி ஆகட்டும். 11 தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய வேலைக்காரர்களையும், உம்முடைய மக்களையும்விட்டு நீங்கி, நதியிலே மட்டும் இருக்கும்” என்றான். 12 மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு எதிராக வரச்செய்த தவளைகளினால் மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான். 13 யெகோவா மோசேயின் சொற்படிச் செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போனது. 14 அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது. 15 இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்; யெகோவா சொல்லியிருந்தபடியே ஆனது.
3 வது-பேன்களின் வாதை
16 அப்பொழுது யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி: “உன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் முழுவதும் பேன்களாகப்போகும் என்று சொல்” என்றார். 17 அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன்னுடைய கையில் இருந்த தன்னுடைய கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்கள்மேலும், மிருகஜீவன்கள்மேலும், எகிப்து தேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களானது. 18 மந்திரவாதிகளும் தங்களுடைய மந்திரவித்தையினால் பேன்களை உருவாக்கும்படி முயற்சிசெய்தார்கள்; அப்படிச்செய்தும், அவர்களால் முடியாமற்போனது; பேன்கள் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது. 19 அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: “இது தேவனுடைய விரல்” என்றார்கள். ஆனாலும், யெகோவா சொல்லிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய சொல்லைக் கேட்காமற்போனான்.
4. வது-வண்டுகளின் வாதை
20 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நாளை அதிகாலையில் நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என்னுடைய மக்களைப் போகவிடு. 21 என்னுடைய மக்களைப் போகவிடாமல் இருந்தால், நான் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், மக்கள்மேலும், வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர்களுடைய வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும். 22 பூமியின் நடுவில் நானே யெகோவா என்பதை நீ அறியும்படி என்னுடைய மக்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்த நாட்களிலே வண்டுகள் வராதபடி, அந்த நாட்டை தனிப்படுத்தி, 23 என்னுடைய மக்களுக்கும் உன்னுடைய மக்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று யெகோவா சொல்லுகிறார்” என்று சொல் என்றார். 24 அப்படியே யெகோவா செய்தார்; வெகு திரளான வண்டுவகைகள் பார்வோனுடைய வீட்டிலும், அவனுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போனது. 25 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு இந்த தேசத்திலேயே பலியிடுங்கள்” என்றான். 26 அதற்கு மோசே: “அப்படிச் செய்யக்கூடாது; எங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு நாங்கள் எகிப்தியர்களுடைய அருவருப்பைப் பலியிடுகிறதாக இருக்குமே, எகிப்தியர்களுடைய அருவருப்பை நாங்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா? 27 நாங்கள் வனாந்திரத்தில் மூன்று நாட்கள் பயணமாக போய், எங்களுடைய தேவனாகிய யெகோவா எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம்” என்றான். 28 அப்பொழுது பார்வோன்: “நீங்கள் உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு வனாந்திரத்தில் பலியிடும்படி, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாகப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள்” என்றான். 29 அதற்கு மோசே: “நான் உம்மைவிட்டுப் புறப்பட்டபின்பு, நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவருடைய வேலைக்காரர்களையும் அவருடைய மக்களையும் விட்டு நீங்கும்படி, நான் யெகோவாவை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், யெகோவாவுக்குப் பலியிடுகிறதற்கு மக்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி ஏமாற்றாதிருப்பாராக” என்றான். 30 மோசே பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், யெகோவா நோக்கி வேண்டுதல் செய்தான். 31 அப்பொழுது யெகோவா மோசேயின் சொற்படி, வண்டுவகைகள் பார்வோனையும் அவனுடைய வேலைக்காரர்களையும், மக்களையும்விட்டு நீங்கும்படிச் செய்தார்; ஒன்றுகூட மீதியாக இருக்கவில்லை. 32 பார்வோனோ, இந்த முறையும் தன்னுடைய இருதயத்தைக் கடினப்படுத்தி, மக்களைப் போகவிடாமல் இருந்தான்.
Chapter 9
அத்தியாயம் 9
5 வது-ஆடு மாடுகளின் மீதான வாதை
1 பின்பு, யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு. 2 நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்திருந்தால், 3 யெகோவாவுடைய கரம் வெளியில் இருக்கிற உன்னுடைய மிருகங்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; பெரிய கொடியதான கொள்ளை நோய் உண்டாகும். 4 யெகோவா இஸ்ரவேலின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியர்களின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்துவார்; இஸ்ரவேலுக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை” என்றார். 5 மேலும், நாளைக்குக் யெகோவா இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, யெகோவா ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயர்களுடைய தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றும் அவனிடம் சொல் என்றார். 6 மறுநாளில் யெகோவா அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியர்களுடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போனது; இஸ்ரவேலர்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை. 7 பார்வோன் விசாரித்து, இஸ்ரவேல் மக்களின் மிருகஜீவன்களில் ஒன்றுகூட சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் மக்களைப் போகவிடவில்லை.
6 வது-கொடியகொப்புளங்களின் வாதை
8 அப்பொழுது யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “உங்கள் கைப்பிடி அளவு சூளையின் சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன்பு வானத்திற்கு நேராக தூவட்டும். 9 அது எகிப்து தேசம் முழுவதும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பச்செய்யும்” என்றார். 10 அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்திற்கு நேராக தூவினான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வந்தது. 11 அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர்கள் எல்லோர்மேலும் உண்டானதால், அந்தக் கொப்புளங்களினால் மந்திரவாதிகளால் மோசேக்கு முன்பாக நிற்கமுடியாமல் இருந்தது. 12 ஆனாலும், யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தபடியே, யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்கவில்லை.
7 வது-கல்மழையின் வாதை
13 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ அதிகாலையில் எழுந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களை அனுப்பிவிடு. 14 விடாமல் இருந்தால், பூமியெங்கும் என்னைப்போல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படி, இந்தமுறை நான் எல்லாவித வாதைகளையும் உன்மேலும், உன்னுடைய வேலைக்காரர்கள்மேலும், உன்னுடைய மக்கள்மேலும் அனுப்புவேன். 15 நீ பூமியில் இல்லாமல் நாசமாகப்போகும்படி நான் என்னுடைய கையை நீட்டி, உன்னையும் உன்னுடைய மக்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன். 16 என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிக்கும்படியும், என்னுடைய நாமம் பூமி முழுவதும் பிரபலமாகும்படியும் உன்னை நிலைநிறுத்தினேன். 17 நீ என்னுடைய மக்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாக உன்னை உயர்த்துகிறாயா? 18 எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்த நேரத்தில் பெய்யச்செய்வேன். 19 இப்பொழுதே ஆள் அனுப்பி, உன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டில் சேர்த்துக்கொள்ளாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகும்படி அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்” என்றார். 20 பார்வோனுடைய வேலைக்காரர்களில் எவன் யெகோவாவுடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரச்செய்தான். 21 எவன் யெகோவாவுடைய வார்த்தையை மதிக்காமல்போனானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
22 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசம் எங்கும் மனிதர்கள்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற எல்லாவிதமான பயிர் வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். 23 அப்படியே மோசே தன்னுடைய கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது யெகோவா இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாக ஓடியது; எகிப்து தேசத்தின்மேல் யெகோவா கல்மழையைப் பெய்யச்செய்தார்; 24 கல்மழையும் கல்மழையோடு கலந்த அக்கினியும் மிகவும் கொடியதாக இருந்தது; எகிப்து தேசம் தோன்றிய நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை. 25 எகிப்து தேசம் எங்கும் மனிதர்களையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. 26 இஸ்ரவேலர்கள் இருந்த கோசேன் நாட்டில் மட்டும் கல்மழை பெய்யாமல் இருந்தது. 27 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நான் இந்தமுறை பாவம் செய்தேன்; யெகோவா நீதியுள்ளவர்; நானும் என்னுடைய மக்களும் துன்மார்க்கர்கள். 28 இது போதும்; இந்தப் பெரிய இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படி, யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்யுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை” என்றான். 29 மோசே அவனை நோக்கி: “நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடன், என்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோகும்; அதினால் பூமி யெகோவாவுடையது என்பதை நீர் அறிவீர். 30 இருந்தாலும் நீரும் உம்முடைய வேலைக்காரர்களும் இன்னும் தேவனாகிய யெகோவாவுக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன்” என்றான். 31 அப்பொழுது வாற்கோதுமை கதிர்விட்டும் கொள்ளுப்பயிரானது பூ பூத்திருந்தது; அதினால் கொள்ளும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போனது. 32 கோதுமையும் கம்பும் கதிர்விடாமல் இருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை. 33 மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன்னுடைய கைகளைக் யெகோவாவுக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமல் இருந்தது. 34 மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதை பார்வோன் கண்டபோது, அவனும் அவனுடைய வேலைக்காரர்களும் பின்னும் பாவம்செய்து, தங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். 35 யெகோவா மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் மக்களைப் போகவிடவில்லை.
Chapter 10
அத்தியாயம் 10
8 வது வாதை-வெட்டுகிளிகளின் வாதை
1 பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “நீ பார்வோனிடம் போ, அவர்களின் நடுவே நான் என்னுடைய இந்த அடையாளங்களைச் செய்யும்படி, 2 நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என்னுடைய அடையாளங்களையும், நீ உன்னுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும், உன்னுடைய பிள்ளைகளுடைய பிள்ளைகளின் காதுகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படியும், நானே யெகோவா என்பதை நீங்கள் அறியும்படியும், நான் அவனுடைய இருதயத்தையும் அவனுடைய வேலைக்காரர்களின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன்” என்றார். 3 அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து: “நீ எதுவரைக்கும் உன்னைத் தாழ்த்த மனமில்லாமல் இருப்பாய்? என்னுடைய சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என்னுடைய மக்களைப் போகவிடு. 4 நீ என்னுடைய மக்களைப் போகவிடமாட்டேன் என்று சொன்னால், நான் நாளைக்கு உன்னுடைய எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரச்செய்வேன். 5 தரையை காணமுடியாதபடி அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைச் சாப்பிட்டு, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும். 6 உன்னுடைய வீடுகளும் உன்னுடைய வேலைக்காரர்களுடைய வீடுகளும் எகிப்தியர்களின் வீடுகளும் அவைகளால் நிரம்பும்; உன்னுடைய தகப்பன்களும் உன்னுடைய தகப்பன்களின் தகப்பன்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்த நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயர்களின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்” என்று சொல்லி, திரும்பி பார்வோனை விட்டுப் புறப்பட்டான். 7 அப்பொழுது பார்வோனுடைய வேலைக்காரர்கள் அவனை நோக்கி: “எதுவரைக்கும் இந்த மனிதன் நமக்குத் தொல்லை கொடுக்கிறவனாக இருப்பான்? தங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதர்களைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா” என்றார்கள். 8 அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: “நீங்கள் போய் உங்கள் தேவனாகிய யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி, யார் யார் போகிறார்கள்” என்று கேட்டான். 9 அதற்கு மோசே: “எங்களுடைய வாலிபர்களோடும், எங்களுடைய முதியோர்களோடும், எங்களுடைய மகன்களோடும், எங்களுடைய மகள்களோடும், எங்களுடைய ஆடுகளையும், எங்களுடைய மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்” என்றான். 10 அப்பொழுது அவன்: “நான் உங்களையும் உங்களுடைய குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே யெகோவா உங்களுடன் இருப்பாராக; எச்சரிக்கையாக இருங்கள், உங்களுக்கு தீங்குநேரிடும்; 11 அப்படி வேண்டாம்; ஆண்களாகிய நீங்கள் போய், யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது” என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்திலிருந்து துரத்திவிடப்பட்டார்கள்.
12 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து கல்மழையால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் சாப்பிடும்படி, எகிப்து தேசத்தின்மேல் உன்னுடைய கையை நீட்டு” என்றார். 13 அப்படியே மோசே தன்னுடைய கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா அன்று பகல் முழுவதும், அன்று இரவுமுழுவதும் கிழக்குக்காற்றை தேசத்தின்மேல் வீசச்செய்தார்; அதிகாலையில் கிழக்குக்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. 14 வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாக இறங்கியது; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்கு முன்பு இருந்ததும் இல்லை, அதற்குப்பின்பு இருப்பதும் இல்லை. 15 அவைகள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் மூடியது; தேசம் அவைகளால் இருளடைந்தது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் எல்லாவற்றையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் சாப்பிட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையைக் கூட மீதியாக வைக்கவில்லை. 16 அப்பொழுது பார்வோன் மோசேயையும், ஆரோனையும் விரைவாக அழைத்து: “உங்களுடைய தேவனாகிய யெகோவாவுக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன். 17 இந்த ஒருமுறைமட்டும் நீ என்னுடைய பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்களுடைய தேவனாகிய யெகோவா இந்த மரணத்தைமட்டும் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்செய்யுங்கள்” என்றான். 18 அவன் பார்வோனைவிட்டுப் புறப்பட்டுப்போய், யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்தான். 19 அப்பொழுது யெகோவா மகா பலத்த மேற்குக்காற்றை வீசும்படிச் செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளிகூட மீதியாக இருக்கவில்லை. 20 யெகோவாவோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் போகவிடவில்லை.
9 வது வாதை-காரிருள் வாதை.
21 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “தடவிக்கொண்டிருக்கும்படியான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படி, உன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டு” என்றார். 22 மோசே தன்னுடைய கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாட்கள்வரை காரிருள் உண்டானது. 23 மூன்றுநாட்கள்வரை ஒருவரையொருவர் பார்க்கவும் இல்லை, ஒருவரும் தம்முடைய இடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேலர்கள் எல்லோருக்கும் அவர்கள் வாழ்ந்த இடத்திலே வெளிச்சம் இருந்தது. 24 அப்பொழுது பார்வோன் மோசேயை அழைத்து; “நீங்கள் போய்க் யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்களுடைய ஆடுகளும் உங்களுடைய மாடுகளும் மட்டும் நிறுத்தப்படவேண்டும்; உங்களுடைய குழந்தைகள் உங்களுடன் போகலாம்” என்றான். 25 அதற்கு மோசே: “நாங்கள் எங்களுடைய தேவனாகிய யெகோவாவிற்கு செலுத்தும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்களுடைய கையிலே கொடுக்கவேண்டும். 26 எங்களுடைய மிருகஜீவன்களும் எங்களுடன் வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்களுடைய தேவனாகிய யெகோவாவிற்கு ஆராதனை செய்வதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு யெகோவாவுக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேரும்வரை எங்களுக்குத் தெரியாது” என்றான். 27 யெகோவா பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாமல் இருந்தான். 28 பார்வோன் அவனை நோக்கி: “என்னைவிட்டு அந்தப்பக்கம் போ; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்காதபடி எச்சரிக்கையாக இரு; நீ இனி என்னுடைய முகத்தைப் பார்க்கும் நாளில் சாவாய்” என்றான். 29 அப்பொழுது மோசே: “நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைப் பார்க்கமாட்டேன்” என்றான்.
Chapter 11
அத்தியாயம் 11
10 வது-தலைப்பிள்ளைகளின் மரண வாதை
1 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரச்செய்வேன்; அதற்குப்பின்பு அவன் உங்களை இந்த இடத்திலிருந்து போகவிடுவான்; முழுவதுமாக உங்களைப் போகவிடுவதும் மட்டுமின்றி, உங்களை இந்த இடத்திலிருந்து துரத்தியும் விடுவான். 2 இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி மக்களுக்குச் சொல்” என்றார். 3 அப்படியே யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரர்களின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாக இருந்தான்.
4 அப்பொழுது மோசே: “யெகோவா உரைக்கிறதாவது, நடு இரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன். 5 அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி, 6 அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும். 7 ஆனாலும் யெகோவா எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாவை அசைப்பதில்லை. 8 அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன்” என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.
9 யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்” என்று சொல்லியிருந்தார். 10 மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை.
Chapter 12
அத்தியாயம் 12
முதல் பஸ்கா பண்டிகை
1 யெகோவா எகிப்து தேசத்தில் மோசேயையும், ஆரோனையும் நோக்கி: 2 “இந்த மாதம் உங்களுக்கு துவக்கமாதம்; இது உங்களுக்கு வருடத்தின் முதலாம் மாதமாக இருப்பதாக. 3 நீங்கள் இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளட்டும். 4 ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் சாப்பிடுவதற்குப் போதுமானவர்களாக இல்லாமற்போனால், அவனும் அவன் அருகிலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள நபர்களின் எண்ணிக்கைக்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் சாப்பிடத்தக்கதாக எண்ணிக்கைபார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். 5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுடையதுமாக இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலோ வெள்ளாடுகளிலோ அதைத் தெரிந்துகொள்ளலாம். 6 அதை இந்த மாதம் பதினான்காம்தேதிவரையும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தார்களும் மாலையில் அதை அடித்து, 7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைச் சாப்பிடும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, 8 அன்று இரவிலே அதின் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைச் சாப்பிடட்டும். 9 பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள எல்லாவற்றையும் ஒன்றாக நெருப்பினால் சுட்டதாக அதைச் சாப்பிடுங்கள். 10 அதிலே ஒன்றையும் காலைவரை மீதியாக வைக்காமல், காலைவரை அதிலே மீதியாக இருப்பதை அக்கினியால் சுட்டெரியுங்கள். 11 அதைச் சாப்பிடவேண்டிய முறையாவது, நீங்கள் உங்களுடைய இடுப்பில் கச்சையைக் கட்டிக்கொண்டும், உங்களுடைய கால்களில் காலணியை அணிந்துகொண்டும், உங்களுடைய கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை விரைவாக சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய பஸ்கா. [1] 12 அந்த இரவிலே நான் எகிப்து தேசம் எங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள்வரை, முதலில் பிறந்திருக்கிறவைகளையெல்லாம் நாசம்செய்து, எகிப்து தெய்வங்களின்மேல் நீதியைச் செலுத்துவேன் [2] ; நானே யெகோவா. 13 நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாக இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராமல் இருக்கும். 14 அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாக இருக்கட்டும்; அதைக் யெகோவாவுக்குப் பண்டிகையாக அனுசரியுங்கள்; அதை உங்களுடைய தலைமுறைதோறும் நிரந்தர கட்டளையாக அனுசரிக்கவேண்டும். 15 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடுவீர்களாக; முதலாம் நாளிலே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம்நாள்துவங்கி ஏழாம் நாள்வரையும் புளித்த அப்பம் சாப்பிடுகிறவன் எவனோ அவன் இஸ்ரவேலர்களிலிருந்து துண்டிக்கப்படுவான். 16 முதலாம் நாளில் பரிசுத்த சபைகூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யக்கூடாது; அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதுமட்டும் உங்களால் செய்யப்படலாம். 17 புளிப்பில்லா அப்பப்பண்டிகையை அனுசரியுங்கள்; இந்த நாளில்தான் நான் உங்களுடைய சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரக் கட்டளையாக இந்த நாளை அனுசரிக்கவேண்டும். 18 முதலாம் மாதம் பதினான்காம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுவீர்களாக. 19 ஏழுநாட்கள்வரை உங்களுடைய வீடுகளில் புளித்தமாவு காணப்படக்கூடாது; எவனாவது புளிப்பிடப்பட்டதைச் சாப்பிட்டால், அவன் அந்நியனானாலும் சொந்த தேசப் பிறப்பானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இல்லாமல் துண்டிக்கப்படுவான். 20 புளிப்பிடப்பட்ட எதையும் நீங்கள் சாப்பிடவேண்டாம்; நீங்கள் தங்குமிடங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் சாப்பிடுங்கள் என்று சொல்” என்றார்.
பஸ்கா பண்டிகை கொண்டாடுதல்
21 அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரையும் அழைத்து: “நீங்கள் உங்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்தபடி உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, 22 ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணத்தில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; அதிகாலைவரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். 23 யெகோவா எகிப்தியர்களை நாசம் செய்வதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, யெகோவா அழிக்கிறவனை உங்களுடைய வீடுகளில் உங்களை நாசம் செய்வதற்கு வரவிடாமல், வாசற்படியிலிருந்து விலகிக் கடந்துபோவார். 24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்களுடைய பிள்ளைகளுக்கும் நிரந்தர கட்டளையாகக் கைக்கொள்ளுங்கள். 25 யெகோவா உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளுங்கள். 26 அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், 27 இது யெகோவாவுடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியர்களை நாசம் செய்து, நம்முடைய வீடுகளைத் தப்பிக்கச்செய்தபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும்” என்றான். அப்பொழுது மக்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள். 28 இஸ்ரவேலர்கள் போய் அப்படியே செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
29 நடுஇரவிலே சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் யெகோவா அழித்தார். 30 அப்பொழுது பார்வோனும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களும் எகிப்தியர்கள் அனைவரும் இரவிலே எழுந்தார்கள்; கொடிய கூக்குரல் எகிப்திலே உண்டானது; சாவு இல்லாத ஒரு வீடும் இல்லை.
கானானுக்கான பயணம்: ராமசேசைவிட்டுக் சுக்கோத்திற்குப் போனார்கள்
31 இரவிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைத்து: “நீங்களும் இஸ்ரவேலர்களும் எழுந்து, என்னுடைய மக்களைவிட்டுப் புறப்பட்டுப் போய், நீங்கள் சொன்னபடியே யெகோவாவுக்கு ஆராதனை செய்யுங்கள். 32 நீங்கள் சொன்னபடியே உங்களுடைய ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்றான். 33 எகிப்தியர்கள்: “நாங்கள் எல்லோரும் சாகிறோமே” என்று சொல்லி, விரைவாக அந்த மக்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் அவசரப்படுத்தினார்கள். 34 பிசைந்தமாவு புளிப்பதற்குமுன்பு மக்கள் அதைப் பாத்திரத்துடன் தங்களுடைய ஆடைகளில் கட்டி, தங்களுடைய தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள். 35 மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் மக்கள் எகிப்தியர்களிடம் வெள்ளி நகைகளையும் பொன் நகைகளையும் ஆடைகளையும் கேட்டார்கள். 36 யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தவிதமாக அவர்கள் எகிப்தியர்களைக் கொள்ளையிட்டார்கள்.
37 இஸ்ரவேலர்கள் ராமசேசைவிட்டுக் கால்நடையாகப் பயணம்செய்து, சுக்கோத்திற்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள் தவிர ஆறுலட்சம் ஆண்களாக இருந்தார்கள். 38 அவர்களுடன் கூடப் பல இஸ்ரவேலர்கள் அல்லாத மக்கள் அநேகர் போனதுமட்டுமல்லால், திரளான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போனது. 39 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லாத அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் இருக்கமுடியாதபடி துரத்திவிடப்பட்டதால், அது புளிக்காமல் இருந்தது; அவர்கள் தங்களுடைய பயணத்திற்கென்று ஒன்றும் ஆயத்தம்செய்யவில்லை. 40 இஸ்ரவேலர்கள் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருடங்கள். 41 நானூற்றுமுப்பது வருடங்கள் முடிந்த அன்றைய நாளே யெகோவாவுடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. 42 யெகோவா அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்ததால், இது அவருக்கென்று முக்கியமாக அனுசரிக்கத்தக்க இரவானது; இஸ்ரவேல் சந்ததியார் எல்லோரும் தங்கள் தலைமுறைதோறும் யெகோவாவுக்கு முக்கியமாக அனுசரிக்கவேண்டிய இரவு இதுவே.
பஸ்கா அனுசரிப்பதற்கான கட்டளைகள்
43 மேலும், யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி: “பஸ்காவின் கட்டளையாவது, அந்நியனில் ஒருவனும் அதை சாப்பிடவேண்டாம். 44 பணத்தினால் வாங்கப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம் செய்தபின்பு, அவன் அதைச் சாப்பிடலாம். 45 அந்நியனும் கூலியாளும் அதிலே சாப்பிடவேண்டாம். 46 அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சாப்பிடவேண்டும்; அந்த இறைச்சியில் கொஞ்சம்கூட வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. 47 இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் அதை அனுசரிக்கவேண்டும். 48 அந்நியன் ஒருவன் உன்னிடம் தங்கி, யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் எல்லோரும் விருத்தசேதனம் செய்யப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை அனுசரிக்கவேண்டும்; அவன் சொந்த தேசத்தில் பிறந்தவனாக இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவரும் அதில் சாப்பிடவேண்டாம். 49 சொந்த தேசத்தில் பிறந்தவனுக்கும் உங்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கட்டும்” என்றார். 50 இப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் செய்தார்கள்; யெகோவா மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 51 அன்றைக்கே யெகோவா இஸ்ரவேலை அணியணியாக எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தார்.
Chapter 13
அத்தியாயம் 13
முதற்பிறப்புகளைப் பிரதஷ்டை செய்தல்
1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “இஸ்ரவேலர்களுக்குள் மனிதர்களிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பம்திறந்து பிறக்கிற, முதற்பேறான அனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது” என்றார்.
3 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; யெகோவா பலத்த கையினால் உங்களை இந்த இடத்திலிருந்து புறப்படச்செய்தார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் சாப்பிடவேண்டாம். 4 ஆபீப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். 5 ஆகையால், யெகோவா உனக்குக் கொடுப்பேன் என்று உன்னுடைய முன்னோர்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர்கள், ஏத்தியர்கள், எமோரியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்திற்கு உன்னை வரச்செய்யும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையை செய்வாயாக. 6 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாட்கள்வரை சாப்பிடவேண்டும்; ஏழாம்நாளிலே யெகோவாவுக்குப் பண்டிகை அனுசரிக்கப்படவேண்டும். 7 அந்த ஏழுநாட்களும் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன்னுடைய எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். 8 அந்த நாளில் நீ உன்னுடைய பிள்ளைகளை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படும்போது, யெகோவா எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். 9 யெகோவாவின் நியாயப்பிரமாணம் உன்னுடைய வாயிலிருக்கும்படி, இது உன்னுடைய கையிலே ஒரு அடையாளமாகவும் உன்னுடைய கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருப்பதாக; பலத்த கையினால் யெகோவா உன்னை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; 10 ஆகையால், நீ வருடந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை அனுசரித்து வரவும்.
முதல் மகனின் பிரமாணம்
11 மேலும், “யெகோவா உனக்கும் உன்னுடைய முன்னோர்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரச்செய்து, அதை உனக்குக் கொடுக்கும்போது, 12 கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் முதல்பிறப்பு அனைத்தையும், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் யெகோவாவுடையவைகள். 13 கழுதையின் முதற்பிறப்பையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; [1] மீட்காவிட்டால், அதின் கழுத்தை உடைத்துப்போடு. உன்னுடைய பிள்ளைகளில் முதற்பேறான எல்லோரையும் மீட்டுக்கொள். 14 பிற்காலத்தில் உன்னுடைய மகன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: யெகோவா எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படச்செய்தார். 15 எங்களை விடாதபடி, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, யெகோவா எகிப்து தேசத்தில் மனிதரின் முதல்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் முதற்பிறப்புகள்வரையும் உண்டாயிருந்த முதற்பிறப்புகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆண்களையெல்லாம் நான் யெகோவாவுக்குப் பலியிட்டு, என்னுடைய பிள்ளைகளில் முதற்பிறப்புகள் அனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். 16 யெகோவா எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படச்செய்வதற்கு, இது உன்னுடைய கையில் அடையாளமாகவும், உன்னுடைய கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருப்பதாக என்று சொல்வாயாக” என்றான்.
மேகத்தூணிலும், அக்கினித்தூணிலும்
17 பார்வோன் மக்களைப் போகவிட்டபின்பு: மக்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்திற்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தர்களின் தேசத்தின் வழியாகப் போவது அருகாமையாக இருந்தாலும், தேவன் அவர்களை அந்த வழியாக நடத்தாமல், 18 செங்கடலின் வனாந்திர வழியாக மக்களைச் சுற்றிப் போகச்செய்தார். இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து கோத்திரம் கோத்திரமாக புறப்பட்டுப்போனார்கள். 19 மோசே தன்னோடு யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாக உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களுடன் என்னுடைய எலும்புகளை இந்த இடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேலர்களை உறுதியாக ஆணையிடும்படிச் செய்திருந்தான். 20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பயணப்பட்டு, வனாந்திரத்தின் ஓரமாக ஏத்தாமிலே முகாமிட்டார்கள். 21 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படி, யெகோவா பகலில் அவர்களை வழிநடத்த மேகத்தூணிலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சம் காட்ட அக்கினித்தூணிலும் அவர்களுக்கு முன்பு சென்றார். 22 பகலிலே மேகத்தூணிலும், இரவிலே அக்கினித்தூணிலும் மக்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
Chapter 14
அத்தியாயம் 14
செங்கடலைக் கடந்து செல்லுதல்
1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் கடலுக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிடவேண்டும் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு; அதற்கு எதிராக கடற்கரையில் முகாமிடுங்கள். 3 அப்பொழுது பார்வோன் இஸ்ரவேலர்களைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்திரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான். 4 ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படி, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்” என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள். 5 மக்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவிற்கு அறிவிக்கப்பட்டபோது, மக்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவனுடைய ஊழியக்காரர்களும் மனம் மாறி: “நமக்கு வேலை செய்யாதபடி நாம் இஸ்ரவேலர்களைப் போகவிட்டது என்ன காரியம்” என்றார்கள். 6 அவன் தன்னுடைய இரதத்தைப் பூட்டி, தன்னுடைய மக்களைக் கூட்டிக்கொண்டு, 7 முதல்தரமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற எல்லா இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரர்களையும் கூட்டிக்கொண்டு போனான். 8 யெகோவா எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேலர்களைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேலர்கள் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள். 9 எகிப்தியர்கள் பார்வோனுடைய எல்லாக் குதிரைகளுடனும், இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரர்களோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், கடலின் அருகிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்பாக முகாமிட்டிருக்கிற அவர்களை நெருங்கினார்கள். 10 பார்வோன் அருகில் வருகிறபோது, இஸ்ரவேலர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர்கள் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேலர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள். 11 அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: “எகிப்திலே கல்லறைகள் இல்லையென்றா வனாந்திரத்திலே சாகும்படி எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததால், எங்களுக்கு இப்படிச் செய்தது ஏன்? 12 நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, எகிப்தியர்களுக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்திரத்திலே சாவதைவிட எகிப்தியர்களுக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாக இருக்குமே” என்றார்கள். 13 அப்பொழுது மோசே மக்களை நோக்கி: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் யெகோவா உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியர்களை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். 14 யெகோவா உங்களுக்காக யுத்தம்செய்வார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” என்றான்.
15 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ என்னிடம் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்லு. 16 நீ உன்னுடைய கோலை ஓங்கி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டி, கடலைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோவார்கள். 17 எகிப்தியர்கள் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்களின் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர்கள் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். 18 இப்படி நான் பார்வோனாலும் அவனுடைய இரதங்களாலும் அவனுடைய குதிரைவீரர்களாலும் மகிமைப்படும்போது, நானே யெகோவா என்பதை எகிப்தியர்கள் அறிவார்கள் என்றார். 19 அப்பொழுது இஸ்ரவேலர்களின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன்பு இருந்த மேகத்தூணிலும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. 20 அது எகிப்தியர்களின் சேனையும் இஸ்ரவேலர்களின் சேனையும் இரவுமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியர்களுக்கு அது மேகமும் இருளாகவும் இருந்தது, இஸ்ரவேலர்களுக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. 21 மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அப்பொழுது யெகோவா இரவுமுழுவதும் பலத்த கிழக்குக் காற்றினால் கடல் ஒதுங்கும்படிச் செய்து, அதை வறண்டுபோகச்செய்தார்; தண்ணீர் பிளந்து பிரிந்துபோனது. 22 இஸ்ரவேலர்கள் கடலின் நடுவாக வறண்ட நிலத்தில் நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. 23 அப்பொழுது எகிப்தியர்கள் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய எல்லாக் குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அவர்கள் பின்னால் கடலின் நடுவே நடந்துபோனார்கள். 24 காலை நேரத்தில் யெகோவா அக்கினியும் மேகமுமான மண்டலத்திலிருந்து எகிப்தியர்களின் சேனையைப் பார்த்து, அவர்களுடைய சேனையைக் கலங்கடித்து, 25 அவர்களுடைய இரதங்களிலிருந்து சக்கரங்கள் கழன்றுபோகவும், அவர்கள் தங்களுடைய இரதங்களை வருத்தத்தோடு நடத்தவும் செய்தார்; அப்பொழுது எகிப்தியர்கள்: “இஸ்ரவேலர்களைவிட்டு ஓடிப்போவோம், யெகோவா அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியர்களுக்கு விரோதமாக யுத்தம்செய்கிறார்” என்றார்கள்.
பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது
26 யெகோவா மோசேயை நோக்கி: “தண்ணீர் எகிப்தியர்கள்மேலும் அவர்களுடைய இரதங்களின்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்களின்மேலும் திரும்பும்படி, உன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டு” என்றார். 27 அப்படியே மோசே தன்னுடைய கையைக் கடலின்மேல் நீட்டினான்; அதிகாலையில் கடல் பலமாகத் திரும்பி வந்தது; எகிப்தியர்கள் அதற்கு எதிராக ஓடும்போது, யெகோவா அவர்களைக் கடலின் நடுவே அமிழ்த்திப்போட்டார். 28 தண்ணீர் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரர்களையும், அவர்கள் பின்னாக கடலில் நுழைந்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. 29 இஸ்ரவேலர்களோ கடலின் நடுவாக வறண்ட நிலத்தின் வழியாக நடந்துபோனார்கள்; அவர்களுடைய வலதுபுறத்திலும் அவர்களுடைய இடதுபுறத்திலும் தண்ணீர் அவர்களுக்கு மதிலாக நின்றது. 30 இப்படியாகக் யெகோவா அந்த நாளிலே இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்தார்; கடற்கரையிலே எகிப்தியர்கள் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர்கள் கண்டார்கள். 31 யெகோவா எகிப்தியர்களில் செய்த அந்த மகத்தான செயல்களை இஸ்ரவேலர்கள் கண்டார்கள்; அப்பொழுது மக்கள் யெகோவாவுக்குப் பயந்து, யெகோவாவிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் நம்பிக்கை வைத்தார்கள்.
Chapter 15
அத்தியாயம் 15
மோசே மற்றும் மிரியாம் பாடின பாடல்
1 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் மக்களும் யெகோவாவைப் புகழ்ந்துபாடின பாட்டு:
யெகோவாவைப் பாடுவேன்;
“அவர் மகிமையாக வெற்றி சிறந்தார்;
குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.
2 யெகோவா என்னுடைய பெலனும்
என்னுடைய கீதமுமானவர்;
அவர் எனக்கு இரட்சிப்புமானவர்;
அவரே என்னுடைய தேவன்,
அவருக்கு வாசஸ்தலத்தை
ஆயத்தம்செய்வேன்;
அவரே என் தகப்பனுடைய தேவன்,
அவரை உயர்த்துவேன்;
3 யெகோவாவே யுத்தத்தில் வல்லவர்;
என்பது யெகோவா அவருடைய நாமம்.
4 பார்வோனின் இரதங்களையும்
அவனுடைய சேனைகளையும் கடலிலே தள்ளிவிட்டார்;
அவனுடைய முதன்மையான அதிகாரிகள்
செங்கடலில் அமிழ்ந்துபோனார்கள்.
5 ஆழம் அவர்களை மூடிக்கொண்டது;
கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
6 யெகோவாவே, உம்முடைய வலதுகரம் பெலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது;
யெகோவாவே, உம்முடைய வலதுகரம் எதிரியை நொறுக்கிவிட்டது.
7 உமக்கு விரோதமாக எழும்பினவர்களை உமது பெரிய மகத்துவத்தினாலே அழித்துப்போட்டீர்; உம்முடைய கோபத்தை அனுப்பினீர்,
அது அவர்களை வைக்கோல்தாளடியைப்போல எரித்தது.
8 உமது நாசியின் சுவாசத்தினால் தண்ணீர் குவிந்து நின்றது;
வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது;
ஆழமான தண்ணீர் நடுக்கடலிலே உறைந்துபோனது.
9 தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையடித்துப் பங்கிடுவேன்,
என்னுடைய ஆசை அவர்களிடம் திருப்தியாகும்,
என்னுடைய பட்டயத்தை உருவுவேன்,
என்னுடைய கை அவர்களை அழிக்கும் என்று எதிரி சொன்னான்.
10 உம்முடைய காற்றை வீசச்செய்தீர்,
கடல் அவர்களை மூடிக்கொண்டது;
திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள்.
11 யெகோவாவே,
தெய்வங்களில் உமக்கு ஒப்பானவர் யார்?
பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும்,
அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
12 நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்;
பூமி அவர்களை விழுங்கிப்போட்டது.
13 நீர் மீட்டுக்கொண்ட இந்த மக்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்;
உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திற்கு நேராக அவர்களை உமது பெலத்தினால் வழிநடத்தினீர்.
14 மக்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்;
பெலிஸ்தியாவில் குடியிருப்பவர்களைத் திகில் பிடிக்கும்.
15 ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்;
மோவாபின் பலசாலிகளை நடுக்கம் பிடிக்கும்;
கானானில் குடியிருப்பவர்கள் யாவரும் கரைந்துபோவார்கள்.
16 பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும்.
யெகோவாவே, உமது மக்கள் கடந்துபோகும்வரையும்,
நீர் மீட்ட மக்கள் கடந்துபோகும்வரையும்,
அவர்கள் உம்முடைய கரத்தின் மகத்துவத்தினால்
கல்லைப்போல அசைவில்லாமல் இருப்பார்கள்.
17 நீர் அவர்களைக் கொண்டுபோய்,
யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு
நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும்,
ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய
பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.
18 யெகோவா சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம்செய்வார்.
19 பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும்
குதிரைவீரர்களோடும் கடலில் நுழைந்தது;
யெகோவா கடலின் தண்ணீரை அவர்கள்மேல் திரும்பச்செய்தார்;
இஸ்ரவேலர்களோ கடலின் நடுவே காய்ந்த நிலத்திலே நடந்துபோனார்கள்” என்று பாடினார்கள்.
மிரியாம் பாடின பாடல்
20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள். 21 மிரியாம் அவர்களுக்குப் பதிலாக:
யெகோவாவைப் பாடுங்கள்,
அவர் மகிமையாக வெற்றிசிறந்தார்;
குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்.
மாரா மற்றும் ஏலீமின் தண்ணீர்கள்
22 பின்பு மோசே இஸ்ரவேல் மக்களைச் செங்கடலிலிருந்து பயணமாக நடத்தினான். அவர்கள் சூர் வனாந்திரத்திற்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்திரத்தில் தண்ணீர் கிடைக்காமல் நடந்தார்கள். 23 அவர்கள் மாராவிற்கு [1] வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் அதைக் குடிக்க அவர்களுக்கு முடியாமல் இருந்தது; அதினால் அந்த இடத்திற்கு மாரா என்று பெயரிடப்பட்டது. 24 அப்பொழுது மக்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். 25 மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது யெகோவா மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடன், அது இனிமையான தண்ணீரானது. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு கட்டளையையும், ஒரு நீதிநெறிகளையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: 26 நீ உன்னுடைய தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கவனமாகக் கேட்டு, அவருடைய பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவருடைய கட்டளைகளுக்குக் கவனித்து, அவருடைய கட்டளைகள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியர்களுக்கு வரச்செய்த வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரச்செய்யாதிருப்பேன்; நானே உன்னை குணப்படுத்தும் யெகோவா” என்றார்.
27 பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே முகாமிட்டார்கள்.
Chapter 16
அத்தியாயம் 16
மன்னாவும் முறுமுறுப்பும்
1 இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் ஏலிமைவிட்டு பயணம்செய்து, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள். 2 அந்த வனாந்திரத்திலே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: 3 “நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களின் அருகிலே உட்கார்ந்து அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்தில், யெகோவாவின் கையால் செத்துப்போனால் பரவாயில்லை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படச்செய்து, இந்த வனாந்திரத்திலே அழைத்துவந்தீர்களே” என்று அவர்களிடம் சொன்னார்கள். 4 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வரச்செய்வேன்; மக்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என்னுடைய கட்டளையின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். 5 ஆறாம் நாளிலோ [1] , அவர்கள் தினந்தோறும் சேர்க்கிறதைவிட இரண்டுமடங்கு சேர்த்து, அதை ஆயத்தம்செய்து வைக்கவேண்டும்” என்றார். 6 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் மக்கள் எல்லோரையும் நோக்கி: “யெகோவாவே உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தவர் என்பதை மாலையில் அறிவீர்கள்; 7 அதிகாலையில் யெகோவாடைய மகிமையையும் காண்பீர்கள்; யெகோவாவுக்கு விரோதமான உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாக முறுமுறுப்பதற்கு நாங்கள் எம்மாத்திரம்” என்றார்கள். 8 பின்னும் மோசே: “மாலையில் நீங்கள் சாப்பிடுவதற்குக் யெகோவா உங்களுக்கு இறைச்சியையும், அதிகாலையில் நீங்கள் திருப்தியடைவதற்கு அப்பத்தையும் கொடுக்கும்போது இது வெளிப்படும்; யெகோவாவுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்களுடைய முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்களுடைய முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, யெகோவாவுக்கே விரோதமாக இருக்கிறது” என்றான். 9 அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து: “நீ இஸ்ரவேல் மக்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி: யெகோவாவுக்கு முன்பாக சேருங்கள், அவர் உங்களுடைய முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்” என்றான்.
10 ஆரோன் இஸ்ரவேல் மக்களாகிய சபையார்களுக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்திரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது. 11 யெகோவா மோசேயை நோக்கி: 12 “இஸ்ரவேல் மக்களின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களுடன் பேசி, நீங்கள் மாலையில் இறைச்சியைச் சாப்பிட்டு, அதிகாலையில் அப்பத்தால் திருப்தியாகி, நான் உங்களுடைய தேவனாகிய யெகோவா என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல்” என்றார். 13 மாலையில் காடைகள் வந்து விழுந்து முகாமை மூடிக்கொண்டது. அதிகாலையில் முகாமைச் சுற்றி பனி பெய்திருந்தது. 14 பெய்திருந்த பனி நீங்கினபின்பு, இதோ, வனாந்திரத்தின்மீது எங்கும் உருண்டையான ஒரு சிறிய பொருள் உறைந்த பனிக்கட்டிப் பொடியைப்போலத் தரையின்மேல் கிடந்தது. 15 இஸ்ரவேல் மக்கள் அதைக் கண்டு, அது என்னவென்று அறியாமல் இருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: “இது யெகோவா உங்களுக்குச் சாப்பிடக்கொடுத்த அப்பம். 16 யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் சாப்பிடும் அளவுக்குத் தகுந்தபடி அதில் எடுத்துச் சேர்க்கட்டும்; உங்களிலுள்ள நபர்களின் எண்ணிக்கையின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காக தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளட்டும்” என்றான். 17 இஸ்ரவேல் மக்கள் அப்படியே செய்து, சிலர் அதிகமாகவும் சிலர் குறைவாகவும் சேர்த்தார்கள். 18 பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: அதிகமாகச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, குறைவாகச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள். 19 மோசே அவர்களை நோக்கி: “ஒருவனும் அதிகாலைவரை அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்; 20 மோசேயின் சொல் கேட்காமல், சிலர் அதில் அதிகாலைவரை சிறிதளவு மீதியாக வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபம்கொண்டான். 21 அதை அதிகாலைதோறும் அவரவர் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும்.
22 ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டுமடங்காக ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர்கள் எல்லோரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள். 23 அவன் அவர்களை நோக்கி: “யெகோவா சொன்னது இதுதான்; நாளைக்குக் யெகோவாவுக்குறிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச் சுட்டு, வேகவைக்கவேண்டியதை வேகவைத்து, மீதியாக இருக்கிறதையெல்லாம் நாளைவரை உங்களுக்காக வைத்துவையுங்கள்” என்றான். 24 மோசே கட்டளையிட்டபடி, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை. 25 அப்பொழுது மோசே; “அதை இன்றைக்குச் சாப்பிடுங்கள்; இன்று யெகோவாவுக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள். 26 ஆறுநாட்களும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாக இருக்கிறது; அதிலே அது உண்டாகாது” என்றான். 27 ஏழாம்நாளில் மக்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைப் பார்க்கவில்லை. 28 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய சட்டங்களையும் கைக்கொள்ள எதுவரை மனம் இல்லாமல் இருப்பீர்கள்? 29 பாருங்கள், யெகோவா உங்களுக்கு ஓய்வுநாளை கொடுத்தபடியால், அவர் உங்களுக்கு ஆறாம்நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன்தன் இடத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் இடத்திலே இருக்கவேண்டும்” என்றார். 30 அப்படியே மக்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள். 31 இஸ்ரவேல் மக்கள் அதற்கு மன்னா என்று பெயரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாகவும் வெண்மைநிறமாகவும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணியாரத்தைப்போல இருந்தது. 32 அப்பொழுது மோசே: “யெகோவா கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, வனாந்திரத்தில் உங்களுக்கு சாப்பிடக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார்கள் பார்க்கும்படி, அவர்களுக்காக அதைப் பாதுகாப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும்” என்றான். 33 மேலும், மோசே ஆரோனை நோக்கி: “நீ ஒரு பாத்திரத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்களுடைய சந்ததியார்களுக்காகப் பாதுகாப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியிலே வை” என்றான். 34 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான் [2] . 35 இஸ்ரவேல் மக்கள் குடியிருப்பான தேசத்திற்கு வரும்வரை நாற்பது வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரையும் மன்னாவை சாப்பிட்டார்கள். 36 ஒரு ஓமரானது [3] எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.
Chapter 17
அத்தியாயம் 17
கன்மலையிலிருந்து தண்ணீர்
1 பின்பு இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் யெகோவாவுடைய கட்டளையின்படி சீன் வனாந்திரத்திலிருந்து புறப்பட்டு, பயணம்செய்து, ரெவிதீமிலே வந்து முகாமிட்டார்கள்; அங்கே மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் இருந்தது. 2 அப்பொழுது மக்கள் மோசேயோடு வாதாடி: “நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும்” என்றார்கள். அதற்கு மோசே: “என்னோடு ஏன் வாதாடுகிறீர்கள், யெகோவாவை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்” என்றான். 3 மக்கள் அந்த இடத்தில் தண்ணீர்த் தாகமாக இருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாக முறுமுறுத்து: “நீர் எங்களையும் எங்களுடைய பிள்ளைகளையும் எங்களுடைய ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தாகத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர்” என்றார்கள். 4 மோசே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு: “இந்த மக்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே” என்றான். 5 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேல் மூப்பர்களில் சிலரை உன்னோடு கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன்னுடைய கோலை உன்னுடைய கையில் பிடித்துக்கொண்டு, மக்களுக்கு முன்னே நடந்துபோ. 6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்” என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பர்களின் கண்களுக்கு முன்பாகச் செய்தான். 7 இஸ்ரவேலர்கள் வாதாடினதற்காகவும், “யெகோவா எங்களுடைய நடுவில் இருக்கிறாரா இல்லையா” என்று அவர்கள் யெகோவாவை சோதித்துப் பார்த்ததினாலும், அவன் அந்த இடத்திற்கு மாசா [1] என்றும், மேரிபா [2] என்றும் பெயரிட்டான்.
அமலேக்கியர்கள் தோற்கடிக்கப்படுதல்
8 அமலேக்கியர்கள் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலர்களோடு யுத்தம்செய்தார்கள். 9 அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: “நீ நமக்காக மனிதர்களைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்; நாளைக்கு நான் மலைமேல் தேவனுடைய கோலை என்னுடைய கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன்” என்றான். 10 யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கியர்களோடு யுத்தம்செய்தான். மோசேயும், ஆரோனும், ஊர் என்பவனும் மலைமேல் ஏறினார்கள். 11 மோசே தன்னுடைய கையை மேலே பிடித்திருக்கும்போது, இஸ்ரவேலர்கள் வெற்றிபெற்றார்கள்; அவன் தன்னுடைய கையைகீழே விடும்போது, அமலேக்கு வெற்றிபெற்றான். 12 மோசேயின் கைகள் சோர்ந்துபோனது, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும், ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறுபக்கத்திலும் இருந்து, அவனுடைய கைகளைத் தாங்கினார்கள்; இந்த விதமாக அவனுடைய கைகள் சூரியன் மறையும்வரையும் ஒரே நிலையாக இருந்தது. 13 யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் கூர்மையான பட்டயத்தாலே தோற்கடித்தான். 14 பின்பு யெகோவா மோசேயை நோக்கி: “இதை நினைவுகூரும்படி, நீ ஒரு புத்தகத்தில் எழுதி, யோசுவாவின் காதிலே கேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழே எங்கும் இல்லாதபடி நாசம் செய்வேன்” என்றார். 15 மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பெயரிட்டு, 16 “அமலேக்கின் கை யெகோவாவுடைய சிங்காசனத்திற்கு விரோதமாக இருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாக யெகோவாவின் யுத்தம் நடக்கும்” என்றான்.
Chapter 18
அத்தியாயம் 18
எத்திரோ மோசேயை சந்தித்தல்
1 தேவன் மோசேக்கும் தமது மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கும் செய்த யாவையும், யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்ததையும், மீதியானில் ஆசாரியனாக இருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது, 2 மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினால் திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவனுடைய மனைவியாகிய சிப்போராளையும், 3 அவளுடைய இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு பயணப்பட்டான். “நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன்” என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் [1] என்று பெயரிட்டிருந்தான். 4 “என்னுடைய பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்திற்கு என்னைத் தப்புவித்தார்” என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் [2] என்று பெயரிட்டிருந்தான். 5 மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் மகன்களோடும் அவனுடைய மனைவியோடும், அவன் முகாமிட்டிருந்த தேவனுடைய மலையினிடத்தில் வனாந்திரத்திற்கு வந்து: 6 “எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளுடன் அவளுடைய இரண்டு மகன்களும் உம்மிடம் வந்திருக்கிறோம்” என்று மோசேக்குச் சொல்லி அனுப்பினான். 7 அப்பொழுது மோசே தன்னுடைய மாமனுக்கு எதிராகப்போய், அவனை வணங்கி, முத்தம்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்திற்குள் நுழைந்தார்கள். 8 பின்பு மோசே யெகோவா இஸ்ரவேலுக்காக பார்வோனுக்கும் எகிப்தியர்களுக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு சம்பவித்த எல்லா வருத்தத்தையும், யெகோவா தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன்னுடைய மாமனுக்கு விவரித்துச் சொன்னான். 9 யெகோவா இஸ்ரவேலர்களை எகிப்தியர்களின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த எல்லா நன்மைகளையும்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு: 10 “உங்களை எகிப்தியர்களின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியர்களுடைய கையின் கீழ் இருந்த மக்களை விடுவித்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம். 11 யெகோவா எல்லா தெய்வங்களையும்விட பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் ஆணவமாக செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார்” என்று சொல்லி; 12 மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்கதகனபலியையும் மற்ற பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர்கள் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் சாப்பிட்டார்கள்.
நியாயதிபதிகள் நியமிக்கபட்டார்கள் (உபாகமம் 1:1-18)
13 மறுநாள் மோசே மக்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; மக்கள் காலை துவங்கி மாலைவரை மோசேக்கு முன்பாக நின்றார்கள். 14 மக்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: “நீர் மக்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் தனியாக உட்கார்ந்திருக்கவும், மக்கள் எல்லோரும் காலை துவங்கி மாலைவரை உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது ஏன்” என்றான். 15 அப்பொழுது மோசே தன்னுடைய மாமனை நோக்கி: “தேவனிடம் விசாரிக்கும்படி மக்கள் என்னிடம் வருகிறார்கள். 16 அவர்களுக்கு ஏதாவது காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன்” என்றான். 17 அதற்கு மோசேயின் மாமன்: “நீர் செய்கிற காரியம் நல்லதல்ல; 18 நீரும் உம்மோடே இருக்கிற மக்களும் களைத்துப்போவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராக அதைச் செய்ய உம்மாலே முடியாது. 19 இப்பொழுது என்னுடைய சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடு இருப்பார், நீர் தேவசந்நிதியிலே மக்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடம் கொண்டுபோய்; 20 கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும். 21 மக்கள் எல்லோருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் ஏற்படுத்தும். 22 அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் எல்லாவற்றையும் உம்மிடம் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடு இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாக இருக்கும். 23 இப்படி நீர் செய்வதும், இப்படி தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே சுமக்கமுடியும்; இந்த மக்கள் எல்லோரும் தாங்கள் போகும் இடத்திற்குச் சுகமாகப் போய்ச் சேரலாம்” என்றான். 24 மோசே தன்னுடைய மாமனுடைய சொல்லைக்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். 25 மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரிலும் திறமையுள்ள மனிதர்களைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்குத் தலைவர்களாகவும், நூறுபேருக்குத் தலைவர்களாகவும், ஐம்பதுபேருக்குத் தலைவர்களாகவும், பத்துபேருக்குத் தலைவர்களாகவும் மக்கள்மேல் தலைவர்களாக்கினான். 26 அவர்கள் எப்பொழுதும் மக்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமட்டும் மோசேயிடம் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள். 27 பின்பு மோசே தன்னுடைய மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன்னுடைய தேசத்திற்குப் போய்விட்டான்.
Chapter 19
அத்தியாயம் 19
சீனாய் மலை அனுபவங்கள்
1 இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்திரத்திற்கு வந்துசேர்ந்தார்கள். 2 அவர்கள் ரெவிதீமிலிருந்து பயணம் புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்திற்கு வந்து, அந்த வனாந்திரத்தில் முகாமிட்டார்கள்; இஸ்ரவேலர்கள் அங்கே மலைக்கு எதிராக முகாமிட்டார்கள். 3 மோசே தேவனிடம் ஏறிப்போனான்; யெகோவா மலையிலிருந்து அவனைக்கூப்பிட்டு: “நீ யாக்கோபு வம்சத்தார்களுக்குச் சொல்லவும், இஸ்ரவேல் மக்களுக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், 4 நான் எகிப்தியர்களுக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய இறக்கைகளின்மேல் சுமந்து, உங்களை என் அருகிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். 5 இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. 6 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்ஜியமும் பரிசுத்த தேசமுமாக இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டிய வார்த்தைகள்” என்றார். 7 மோசே வந்து மக்களின் மூப்பர்களை அழைத்து, யெகோவா தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான். 8 அதற்கு மக்கள் எல்லோரும் ஒன்றாக, “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று மறுமொழி சொன்னார்கள். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவிடம் தெரிவித்தான். 9 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நான் உன்னோடு பேசும்போது மக்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடம் வருவேன்” என்றார். மக்கள் சொன்ன வார்த்தைகளை மோசே யெகோவாவுக்குச் சொன்னான். 10 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “நீ மக்களிடம் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் ஆடைகளைத் துவைத்து, 11 மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும்; மூன்றாம் நாளில் யெகோவா எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக சீனாய் மலையின்மேல் இறங்குவார். 12 மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான். 13 ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியப்பட்டு, அல்லது வில் எய்யப்பட்டுச் சாகவேண்டும்; மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி, உயிரோடு வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாகத் தொனிக்கும்போது, அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரவேண்டும்” என்றார். 14 மோசே மலையிலிருந்து இறங்கி, மக்களிடம் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்களுடைய ஆடைகளைத் துவைத்தார்கள். 15 அவன் மக்களை நோக்கி: “மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியிடம் சேராமல் இருங்கள்” என்றான். 16 மூன்றாம் நாள் அதிகாலையில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டானது; முகாமிலிருந்த மக்கள் எல்லோரும் நடுங்கினார்கள். 17 அப்பொழுது மக்கள் தேவனுக்கு எதிராகபோக, மோசே அவர்களை முகாமிலிருந்து புறப்படச்செய்தான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். 18 யெகோவா சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கியதால், அது முழுவதும் புகைக்காடாக இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பியது; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது [1] . 19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாகத் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். 20 யெகோவா சீனாய்மலையிலுள்ள உச்சியில் இறங்கினபோது, யெகோவா மோசேயை மலையின் உச்சியில் வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான். 21 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “மக்கள் பார்ப்பதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடம் வராதபடியும், அவர்களில் அநேகர் அழிந்துபோகாதபடியும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி. 22 யெகோவாவின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும்” என்றார். 23 அப்பொழுது மோசே யெகோவாவை நோக்கி: “மலையைச் சுற்றிலும் எல்லையைக் குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், மக்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள்” என்றான். 24 யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும், மக்களும், யெகோவா தங்களை அழிக்காதபடி, எல்லையைக் கடந்து யெகோவாவிடம் வராமல் இருக்கவேண்டும்” என்றார். 25 அப்படியே மோசே இறங்கி மக்களிடம் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.
Chapter 20
அத்தியாயம் 20
பத்துக் கட்டளைகள்
உபா 5:1-21
1 தேவன் பேசிச் சொல்லிய எல்லா வார்த்தைகளாவன.
2 “உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே.
3 என்னைத்தவிர உனக்கு வேறே தெய்வங்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சிலையையாவது, விக்கிரகத்தையாவது நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; 5 நீ அவைகளை வணங்கி வழிபடவேண்டாம்; உன்னுடைய தேவனாகிய யெகோவாவாக இருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாக இருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக்குறித்து தகப்பன்மார்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடம் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவராக இருக்கிறேன். 6 என்னிடம் அன்புகூர்ந்து, என்னுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைவரை இரக்கம் செய்கிறவராக இருக்கிறேன்.
7 உன்னுடைய தேவனாகிய யெகோவாடைய நாமத்தை வீணிலே வழங்காமல் இருப்பாயாக; யெகோவா தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டிக்காமல் விடமாட்டார்.
8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாக அனுசரிக்க நினை; 9 ஆறுநாட்களும் நீ வேலைசெய்து, உன்னுடைய செயல்களையெல்லாம் நடத்து; 10 ஏழாம்நாளோ உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன்னுடைய மகனானாலும், உன்னுடைய மகளானாலும், உன்னுடைய வேலைக்காரனானாலும், உன்னுடைய வேலைக்காரியானாலும், உன்னுடைய மிருகஜீவனானாலும், உன்னுடைய வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், எந்த வேலையும் செய்யவேண்டாம். 11 யெகோவா ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், யெகோவா ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
12 உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.
13 கொலை செய்யாதே.
14 விபசாரம் செய்யாதே.
15 களவு செய்யாதே.
16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதே.
17 பிறனுடைய வீட்டின்மேல் ஆசைப்படாமல் இரு; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுடைய எதின்மேலும் ஆசைப்படாமல் இரு” என்றார்.
18 மக்கள் எல்லோரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, மக்கள் எல்லோரும் நடு நடுங்கி, தூரத்திலே நின்று, 19 மோசேயை நோக்கி: “நீர் எங்களோடு பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாமல் இருக்கட்டும், பேசினால் நாங்கள் செத்துப்போவோம்” என்றார்கள். 20 மோசே மக்களை நோக்கி; “பயப்படாமல் இருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடி அவரைக்குறித்த பயம் உங்களுடைய முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” என்றான். 21 மக்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்திற்கு அருகில் சேர்ந்தான்.
பலிபீடத்தின் பிரமாணம்
22 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இஸ்ரவேலர்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்று கண்டீர்கள். 23 நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாம். 24 மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன்னுடைய ஆடுகளையும் உன்னுடைய மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்து; நான் என்னுடைய நாமத்தை மகிமைப்படுத்தும் எந்த இடத்திலும் உன்னிடம் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். 25 எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமானால், அதை வெட்டின கற்களால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளி பதித்தவுடன், அதை அசுத்தப்படுத்துவாய். 26 என்னுடைய பலிபீடத்தின்மேல் உன்னுடைய நிர்வாணம் காணப்படாதபடி, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்”.
Chapter 21
அத்தியாயம் 21
எபிரேய அடிமைகள்
உபா 15:12-18
1 மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய கட்டளைகள்: 2 “எபிரெயர்களில் ஒரு அடிமையை வாங்கினால், அவன் ஆறுவருடங்கள் வேலைசெய்து, ஏழாம் வருடத்திலே ஒன்றும் தராமல் விடுதலைப்பெற்றுப் போகவேண்டும். 3 தனியாக வந்திருந்தால், தனியாகப்போகவேண்டும்; திருமணம் செய்தவனாக வந்திருந்தால், அவன் மனைவி அவனுடன் போகவேண்டும். 4 அவனுடைய எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையோ பெண்பிள்ளைகளையோ பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவளுடைய பிள்ளைகளும் அவளுடைய எஜமானைச் சேரவேண்டும்; அவன் மட்டும் தனியாகப் போகவேண்டும். 5 அந்த வேலைக்காரன்: என்னுடைய எஜமானையும் என்னுடைய மனைவியையும் என்னுடைய பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாகச் சொன்னால், 6 அவனுடைய எஜமான் அவனை நியாயாதிபதிகளிடம் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகிலாவது கதவுநிலையின் அருகிலாவது சேரச்செய்து, அங்கே அவனுடைய எஜமான் அவனுடைய காதைக் கம்பியினால் குத்தவேண்டும்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடம் வேலைசெய்துகொண்டிருக்கவேண்டும்.
7 “ஒருவன் தன்னுடைய மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது. 8 அவளைத் தனக்கு நியமித்துக்கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாகப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்செய்து, அவளை அந்நியர்கள் கையில் விற்க அவனுக்கு அதிகாரம் இல்லை. 9 அவன் தன்னுடைய மகனுக்கு அவளை மனைவியாக நியமித்திருந்தால், தன்னுடைய மகள்களை நடத்துவதுபோல அவளையும் நடத்தவேண்டும். 10 அவன் வேறொரு பெண்ணைத் தனக்கென்று நியமித்தால், இவளுக்குரிய உணவு, உடை, திருமண உரிமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருக்கவேண்டும். 11 இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணம் தராமல் விடுதலைபெற்றுப் போகவேண்டும்.
பலவிதமான தண்டனைகள்
12 “ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாகக் கொலைசெய்யப்பட வேண்டும். 13 ஒருவன் மறைந்திருந்து கொல்லாமல், தேவசெயலாகத் தன்னுடைய கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய இடத்தை உனக்கு நியமிப்பேன். 14 ஒருவன் பிறனுக்கு விரோதமாக சதிமோசம்செய்து, அவனைத் துணிகரமாகக் கொன்றுபோட்டால், அவனை என்னுடைய பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும்.
15 “தன்னுடைய தகப்பனையாவது தன்னுடைய தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
16 “ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவனிடம் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
17 “தன்னுடைய தகப்பனையோ தன்னுடைய தாயையோ சபிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.
18 “மனிதர்கள் சண்டையிட்டு, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததாலோ கையால் அடித்ததினாலோ அவன் சாகாமல் படுக்கையில் கிடந்து, 19 திரும்ப எழுந்து வெளியிலே தன்னுடைய ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் தண்டனைக்கு விலகியிருப்பான்; ஆனாலும் அவனுக்கு நஷ்டஈடு கொடுத்து, அவனை நன்றாகக் குணமாக்கவேண்டும்.
20 “ஒருவன் தனக்கு அடிமையானவனையோ தனக்கு அடிமையானவளையோ, கோலால் அடித்ததாலே, அவனுடைய கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும்.
21 ஒரு நாளாவது இரண்டு நாட்களாவது உயிரோடு இருந்தால், அவர்கள் அவனுக்கு உரியவனாக இருப்பதால், பழிவாங்கவேண்டியதில்லை. 22 “மனிதர்கள் சண்டையிட்டு, கர்ப்பவதியான ஒரு பெண்ணை அடித்ததால், அவளுக்கு வேறு சேதமில்லாமல் கர்ப்பம் கலைந்துபோனால், அடிபட்ட பெண்ணின் கணவன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தகுந்தபடியும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் அபராதம் கொடுக்கவேண்டும். 23 வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன், 24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், 25 சூட்டுக்குச் சூடு, காயத்திற்குக் காயம், தழும்புக்குத் தழும்பு கொடுக்கவேண்டும்.
26 “ஒருவன் தன்னுடைய அடிமையின் கண்ணையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் கண்ணையோ அடித்து அதைக் கெடுத்தால், அவனுடைய கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்யவேண்டும். 27 அவன் தன்னுடைய அடிமையின் பல்லையோ தன்னுடைய அடிமைப்பெண்ணின் பல்லையோ விழும்படி அடித்தால், அவனுடைய பல்லுக்குப் பதிலாக அவனை விடுதலை செய்துவிடவேண்டும்.
28 “ஒரு மாடு ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ முட்டியதால் சாவு உண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் இறைச்சி சாப்பிடப்படக்கூடாது; அப்பொழுது மாட்டின் எஜமான் தண்டனைக்கு விலகியிருப்பான். 29 தன்னுடைய மாடு வழக்கமாக முட்டுகிற மாடாக இருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டிவைக்காததால், அது ஒரு ஆணையோ ஒரு பெண்ணையோ கொன்று போட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலை செய்யப்படவேண்டும். 30 அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதால், அவன் தன்னுடைய உயிரை மீட்கும் பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கவேண்டும். 31 அது ஒருவனுடைய மகனை முட்டினாலும் சரி, ஒருவனுடைய மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும். 32 அந்த மாடு ஒரு அடிமையையோ ஒரு அடிமைப்பெண்ணையோ முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது [1] சேக்கல் நிறையான வெள்ளியைக் [2] கொடுக்கவேண்டும்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
33 “ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததாலோ, ஒரு குழியை வெட்டி அதை மூடாமல் போனதாலோ, அதிலே ஒரு மாடோ ஒரு கழுதையோ விழுந்தால், 34 குழிக்கு உரியவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தினுடைய எஜமானுக்குக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.
35 “ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டியதால் அது செத்தால், உயிரோடு இருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் தொகையைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளவேண்டும். 36 அந்த மாடு முன்பே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்தும், அதைக் கட்டிவைக்காமல் இருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாக வேண்டும்.
Chapter 22
அத்தியாயம் 22
சொத்தைப் பாதுகாத்தல்
1 “ஒருவன் ஒரு மாட்டையோ ஒரு ஆட்டையோ திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கவேண்டும். 2 திருடன் திருடும்போது கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவனுடைய இரத்தப்பழி அடித்தவனைச் சேராது. 3 சூரியன் அவன்மேல் உதித்தபின்பு, அவனுடைய இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லாமல் இருந்தால், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான். 4 அவன் திருடின மாடோ, கழுதையோ, ஆடோ உயிருடன் அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக அவன் கொடுக்கவேண்டும்.
5 “ஒருவன் மற்றவனுடைய வயலிலோ திராட்சைத்தோட்டத்திலோ தன்னுடைய மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன்னுடைய சொந்தவயலிலும் திராட்சைத்தோட்டத்திலும் உள்ள பலனில் சிறந்ததை எடுத்து, பதிலுக்குக் கொடுக்கவேண்டும்.
6 அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையோ, விளைந்த பயிரையோ, வயலிலுள்ள வேறு எதையாவது எரித்துப்போட்டால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு ஈடு செய்யவேண்டும்.
7 ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும். 8 திருடன் அகப்படாவிட்டால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம் [1] அவனைக் கொண்டுபோகவேண்டும். 9 காணாமல்போன மாடு, கழுதை, ஆடு, உடை முதலியவைகளில் ஏதாவது ஒன்றை வேறொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றம்சொன்னால், இரண்டு பேர்களுடைய வழக்கும் நியாயாதிபதிகளிடம் [2] வரவேண்டும்; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இருமடங்கு கொடுக்கவேண்டும்.
10 ஒருவன் தன்னுடைய கழுதையையோ மாட்டையோ ஆட்டையோ மற்ற ஏதாவதொரு மிருகஜீவனையோ ஒருவனிடம் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், காயப்பட்டாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும், 11 அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று யெகோவாவின் நாமத்தில் ஆணையிட்டால் அவர்கள் இருவருக்கும் அதுவே நியாயம்தீர்க்கட்டும்; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கத்தேவையில்லை. 12 அது அவனிடமிருந்து திருடப்பட்டுப்போனால், அவன் அதனுடைய எஜமானுக்கு அதற்காக ஈடுகொடுக்கவேண்டும். 13 அது வேட்டையாடப்பட்டுப்போனால், அதற்கு சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். வேட்டையாடப்பட்டதற்காக அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை.
14 ஒருவன் பிறனிடம் எதையாவது இரவலாக வாங்கியிருந்தால், அதற்குரியவன் கூட இல்லாதபோது, அது காயப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு ஈடுசெய்யவேண்டும். 15 அதற்குரியவன் கூட இருந்தால், அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவனுடைய வாடகைக்கு வந்த சேதம்.
சமுதாயக் கடமைகள்
16 திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும். 17 அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும்.
18 சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம்.
19 மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும்.
20 யெகோவா ஒருவரைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் அழிக்கப்படவேண்டும். 21 அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே. 22 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; 23 அவர்களை அதிகமாக ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாகக் கேட்டு, 24 கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள்.
25 உங்களுக்குள் ஏழையாக இருக்கிற என்னுடைய மக்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடம் வட்டி வாங்கவேண்டாம். 26 பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக. 27 அவன் ஆடை அதுதானே, அதுவே அவன் தன்னுடைய உடலை மூடிக்கொள்ளுகிற துணி; வேறு எதினாலே போர்த்திப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுடைய வார்த்தையைக் கேட்பேன், நான் இரக்கமுள்ளவராக இருக்கிறேன்.
28 தேவனை நிந்திக்காமலும், உன்னுடைய மக்களை ஆளுகிறவர்களைச் சபிக்காமலும் இரு. 29 முதல் முதல் பழுக்கும் உன்னுடைய பழத்தையும், வடியும் உன்னுடைய ஆலையின் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன்னுடைய மகன்களில் முதலில் பிறந்தவனை எனக்குக் கொடுப்பாயாக. 30 உன்னுடைய மாடுகளிலும் உன்னுடைய ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாட்கள் தன்னுடைய தாயோடு இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக. 31 நீங்கள் எனக்குப் பரிசுத்த மனிதர்களாக இருக்கவேண்டும்; வெளியிலே பீறுண்ட இறைச்சியைச் சாப்பிடாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.
Chapter 23
அத்தியாயம் 23
நீதி மற்றும் இரக்கத்தின் சட்டங்கள்
1 “அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாதே; கொடுமையுள்ள சாட்சிக்காரனாக இருக்க ஆகாதவனோடு சேராதே. 2 தீமைசெய்ய அநேகம்பேர்களின் வழியைப் பின்பற்றாதே; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட கூட்டத்தின் பக்கம் சாய்ந்து, தீர்ப்பு சொல்லாதே. 3 வழக்கிலே தரித்திரனுடைய முகத்தைப் பார்க்காதே.
4 உன்னுடைய எதிரியின் மாடோ அவனுடைய கழுதையோ தப்பிப்போவதைப் பார்த்தால், அதைத் திரும்ப அவனிடம் கொண்டுபோய் விடு. 5 உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும்.
6 உன்னிடத்தில் இருக்கிற எளியவனுடைய வழக்கிலே அவனுடைய நியாயத்தைப் புரட்டாதே. 7 தவறான காரியத்தை விட்டுவிலகு; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாதே; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன். 8 லஞ்சம் வாங்காதே; லஞ்சம் பார்வையுள்ளவர்களைக் [1] குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். 9 அந்நியனை ஒடுக்காதே; எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே.
ஓய்வுநாளின் கட்டளை
10 ஆறுவருடங்கள் நீ உன்னுடைய நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள். 11 ஏழாம் வருடத்தில் உன்னுடைய மக்களிலுள்ள எளியவர்கள் சாப்பிடவும், மீதியானதை வெளியின் மிருகங்கள் சாப்பிடவும், அந்த நிலம் சும்மாகிடக்க விட்டுவிடு; உன்னுடைய திராட்சைத்தோட்டத்தையும் உன்னுடைய ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்யவேண்டும். 12 ஆறுநாட்கள் உன்னுடைய வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன்னுடைய மாடும் உன்னுடைய கழுதையும் இளைப்பாறவும், உன்னுடைய அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திரு. 13 நான் உங்களுக்குச் சொன்னவைகள் எல்லாவற்றிலும் கவனமாக இருங்கள். அந்நிய தெய்வங்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன்னுடைய வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம்.
வருடத்தின் மூன்று பண்டிகைகள்
யாத் 34:18-26; உபா 16:9-17
14 வருடத்தில் மூன்றுமுறை எனக்குப் பண்டிகை அனுசரி. 15 புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடி ஆபீப் மாதத்தின் குறித்தகாலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லா அப்பம் சாப்பிடவேண்டும்; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என்னுடைய சந்நிதியில் வெறுங்கையுடன் வரவேண்டாம். 16 நீ வயலில் விதைத்த உன்னுடைய பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருடமுடிவிலே நீ வயலில் உன்னுடைய வேலைகளின் பலனைச் சேர்த்து முடிந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி. 17 வருடத்தில் மூன்றுமுறை உன்னுடைய ஆண்மக்கள் எல்லோரும் யெகோவாவாகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரட்டும்.
18 எனக்கு பலியிடும் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு பலியிடும் கொழுப்பை அதிகாலைவரைக்கும் வைக்கவும் வேண்டாம். 19 உன்னுடைய நிலத்தில் முதல் விளைச்சல்களின் முதல் கனியை உன்னுடைய தேவனாகிய யெகோவாவுடைய ஆலயத்திற்குக் கொண்டுவரவேண்டும்; வெள்ளாட்டுக்குட்டியை அதனுடைய தாயின் பாலோடு சமைக்கவேண்டாம்.
வழியை ஆயத்தம் செய்வதற்கான தேவதூதன்
20 வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்செய்த இடத்திற்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். 21 அவருடைய சமுகத்தில் எச்சரிக்கையாக இருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்களுடைய துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என்னுடைய பெயர் அவருடைய உள்ளத்தில் [2] இருக்கிறது. 22 நீ அவருடைய வாக்கை நன்றாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்தால், நான் உன்னுடைய எதிரிகளுக்கு எதிரியாகவும், உன்னுடைய விரோதிகளுக்கு விரோதியாகவும் இருப்பேன். 23 என்னுடைய தூதனானவர் உனக்கு முன்னேசென்று, எமோரியர்களும், ஏத்தியர்களும், பெரிசியர்களும், கானானியர்களும், ஏவியர்களும், எபூசியர்களும், இருக்கிற இடத்திற்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அழித்துப்போடுவேன். 24 நீ அவர்களுடைய தெய்வங்களைப் பணிந்துகொள்ளாமலும், தொழுதுகொள்ளாமலும், அவர்களுடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களை முழுவதும் அழித்து, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடவேண்டும். 25 உங்களுடைய தேவனாகிய யெகோவாவையே ஆராதிக்கவேண்டும்; அவர் உன்னுடைய அப்பத்தையும் உன்னுடைய தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். 26 கர்ப்பம் களைகிறதும், மலடும் உன்னுடைய தேசத்தில் இருப்பதில்லை; உன்னுடைய ஆயுசு நாட்களை பூரணப்படுத்துவேன். 27 எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன்பு செல்லும்படிச் செய்வேன். நீ செல்லும் இடமெங்கும் உள்ள மக்கள் எல்லோரையும் கொன்று, உன்னுடைய எதிரிகள் எல்லோரையும் முதுகு காட்டச்செய்வேன். 28 உன்னுடைய முகத்திற்கு முன்பாக ஏவியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும் துரத்திவிட குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன். 29 தேசம் பாழாகப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாகப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஓராண்டிற்குள்ளே உனக்கு முன்பாக துரத்திவிடாமல், 30 நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உனக்கு முன்பாக துரத்திவிடுவேன். 31 செங்கடல் துவங்கி பெலிஸ்தர்களின் மத்திய தரைக்கடல்வரைக்கும், வனாந்திரம் துவங்கி நதிவரைக்கும் உன்னுடைய எல்லையாக இருக்கும்படிச் செய்வேன்; நான் அந்த தேசத்தின் குடிகளை உங்களுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உனக்கு முன்பாக துரத்திவிடுவாய். 32 அவர்களோடும் அவர்களுடைய தெய்வங்களோடும் நீ உடன்படிக்கை செய்யாதே. 33 உன்னை எனக்கு விரோதமாகப் பாவம் செய்யவைக்காதபடி உன்னுடைய தேசத்திலே அவர்கள் குடியிருக்கவேண்டாம்; நீ அவர்களுடைய தெய்வங்களைத் தொழுதுகொண்டால், அது உனக்குக் கண்ணியாக இருக்கும்” என்றார்.
Chapter 24
அத்தியாயம் 24
இரத்த உடன்படிக்கை உறுதிப்படுத்தப்படுதல்
1 பின்பு அவர் மோசேயை நோக்கி: “நீயும் ஆரோனும், நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பர்களில் எழுபதுபேர்களும் கர்த்தரிடம் ஏறிவந்து, தூரத்திலிருந்து தொழுதுகொள்ளுங்கள். 2 மோசே மட்டும் யெகோவாவுக்கு அருகில் வரலாம்; மற்றவர்கள் அருகில் வரக்கூடாது; மக்கள் அவனுடன் ஏறிவரவேண்டாம்” என்றார். 3 மோசே வந்து, யெகோவாவுடைய வார்த்தைகள் யாவையும் நீதி சட்டங்கள் யாவையும் மக்களுக்கு அறிவித்தான்; “அப்பொழுது மக்கள் எல்லோரும் ஒரேசத்தமாக: யெகோவா அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம்” என்று மறுமொழி சொன்னார்கள். 4 மோசே யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலையில் எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய எண்ணிக்கையின்படி பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். 5 இஸ்ரவேலின் வாலிபர்களை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். 6 அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, கிண்ணங்களில் ஊற்றி, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, 7 உடன்படிக்கையின் புத்தகத்தை எடுத்து, மக்களின் காதுகளில் கேட்க வாசித்தான்; அவர்கள் யெகோவா சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம்” என்றார்கள். 8 அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, மக்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும்குறித்து யெகோவா உங்களோடு செய்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்றான்.
9 பின்பு மோசேயும், ஆரோனும், நாதாபும் அபியூவும், இஸ்ரவேலுடைய மூப்பர்கள் எழுபதுபேர்களும் மலைக்கு ஏறிப்போய், 10 இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழுள்ள இடமானது இழைத்த வேலைப்பாடு மிகுந்த நீலக்கல்லைப்போல தெளிந்த வானத்தின் சுடரொளிக்கு ஒப்பாகவும் இருந்தது. 11 அவர் இஸ்ரவேலர்களுடைய தலைவர்கள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு சாப்பிட்டுக் குடித்தார்கள்.
12 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு. நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன்” என்றார். 13 அப்பொழுது மோசே தன்னுடைய ஊழியக்காரனாகிய யோசுவாவோடு எழுந்து போனான். மோசே தேவனுடைய மலையில் ஏறிப்போகும்போது, 14 அவன் மூப்பர்களை நோக்கி: “நாங்கள் உங்களிடம் திரும்பிவரும்வரை, நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும், ஊரும் உங்களிடம் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு ஏதாவது பிரச்சனை உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம்” என்றான். 15 மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடியது. 16 யெகோவாவுடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாட்கள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். 17 மலையின் உச்சியிலே யெகோவாவுடைய மகிமையின் காட்சி இஸ்ரவேலர்களுடைய கண்களுக்கு சுட்டெரிக்கிற அக்கினியைப்போல் இருந்தது. 18 மோசே மேகத்தின் நடுவிலே நுழைந்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாட்கள் மலையில் இருந்தான்.
Chapter 25
அத்தியாயம் 25
பரிசுத்த ஆசரிப்புக்கூடாரத்திற்கான காணிக்கைகள் (யாத்திராகமம் 39:4-9.)
1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாக உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடம் எனக்குக் காணிக்கையை வாங்கிக்கொள். 3 நீங்கள் அவர்களிடம் வாங்க வேண்டிய காணிக்கைகள், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், 4 இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்பு நூலும், மெல்லிய பஞ்சு நூலும், வெள்ளாட்டு முடியும், 5 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும் [1] , சீத்திம் மரமும், 6 விளக்கெண்ணெயும், அபிஷேகத் தைலத்திற்குப் பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமண வாசனைப் பொருட்களும், 7 ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே. 8 அவர்கள் நடுவிலே நான் தங்கியிருக்க, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள். 9 நான் உனக்குக் காண்பிக்கும் ஆசரிப்புக்கூடாரத்தின் மாதிரியின்படியும், அதனுடைய எல்லாப்பொருட்களின் மாதிரியின்படியும் அதைச் செய்யுங்கள்.
உடன்படிக்கையின் பெட்டி
10 “சீத்திம் மரத்தால் ஒரு பெட்டியைச் செய்யுங்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும் [2] , அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாக இருக்கட்டும். 11 அதை எங்கும் சுத்தப்பொன் தகட்டால் மூடு; நீ அதனுடைய உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதனால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் விளிம்பு உண்டாக்கி, 12 அதற்கு நான்கு பொன் வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து, 13 சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, 14 அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சு. 15 அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும். 16 நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை அந்தப் பெட்டியிலே வைக்கவேண்டும். 17 “சுத்தப்பொன்னினாலே கிருபாசனத்தைச் செய்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக [3] இருக்கட்டும். 18 பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்; பொன்னைத் தகடாக அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைக்கவேண்டும். 19 ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் செய்து வை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு இருக்கும்படி ஒரேவேலையாக, அவைகளைச் செய்யவேண்டும். 20 அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாக இருக்கட்டும்; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாக இருப்பதாக. 21 கிருபாசனத்தைப் பெட்டியின்மீது வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் உடன்படிக்கையின் கட்டளைகளை வைப்பாயாக. 22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலுமிருந்து நான் இஸ்ரவேலர்களுக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடு சொல்லுவேன்.
பரிசுத்த அப்பத்தின் மேஜை
23 “சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் செய்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாக [4] இருக்கட்டும். 24 அதைச் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் விளிம்பை உண்டாக்கி, 25 சுற்றிலும் அதற்கு நான்கு விரலளவு [5] உள்ள சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் விளிம்பையும் உண்டாக்கி, 26 அதற்கு நான்கு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் நீ தைக்கவேண்டும். 27 அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்கள் உண்டாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும். 28 அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடு; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும். 29 அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலிக்கான கிண்ணங்களையும் செய்யக்கடவாய்; அவைகளைப் சுத்தப்பொன்னினால் செய். 30 மேஜையின்மேல் எப்போதும் என்னுடைய சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கவேண்டும்.
விளக்குத்தண்டு (யாத்திராகமம் 37:17-22)
31 “சுத்தப்பொன்னினால் ஒரு குத்துவிளக்கை உண்டாக்கு; அது பொன்னினால் அடிப்பு வேலையாகச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும், கிளைகளும், மொக்குகளும், பழங்களும், பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும். 32 ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். 33 ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும். 34 விளக்குத்தண்டிலோ, வாதுமைக் கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக. 35 அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருக்கட்டும்; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும். 36 அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாக இருக்கட்டும்; அவையெல்லாம் தகடாக அடித்த சுத்தப்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாக இருக்கவேண்டும். 37 அதில் ஏழு அகல்களைச் செய்; அதற்கு நேர் எதிராக எரியும்படி அவைகள் ஏற்றப்படவேண்டும். 38 அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் சுத்தப்பொன்னினால் செய்யப்படுவதாக. 39 அதையும், அதற்குரிய பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து [6] சுத்தப்பொன்னினால் செய்யவேண்டும். 40 மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி அவைகளைச் செய்ய எச்சரிக்கையாக இரு.
Chapter 26
அத்தியாயம் 26
பரிசுத்த ஆசரிப்புக்கூடாரம் (யாத்திராகமம் 36:8-38)
1 “மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் ஆசரிப்பு கூடாரத்தை உண்டாக்கு; அவைகளில் விசித்திர பின்னல்வேலையாகக் கேருபீன்களைச் செய். 2 ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் [1] , நான்கு முழ அகலமுமாக இருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருக்கவேண்டும். 3 ஐந்து மூடுதிரைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும். 4 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டாக்கு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரைகளின் ஓரத்திலும் அப்படியே செய். 5 காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கு. 6 ஐம்பது பொன் கொக்கிகளை செய்து, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைக்கப்படவேண்டும். அப்பொழுது ஆசரிப்பு கூடாரம் ஒன்றாகும். 7 “ஆசரிப்பு கூடாரத்தின்மேல் கூடாரமாகப்போடும்படி ஆட்டு ரோமத்தால் பதினொரு மூடுதிரைகளை உண்டாக்கு. 8 ஒவ்வொரு மூடுதிரைகளும் முப்பது முழ நீளமும் [2] , நான்கு முழ அகலமாக இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருக்கவேண்டும். 9 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடவேண்டும். 10 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடைசி ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி, 11 ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச் செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்துவிடவேண்டும். 12 கூடாரத்தின் மூடுதிரைகளில் மீதமான பாதிமூடுதிரை ஆசரிப்பு கூடாரத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும். 13 கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்தில் மீதியானதில், இந்தப்பக்கத்தில் ஒரு முழமும் [3] அந்தப்பக்கத்தில் ஒரு முழமும் ஆசரிப்பு கூடாரத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும். 14 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத் தோலால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் மெல்லிய தோலால் ஒரு மூடியையும் உண்டாக்கவேண்டும்.
ஆசரிப்பு கூடாரம் கட்டுதல்.
15 “ஆசரிப்பு கூடாரத்திற்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும். 16 ஒவ்வொரு பலகையும் பத்து முழ [4] நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும். 17 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இரண்டு பொருந்தும் முனை இருக்கவேண்டும்; ஆசரிப்புக் கூடாரங்களில் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்யவேண்டும். 18 ஆசரிப்புக் கூடாரத்திற்காக செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகைகள் தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கட்டும். 19 அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். 20 ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும், 21 அவைகளின் கீழ் நாற்பது வெள்ளிப்பாதங்களையும் உண்டாக்கவேண்டும்; ஒரு பலகையின் கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். 22 ஆசரிப்பு கூடாரத்தின் மேற்குப்பக்கத்திற்கு ஆறு பலகைகளையும், 23 ஆசரிப்பு கூடாரத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டாக்கவேண்டும். 24 அவைகள் கீழே சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்கு ஆகும். 25 அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும். 26 “சீத்திம் மரத்தால் ஆசரிப்பு கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், 27 ஆசரிப்பு கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், ஆசரிப்பு கூடாரத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய். 28 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் ஊடுருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும். 29 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் செய்து, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடவேண்டும். 30 இப்படியாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படி ஆசரிப்பு கூடாரத்தை அமைக்கவேண்டும்.
31 “இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு மூடுதிரையைச் செய்யவேண்டும்; அதிலே வேலைப்பாடு செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும். 32 சீத்திம் மரத்தால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நான்கு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நான்கு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும். 33 கொக்கிகளின்கீழே அந்த மூடுதிரையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே மூடுதிரைக்குள்ளாக வைக்கவேண்டும்; அந்த மூடுதிரை பரிசுத்த இடத்திற்கும் மகா பரிசுத்த இடத்திற்கும் பிரிவை உண்டாக்கும். 34 மகா பரிசுத்த இடத்திலே சாட்சிப்பெட்டியின்மேல் கிருபாசனத்தை வைப்பாயாக; 35 மூடுதிரைக்கு வெளியே மேஜையையும், மேஜைக்கு எதிரே ஆசரிப்பு கூடாரத்தின் தென்பக்கமாகக் குத்துவிளக்கை வைத்து, மேஜையை வடபக்கமாக வைப்பாயாக. 36 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்கு திரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி, 37 அந்தத் தொங்கு திரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப்பாதங்களை வார்க்கவேண்டும்.
Chapter 27
அத்தியாயம் 27
தகனபலியின் பலிபீடம் (யாத்திராகமம். 38:1-7)
1 “ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமாக [1] சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டாக்கவேண்டும்; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாக இருப்பதாக. 2 அதின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளை உண்டாக்கவேண்டும்; அதின் கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும். 3 அதின் சாம்பலை எடுக்கத்தகுந்த சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணங்களையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்கவேண்டும்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தால் செய்வாயாக. 4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைச் செய்து, அந்தச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் நான்கு வெண்கல வளையங்களை உண்டாக்கி, 5 அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதிஉயரத்தில் இருக்கும்படி அதை பலிபீடத்தின் அடியில் சுற்றடைப்புக்குக் கீழே வைக்கவேண்டும். 6 பலிபீடத்திற்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடவேண்டும். 7 பலிபீடத்தைச் சுமக்கும்படி அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே மாட்டப்பட்டிருக்கவேண்டும். 8 அதை உள்ளே மற்றும் வெளியேவிட்டுப் பலகைகளினாலே செய்யவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடி அதைச் செய்யவேண்டும்.
பிராகாரமும் திரைகளும் 38:9-20
9 “ஆசரிப்பு கூடாரத்திற்கு பிராகாரத்தையும் உண்டாக்கவேண்டும்; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான [2] தொங்கு திரைகள் இருக்கவேண்டும். 10 அவைகளுக்கு வெண்கலத்தினால் இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும். 11 அப்படியே வடக்கு பக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான [3] தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாக இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் வளையங்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும். 12 பிராகாரத்தின் மேற்கு பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ [4] நீளமான தொங்கு திரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும். 13 சூரியன் உதிக்கிற திசையாகிய கிழக்குப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பது முழ [5] அகலமாக இருக்கவேண்டும். 14 அங்கே ஒரு பக்கத்திற்குப் பதினைந்து முழ [6] நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். 15 மறுபக்கத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்கு திரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். 16 பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாகச் செய்யப்பட்ட இருபதுமுழ [7] நீளமான ஒரு தொங்கு திரையும் அதற்கு நான்கு தூண்களும், அவைகளுக்கு நான்கு பாதங்களும் இருக்கவேண்டும். 17 சுற்று பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் வளையம் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும். 18 பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும் [8] , இருபக்கத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாக இருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாக இருக்கவேண்டும். 19 ஆசரிப்பு கூடாரத்தின் எல்லா பணிகளுக்குத் தேவையான எல்லா பணிப்பொருட்களும், அதின் எல்லா ஆப்புகளும், பிராகாரத்தின் எல்லா ஆப்புகளும் வெண்கலமாக இருக்கவேண்டும்.
விளக்குக்கு வேண்டிய எண்ணெய் லேவி. 24:1-4.
20 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேலர்களுக்குக் கட்டளையிடு. 21 கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைக்கு வெளியே ஆரோனும் அவனுடைய மகன்களும் மாலை துவங்கி அதிகாலைவரை யெகோவாவுடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கவேண்டும்; இது இஸ்ரவேலர்களின் தேசத்திற்கு தலைமுறை தலைமுறையாக நிரந்தர கட்டளையாக இருக்கட்டும்.
Chapter 28
அத்தியாயம் 28
ஆசாரிய உடை.
யாத் 39:1-7
1 “உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ ஆரோனையும் அவனுடன் அவனுடைய மகன்களாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேலர்களிலிருந்து பிரித்து, உன்னிடம் சேர்த்துக்கொள். 2 உன்னுடைய சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, பரிசுத்த ஆடைகளை உண்டாக்கு. 3 ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு ஆடைகளை உண்டாக்க, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள எல்லாரோடும் நீ சொல்லு. 4 அவர்கள் உண்டாக்கவேண்டிய ஆடைகள்; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், வேலைப்பாடுடன் நெய்யப்பட்ட உள்சட்டையும், தலைப்பாகையும், இடுப்புக்கச்சையுமே. உன்னுடைய சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் பரிசுத்த ஆடைகளை உண்டாக்கவேண்டும். 5 அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிக்கட்டும்.
ஏபோத்து
6 “ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாகச் செய்யட்டும். 7 அது ஒன்றாக இணைக்கப்படும்படி, இரண்டு தோள்துண்டுகளின்மேலும், அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும். 8 அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சை அந்த வேலையைப்போலவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டு, அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும். 9 பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை அவைகளில் வெட்டுவாயாக. 10 அவர்கள் பிறந்த வரிசையின்படி, அவர்களுடைய பெயர்களில் ஆறு பெயர்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு பெயர்கள் மறுகல்லிலும் இருக்கவேண்டும். 11 இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக. 12 ஆரோன் யெகோவாவுக்கு முன்பாகத் தன்னுடைய இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்து தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படி கற்களாக வைக்கவேண்டும். 13 “பொன்னினால் வளையங்களைச்செய்து, 14 சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும், சுத்தப்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக.
மார்ப்பதக்கம், யாத்திராகமம். 39:8-21.
15 “நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாகச் செய்; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக. 16 அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாக இருக்கவேண்டும். 17 அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களை நிறையப் பதிக்கவும்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், 18 இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வைரமும், 19 மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், 20 நான்காம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாக இருக்கட்டும்; இவைகள் அந்தந்த வரிசையில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும். 21 இந்தக் கற்கள் இஸ்ரவேல் மகன்களின் பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாக இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய பெயர் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாக வெட்டியிருக்கவேண்டும். 22 மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து, 23 அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து, 24 பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி, 25 அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு முனைகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்பக்கத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டவேண்டும். 26 நீ இரண்டு பொன்வளையங்களை செய்து, அவைகளை ஏபோத்தின் கிழக்குபக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதனுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து, 27 வேறு இரண்டு பொன்வளையங்களைச் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்பக்கத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் வேலைப்பாடு மிகுந்த வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து, 28 மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படி, அது ஏபோத்திலிருந்து நீங்காதபடி, அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடு இளநீல நாடாவினால் கட்டவேண்டும். 29 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களின் பெயர்களைத் தன்னுடைய இருதயத்தின்மேல் இருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே யெகோவாவுடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் அணிந்துகொள்ளவேண்டும். 30 நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் [1] என்பவைகளை வைக்கவேண்டும்; ஆரோன் யெகோவாவுடைய சந்நிதானத்தில் நுழையும்போது, அவைகள் அவனுடைய இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன்னுடைய இருதயத்தின்மேல் இஸ்ரவேலர்களுடைய நியாயவிதியைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் அணிந்துகொள்ளவேண்டும்.
மற்ற ஆசாரிய உடைகள், (யாத்திராகமம் 39:22-31).
31 “ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கவேண்டும். 32 தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்திற்கு நெய்யப்பட்ட வேலைப்பாடுள்ள ஒரு நாடா சுற்றிலும் இருக்கவேண்டும்; அது கிழியாதபடி மார்க்கவசத்தின் துவாரத்திற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். 33 அதின் கீழ் ஓரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதுளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி செய்துவைக்கவேண்டும். 34 அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதுளம்பழமுமாகத் தொங்கட்டும். 35 ஆரோன் ஆராதனை செய்யக் யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்த இடத்திற்குள் நுழையும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடி, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதை அணிந்துகொள்ளவேண்டும்.
36 “சுத்தப்பொன்னினால் ஒரு தகட்டைச்செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி, 37 அது தலைப்பாகையில் இருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக. 38 இஸ்ரவேலர்கள் தங்களுடைய பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் அக்கிரமத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; யெகோவாவுடைய சந்நிதியில் அவர்கள் அங்கீகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவனுடைய நெற்றியின்மேல் இருக்கவேண்டும். 39 “மெல்லிய பஞ்சுநூலால் வேலைப்பாடு மிகுந்த உள்சட்டையும், மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும் உண்டாக்கி, இடுப்புக்கச்சையை வேலைப்பாட்டுடன் செய்யவேண்டும். 40 “ஆரோனுடைய மகன்களுக்கும், மகிமையும் அலங்காரமுமாக இருக்கும்படி, அங்கிகளையும், இடுப்புக்கச்சைகளையும், தலைப்பட்டைகளையும் உண்டாக்கவேண்டும். 41 உன்னுடைய சகோதரனாகிய ஆரோனும் அவனுடன் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அந்த ஆடைகளை அவர்களுக்கு அணிவித்து, அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைசெய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும். 42 அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படி, இடுப்புத்துவங்கி முழங்கால்வரை அணிய சணல்நூல் உள்ளாடைகளையும் உண்டாக்கவேண்டும். 43 ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும் பலிபீடத்தின் அருகில் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடி, அவைகளை அணிந்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர கட்டளை.
Chapter 29
அத்தியாயம் 29
ஆசாரியர்களின் பிரதிஷ்டை லேவி, 8:1-36
1 “அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்ய அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்படி, நீ அவர்களுக்குச் செய்யவேண்டியது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள். 2 புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லியமாவினால் செய்து, 3 அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடு அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, 4 ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் முன்பாக வரச்செய்து, அவர்களைத் தண்ணீரால் கழுவி, 5 அந்த ஆடைகளை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் அணிந்து, ஏபோத்தின் விசித்திரமான இடுப்புக்கச்சையும் அவனுக்குக் கட்டி, 6 அவன் தலையிலே தலைப்பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைத் தலைப்பாகையின்மேல் அணிந்து, 7 அபிஷேக தைலத்தை எடுத்து, அவனுடைய தலையின்மேல் ஊற்றி, அவனை அபிஷேகம் செய்யவேண்டும். 8 பின்பு அவனுடைய மகன்களை வரச்செய்து, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நிரந்தர கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்து. 9 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இடுப்புக்கச்சைகளைக் கட்டி, [1] அவனுடைய மகன்களுக்கு தொப்பிகளையும் அணிந்து, இப்படியாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பிரதிஷ்டை செய்யவேண்டும். 10 “காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அப்பொழுது ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கவேண்டும். 11 பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்து வாசலின் அருகில் யெகோவாவுடைய சந்நிதானத்தில் கொன்று, 12 அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன்னுடைய விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் பூசி, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, 13 குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து, 14 காளையின் இறைச்சியையும் அதின் தோலையும் அதின் சாணியையும் முகாமிற்கு வெளியே அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; இது பாவநிவாரணபலி. 15 “பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைத்து. 16 அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின் மேல் சுற்றிலும் தெளித்து, 17 ஆட்டுக்கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதனுடைய குடல்களையும் அதனுடைய தொடைகளையும் கழுவி, அவைகளை அந்த வெட்டப்பட்ட இறைச்சித் துண்டுகளோடும் அதனுடைய தலையோடும் வைத்து, 18 ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடு; இது யெகோவாவுக்குச் செலுத்தும் சர்வாங்கதகனபலி; இது சுகந்த வாசனையும் யெகோவாவுக்குச் செலுத்தும் தகனபலியுமாக இருக்கும். 19 “பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்தவேண்டும்; அதனுடைய தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளை வைக்கவேண்டும். 20 அப்பொழுது அந்தக் கடாவைக் கொன்று, அதனுடைய இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலது காதின் மடலிலும், அவனுடைய மகன்களின் வலது காதுகளின் மடலிலும், அவர்களுடைய வலது கைகளின் பெருவிரலிலும், அவர்களுடைய வலது கால்களின் பெருவிரலிலும் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, 21 பலிபீடத்தின்மேல் இருக்கும் இரத்தத்திலும் அபிஷேகத் தைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவனுடைய ஆடைகளும் அவனுடைய மகன்களும் அவர்களுடைய ஆடைகளும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவனுடைய ஆடைகள்மேலும் அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய ஆடைகள்மேலும் தெளிக்கவேண்டும். 22 அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவாக இருப்பதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும், 23 யெகோவாவுடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து, 24 அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவனுடைய மகன்களின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி, 25 பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்கதகனபலியோடு வைத்து, யெகோவாவுடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் எரித்துப்போடு; இது யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலி. 26 “ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டு; அது உன்னுடைய பங்காக இருக்கும். 27 மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவனுடைய மகன்களுடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்புப்பகுதியையும் உயர்த்திப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக. 28 அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதால், இஸ்ரவேலர்கள் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேர்வதாக; இஸ்ரவேலர்கள் யெகோவாவுடைய சந்நிதானத்தில் உயர்த்திப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே உயர்த்திப் படைக்கும் படைப்பாக இருக்கவேண்டும். 29 “ஆரோனின் பரிசுத்த ஆடைகள், அவனுக்குப்பின்பு, அவனுடைய மகன்களுக்கு சேரும்; அவர்கள் அவைகளை அணிந்துகொண்டு, அபிஷேகம்செய்யப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள். 30 அவனுடைய மகன்களில் அவனுடைய பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த இடத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் நுழையும்போது, அவைகளை ஏழுநாட்கள்வரை அணிந்துகொள்ளவேண்டும். 31 “பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதனுடைய இறைச்சியை பரிசுத்த இடத்தில் சமைக்கவேண்டும். 32 அந்த ஆட்டுக்கடாவின் இறைச்சியையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவனுடைய மகன்களும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே சாப்பிடவேண்டும். 33 அவர்களைப் பிரதிஷ்டைச்செய்து பரிசுத்தப்படுத்தும்படி, அவைகளால் பாவநிவிர்த்தி [2] செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் சாப்பிடவேண்டும்; அந்நியனோ அவைகளை சாப்பிடக்கூடாது; அவைகள் பரிசுத்தமானவைகள். 34 பிரதிஷ்டையின் இறைச்சியிலும் அப்பத்திலும் ஏதாவது அதிகாலைவரை மீதியாக இருந்ததால், அதை அக்கினியால் சுட்டெரிக்கவேண்டும்; அது சாப்பிடப்படக்கூடாது, அது பரிசுத்தமானது. 35 “இந்தபடி நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் செய்யவேண்டும்; ஏழுநாட்கள்வரை நீ அவர்களைப் பிரதிஷ்டைசெய்து, 36 பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பரிகாரம் செய்தபின்பு, அந்தப் பலிபீடத்தைச் சுத்திகரிக்கசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்செய்யவேண்டும். 37 ஏழுநாட்கள்வரை பலிபீடத்திற்காகப் பரிகாரம்செய்து, அதைப் பரிசுத்தமாக்கவேண்டும்; பலிபீடமானது மகா பரிசுத்தமாக இருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும்.
தினந்தோறும் இடும் பலிகள் எண்ணாகமம்: 28:1-8
38 “பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவென்றால்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். 39 ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடவேண்டும். 40 ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும், [3] இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சை ரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடன் படைக்கவேண்டும். 41 மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின ஆகாரபலிக்கும் பானபலிக்கும் ஒரேமாதிரியாக அதைக் யெகோவாவுக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும். 42 உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக்கூடாரத்தினுடைய வாசலாகிய யெகோவாவுடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே. 43 அங்கே இஸ்ரவேலர்களைச் சந்திப்பேன்; அந்த இடம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும். 44 ஆசரிப்புக்கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் பரிசுத்தப்படுத்தி, 45 இஸ்ரவேலர்களின் நடுவே நான் தங்கி, அவர்களுக்குத் தேவனாக இருப்பேன். 46 தங்கள் நடுவே நான் தங்கும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த நான் தங்களுடைய தேவனாகிய யெகோவா என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்களுடைய தேவனாகிய யெகோவா.
Chapter 30
அத்தியாயம் 30
தூப பீடம், யாத்திரா 37:25-28.
1 “தூபங்காட்டுவதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கவேண்டும். 2 அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாக [1] இருக்கவேண்டும், அதனுடைய கொம்புகள் அதனோடு ஒன்றாக இருக்கவேண்டும். 3 அதின் மேல்பக்கத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்விளிம்பை உண்டாக்கி, 4 அந்த விளிம்பின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்கவேண்டும். 5 அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளையும் பொன்தகட்டால் மூடவேண்டும். 6 சாட்சிப்பெட்டிக்கு முன்பாக இருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்திற்கும் முன்பாக அதை வைக்கவேண்டும். 7 ஆரோன் காலைதோறும் அதின்மேல் நறுமண தூபம்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபம்காட்டவேண்டும். 8 உங்களுடைய தலைமுறைதோறும் யெகோவாவுடைய சந்நிதியில் காட்டவேண்டிய நிரந்தர தூபம் இதுவே. 9 அதின்மேல் அந்நிய தூபத்தையோ, தகனபலியையோ, ஆகாரபலியையோ படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும் வேண்டாம். 10 வருடத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தால் அதின் கொம்புகளின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; உங்களுடைய தலைமுறைதோறும் வருடத்தில் ஒருமுறை அதின்மேல் பரிகாரம் செய்யவேண்டும்; அது யெகோவாவுக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் பாவநிவர்த்திக்கான பணம்
11 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 12 “நீ இஸ்ரவேலர்களை அவர்கள் எண்ணிக்கையின்படி கணக்குப்பார்க்க, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடி, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் நேரத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் யெகோவாவுக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கவேண்டும். 13 எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா [2] ; யெகோவாவுக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல். 14 எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டும். 15 உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திசெய்யும்படி நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தும்போது, செல்வந்தன் அரைச்சேக்கலுக்கு அதிகமாகக் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம். 16 அந்த பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேலர்கள் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுக்கவேண்டும்; அது யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு, இஸ்ரவேலர்களுக்கு ஞாபகக்குறியாக இருக்கும் என்றார்.
கழுவும் வெண்கலத்து தொட்டி
17 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 18 “கழுவுவதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றவேண்டும். 19 அதனிடம் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும். 20 அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போதும், யெகோவாவுக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தில் ஆராதனைசெய்ய சேரும்போதும், அவர்கள் சாகாதபடி தண்ணீரினால் தங்களைக் கழுவவேண்டும். 21 அவர்கள் சாகாதபடி தங்களுடைய கைகளையும் தங்களுடைய கால்களையும் கழுவவேண்டும்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவனுடைய சந்ததியார்களுக்கும் நிரந்தர கட்டளையாக இருக்கும் என்றார்.
அபிஷேக தைலம்
22 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 23 “மேன்மையான நறுமணப்பொருட்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த இடத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் [3] எடையையும், நறுமணப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் எடையையும், 24 இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் எடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து, 25 அதினால், பரிமளத்தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளத்தைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டாக்கு; அது பரிசுத்த அபிஷேக தைலமாக இருப்பதாக. 26 அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், 27 மேஜையையும், அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூப பீடத்தையும், 28 தகன பலிபீடத்தையும் அதின் பணிப்பொருட்கள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, 29 அவைகள் மகா பரிசுத்தமாக இருக்கும்படி, அவைகளைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாக இருக்கும். 30 ஆரோனும் அவனுடைய மகன்களும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, நீ அவர்களை அபிஷேகம்செய்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தவேண்டும். 31 இஸ்ரவேலர்களுடன் நீ பேசிச் சொல்லவேண்டியது: உங்களுடைய தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேகத் தைலமாக இருக்கவேண்டும். 32 இது மனிதர்களுடைய சரீரத்தின்மேல் ஊற்றப்படக்கூடாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவும்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாக இருக்கும். 33 இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் ஊற்றுகிறவனும், தன்னுடைய மக்களில் இராதபடி அறுப்புண்டுபோகவேண்டும் என்று சொல் என்றார்.
தூபம்
34 “பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமஎடையாக எடுத்து, 35 தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, தூய்மையான பரிசுத்த தூபவர்க்கமாக்கி, 36 அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக்கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைக்கவேண்டும்; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாக இருக்கவேண்டும். 37 இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளக்கூடாது; இது யேகோவாக்கென்று உனக்குப் பரிசுத்தமாக இருக்கவேண்டும். 38 இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன்னுடைய மக்களில் இல்லாதபடி துண்டிக்கப்படவேண்டும் என்றார்.
Chapter 31
அத்தியாயம் 31
பெசலெயேலும் அகோலியாபும். யாத். 35:30-36:1
1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: 2 “நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து, 3 வித்தியாசமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்வதற்கும், 4 இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் அலங்காரவேலைகளைச் செய்வதற்கும், 5 மற்றும் எல்லாவித வேலைகளையும் யூகித்துச் செய்வதற்கும் வேண்டிய ஞானமும், புத்தியும், அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன். 6 மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் மகனாகிய அகோலியாபையும் அவனுடன் துணையாகக் கூட்டினதுமட்டுமல்லாமல், ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் செய்வார்கள். 7 ஆசரிப்புக்கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள எல்லா பணிப்பொருட்களையும், 8 மேஜையையும் அதின் பணிப்பொருட்களையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் எல்லா கருவிகளையும், தூபபீடத்தையும், 9 தகனபலிபீடத்தையும் அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும் அதின் பாதத்தையும், 10 ஆராதனை ஆடைகளையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும், 11 அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்திற்கு வாசனைப்பொருட்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடி, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
ஓய்வுநாளின் பிரமாணம்
12 மேலும், யெகோவா மோசேயிடம்: 13 “நீ இஸ்ரவேலர்களை நோக்கி, நீங்கள் என்னுடைய ஓய்வுநாட்களை அனுசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற யெகோவா நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாக இருக்கும். 14 ஆகையால், ஓய்வுநாளை அனுசரிக்க வேண்டும்; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதின் பரிசுத்தத்தை கெடுக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; அந்த நாளிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன்னுடைய மக்களின் நடுவில் இல்லாதபடி துண்டிக்கப்பட்டுபோவான். 15 ஆறுநாட்களும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை செய்யாமல் ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். 16 ஆகையால், இஸ்ரவேலர்கள் தங்களுடைய தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக அனுசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளவேண்டும். 17 அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேலர்களுக்கும் அடையாளமாக இருக்கும்; ஆறுநாட்களுக்குள்ளே யெகோவா வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே வேலைகளை முடித்து ஓய்ந்திருந்தார் என்றார்.
18 சீனாய்மலையில் அவர் மோசேயோடு பேசி முடிந்தபின்பு, தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய இரண்டு சாட்சி பலகைகளை அவனிடம் கொடுத்தார்.
Chapter 32
அத்தியாயம் 32
பொற்கன்றுகுட்டி உபா. 9:6-29
1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை மக்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடம் கூட்டம்கூடி. அவனை நோக்கி: “எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு வந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டாக்கும்” என்றார்கள். 2 அதற்கு ஆரோன்: “உங்களுடைய மனைவிகள், மகன்கள் மற்றும் மகள்களுடைய காதுகளில் இருக்கிற தங்க ஆபரணங்களை கழற்றி, என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான். 3 மக்கள் எல்லோரும் தங்களுடைய காதுகளில் இருந்த ஆபரணங்களைக் கழற்றி, ஆரோனிடம் கொண்டுவந்தார்கள். 4 அவர்களுடைய கையிலிருந்து அவன் அந்தப் தங்கங்களை வாங்கி, சிற்பக்கருவியைக் கூர்மையாக்கி, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: “இஸ்ரவேலர்களே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே” என்றார்கள். 5 ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, “நாளைக்குக் யெகோவாவுக்குப் பண்டிகை” என்று கூறினான். 6 மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்கதகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, மக்கள் சாப்பிடவும், குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.
7 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன்னுடைய மக்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். 8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலர்களே உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்களுடைய தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள்” என்றார். 9 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த மக்களைப் பார்த்தேன்; இவர்கள் பிடிவாதமுள்ள [1] மக்கள். 10 ஆகையால் என்னுடைய கோபம் இவர்கள்மேல் வரவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய தேசமாக்குவேன்” என்றார். 11 மோசே தன்னுடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: “யெகோவாவே, தேவரீர் மகா பெலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உம்முடைய மக்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவது ஏன்? 12 மலைகளில் அவர்களைக் கொன்றுபோடவும், பூமியின்மேல் இல்லாதபடி அவர்களை அழிக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்வதற்காகவே அவர்களைப் புறப்படச்செய்தார் என்று எகிப்தியர்கள் சொல்லுவானேன்? உம்முடைய கடுங்கோபத்தைவிட்டுத் திரும்பி, உமது மக்களுக்குத் தீங்குசெய்யாதபடி, அவர்கள்மேல் பரிதாபம்கொள்ளும். 13 உமது ஊழியக்காரர்களாகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்களுடைய சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார்கள் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே” என்று கெஞ்சிப் பிரார்த்தனை செய்தான். 14 அப்பொழுது யெகோவா தமது மக்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச்செய்யாதபடி பரிதாபங்கொண்டார்.
15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவனுடைய கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. 16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாகவும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்தாகவும் இருந்தது. 17 மக்கள் ஆரவாரம் செய்கிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: “முகாமில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது” என்றான். 18 அதற்கு மோசே: “அது வெற்றியின் சத்தமும் அல்ல, தோல்வியின் சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது” என்றான். 19 அவன் முகாமிற்கு அருகே, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபமடைந்தவனாய், தன்னுடைய கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே வீசி உடைத்துப்போட்டு; 20 அவர்கள் உண்டாக்கின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் மக்கள் குடிக்கும்படி செய்தான். 21 பின்பு, மோசே ஆரோனை நோக்கி: “நீ இந்த மக்கள்மேல் இந்தப் பெரிய பாவத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள்” என்றான். 22 அதற்கு ஆரோன்: “என்னுடைய ஆண்டவனுக்குக் கோபம் வராமல் இருப்பதாக; இது பொல்லாத மக்கள் என்று நீர் அறிந்திருக்கிறீர். 23 இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்னேசெல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டாக்கும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன நடந்ததோ அறியோம்” என்றார்கள். 24 அப்பொழுது நான்: தங்கங்களை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரவேண்டும் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான்.
25 மக்கள் தங்களுடைய எதிரிகளுக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாக இருக்கிறதை மோசே கண்டு, 26 முகாமின் வாசலில் நின்று: “யெகோவாவின் பக்கம் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடம் சேரவேண்டும்” என்றான். அப்பொழுது லேவியர்கள் எல்லோரும் அவனிடம் கூடிவந்தார்கள். 27 அவன் அவர்களை நோக்கி: “உங்களில் ஒவ்வொருவனும் தன்னுடைய பட்டயத்தைத் தன்னுடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு, முகாமெங்கும் உள்ளும் வெளியும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும், ஒவ்வொருவனும் தன் தன் நண்பர்களையும், ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடவேண்டும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார்” என்றான். 28 லேவியர்கள் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்தநாளில் மக்களில் ஏறக்குறைய 3,000 பேர் இறந்தார்கள். 29 “யெகோவா இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன் தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாக இருக்கிறதினால், யெகோவாவுக்கு உங்களைப் பிரதிஷ்டைசெய்யுங்கள்” என்று மோசே சொல்லியிருந்தான். 30 மறுநாளில் மோசே மக்களை நோக்கி: “நீங்கள் மகா பெரிய பாவம் செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் யெகோவாவினிடத்திற்கு ஏறிப்போகிறேன்” என்றான். 31 அப்படியே மோசே யெகோவாவிடத்திற்குத் திரும்பிப்போய்: “ஐயோ, இந்த மக்கள் தங்கத்தினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரியபாவம் செய்திருக்கிறார்கள். 32 ஆகிலும், தேவரீர் அவர்களுடைய பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புத்தகத்திலிருந்து என்னுடைய பெயரைக் கிறுக்கிப்போடும்” என்றான். 33 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “எனக்கு விரோதமாகப் பாவம் செய்தவன் எவனோ, அவனுடைய பெயரை என்னுடைய புத்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். 34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்திற்கு மக்களை அழைத்துக்கொண்டுபோ; என்னுடைய தூதனானவர் உனக்குமுன்பு செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன்” என்றார். 35 ஆரோன் செய்த கன்றுக்குட்டியை மக்கள் செய்யவைத்ததால் யெகோவா அவர்களை வாதித்தார்.
Chapter 33
அத்தியாயம் 33
சீனாய் மலையை விட்டு புறப்பட கட்டளை.
1 யெகோவா மோசேயை நோக்கி: “நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த மக்களும் இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன்னுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த செழிப்பான தேசத்திற்குப் போங்கள். 2 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியர்களையும், எமோரியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும் ஏவியர்களையும், எபூசியர்களையும் துரத்திவிடுவேன். 3 ஆனாலும், வழியிலே நான் உங்களை அழிக்காதபடி, நான் உங்களிடம் வரமாட்டேன், நீங்கள் பிடிவாதமுள்ள [1] மக்கள்” என்றார். 4 துக்கமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, ஒருவரும் தங்களுடைய ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். 5 ஏனென்றால், “நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள், நான் ஒரு நிமிடத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை அழிப்பேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதைக்குறித்துத் தீர்மானிப்பேன் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்” என்று யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தார். 6 ஆகையால், இஸ்ரவேலர்கள் ஓரேப் மலை அருகே தங்களுடைய ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
ஆசரிப்புக்கூடாரம்
7 மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். யெகோவாவைத் தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள். 8 மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள். 9 மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; யெகோவா மோசேயோடு பேசினார். 10 மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப் பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள். 11 ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, யெகோவா மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான்.
மோசேயின் ஜெபமும் யெகோவாவுடைய மகிமையும்
12 மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு; 13 உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான். 14 அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார். 15 அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும். 16 எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான்.
17 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார். 18 அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான். 19 அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் [2] நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி, 20 நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார். 21 பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. 22 என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்; 23 பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார்.
Chapter 34
அத்தியாயம் 34
புதிய கற்பலகைகள். உபா. 1:1-5.
1 யெகோவா மோசேயை நோக்கி: “முந்தினக் கற்பலகைகளை போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். 2 அதிகாலையில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் மேல் காலையில் என்னுடைய சமுகத்தில் வந்து நில். 3 உன்னோடு ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையில் எங்கும் ஒருவனும் காணப்படவும்கூடாது; இந்த மலையின் அருகில் ஆடுமாடு மேயவும்கூடாது” என்றார். 4 அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளைப் போன்ற இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலையில் எழுந்து, யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே அந்த இரண்டு கற்பலகைகளையும் தன்னுடைய கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான். 5 யெகோவா ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, யெகோவாவுடைய நாமத்தைக் கூறினார். 6 யெகோவா அவனுக்கு முன்பாக கடந்துபோகிறபோது, அவர்: “யெகோவா, யெகோவா; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயவும், சத்தியமுள்ள தேவன். 7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றம் இல்லாதவனாக விடாமல், தகப்பன்மார்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டிக்கிறவர்” என்று கூறினார். 8 மோசே உடனே தரைவரைக்கும் குனிந்து பணிந்துகொண்டு: 9 “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த மக்கள் பிடிவாதமுள்ளவர்கள் [1] ; நீரோ, எங்களுடைய அக்கிரமத்தையும் எங்களுடைய பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.
உடன்பட்டிக்கை மறுபடியும் செய்யப்பட்டது.
யாத் 14:23; உபா 7:1-5; 16:1-17
10 அதற்கு அவர்: “இதோ, நான் ஒரு உடன்படிக்கை செய்கிறேன்; பூமியெங்கும் எந்த தேசங்களிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன்னுடைய மக்கள் எல்லோருக்கும் முன்பாகவும் செய்வேன்; உன்னோடு இருக்கிற மக்கள் எல்லோரும் யெகோவாவுடைய செயல்களைக் காண்பார்கள்; உன்னோடு இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாக இருக்கும். 11 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியர்களையும், கானானியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும், ஏவியர்களையும், எபூசியர்களையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன். 12 நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்யாதபடி எச்சரிக்கையாக இரு; செய்தால் அது உன்னுடைய நடுவில் கண்ணியாக இருக்கும். 13 அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, சிலைகளைத் தகர்த்து, தோப்புகளை வெட்டிப்போடுங்கள். 14 யெகோவாவுடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவன்; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். 15 அந்த தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கை செய்வாயானால், அவர்கள் தங்களுடைய தெய்வங்களைப் பின்பற்றி, விபசாரம் செய்வார்கள், தங்களுடைய தெய்வங்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கும்போது, நீ போய், அவனுடைய பலி செலுத்தியதில் சாப்பிடுவாய்; 16 அவர்கள் மகள்களில் உன்னுடைய மகன்களுக்கு பெண்களை எடுப்பாய்; அவர்கள் மகள்கள் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றுவதும் இல்லாமல், உன்னுடைய மகன்களையும் தங்களுடைய தெய்வங்களை விபசார மார்க்கமாகப் பின்பற்றும்படி செய்வார்கள். 17 வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம். 18 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுவீர்கள்; ஆபீப் மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே. 19 கர்ப்பம்திறந்து பிறக்கிற அனைத்தும், உன்னுடைய ஆடுமாடுகளின் முதற்பிறப்பான ஆண்கள் யாவும் என்னுடையவைகள். 20 கழுதையின் முதற்பிறப்பை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாமல் இருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன்னுடைய பிள்ளைகளில் முதலில் பிறந்தவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடு என்னுடைய சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது. 21 ஆறுநாட்கள் வேலைசெய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திரு; விதைப்புக் காலத்திலும் அறுப்புக் காலத்திலும் ஓய்ந்திரு. 22 கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருடமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் அனுசரி. 23 வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய ஆண்மக்கள் எல்லோரும் இஸ்ரவேலின் தேவனாக இருக்கிற யெகோவாகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும். 24 நான் தேசங்களை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, உங்களுடைய எல்லைகளை விரிவாக்குவேன்; வருடத்தில் மூன்றுமுறை உங்களுடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதிக்கு முன்பாக தோன்றும்போது ஒருவரும் உங்களுடைய தேசத்தின் மீது படையெடுக்க ஆசைப்படுவதில்லை. 25 எனக்கு செலுத்தும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை அதிகாலைவரை வைக்கவும் வேண்டாம். 26 உங்களுடைய நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலனை உங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதினுடைய தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்” என்றார். 27 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி: “இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படி உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கை செய்தேன்” என்றார். 28 அங்கே அவன் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் யெகோவாவோடு இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான்.
பிரகாசமான மோசேயின் முகம்
29 மோசே உடன்படிக்கையின் கட்டளைப் பலகைகள் இரண்டையும் தன்னுடைய கையில் எடுத்துக்கொண்டு, சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடு அவர் பேசினதாலே தன்னுடைய முகம் பிரகாசமாக இருப்பதை அவன் அறியாமல் இருந்தான். 30 ஆரோனும் இஸ்ரவேலர்கள் எல்லோரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டு, அவன் அருகில் வரப்பயந்தார்கள். 31 மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள தலைவர்கள் அனைவரும் அவனிடத்திற்குத் திரும்பி வந்தார்கள்; மோசே அவர்களுடன் பேசினான். 32 பின்பு இஸ்ரவேல் மக்கள் எல்லோரும் அவனிடம் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய் மலையில் யெகோவா தன்னோடு பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான். 33 மோசே அவர்களுடன் பேசி முடியும்வரை, தன்னுடைய முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான். 34 மோசே யெகோவாவுடைய சந்நிதியில் அவரோடு பேசும்படி உள்ளே நுழைந்ததுமுதல் வெளியே புறப்படும்வரை முக்காடு போடாமல் இருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேலர்களுடன் சொல்லும்போது, 35 இஸ்ரவேலர்கள் அவனுடைய முகம் பிரகாசமாக இருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடு பேசும்படி உள்ளே நுழையும்வரை, முக்காட்டைத் திரும்பத் தன்னுடைய முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.
Chapter 35
அத்தியாயம் 35
ஓய்வு நாளுக்குரிய ஒழுங்குமுறைகள்
1 மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: 2 “நீங்கள் ஆறுநாட்கள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாக இருப்பதாக; அது யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். 3 ஓய்வுநாளில் உங்களுடைய வீடுகளில் நெருப்பு மூட்டாதிருங்கள் என்னும் இந்த வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி யெகோவா கட்டளையிட்டார்” என்றான்.
ஆசரிப்புக்கூடாரத்தின் பணிப்பொருட்கள். யாத். 25:1-9, 39:32-43.
4 பின்னும் மோசே இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரையும் நோக்கி, 5 “உங்களுக்கு இருப்பதிலே யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; யெகோவாவுக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், 6 இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு முடியும், 7 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலும், மெல்லிய தோலும், சீத்திம் மரமும், 8 விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகத்தைலத்திற்கு பரிமளத்தைலமும், தூபத்திற்கு நறுமணப் பொருட்களும், 9 ஆசாரியர்களுடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கவேண்டியது கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே. 10 “உங்களில் ஞானஇருதயமுள்ள அனைவரும் வந்து, யெகோவா கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக. 11 ஆசரிப்புக்கூடாரத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், 12 பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும், 13 மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும், 14 வெளிச்சம்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும், 15 தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், ஆசரிப்புக்கூடார வாசலுக்குத் தொங்கு திரையையும், 16 தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும், 17 பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்கு திரையையும், 18 கூடாரத்தின் முளைகளையும், ஆசரிப்புக்கூடாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும், 19 பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியம்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும் அவனுடைய மகன்களின் ஆடைகளையும் அவர்கள் செய்யவேண்டும் என்றான்.
ஆசரிப்புக்கூடாரத்திற்கு கொடுக்கபட்ட காணிக்கைகள்.
20 அப்பொழுது இஸ்ரவேலர்களாகிய சபையார்கள் எல்லோரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள். 21 பின்பு எவர்களை அவர்களுடைய இருதயம் எழுப்பி, எவர்களை அவர்களுடைய ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லோரும் ஆசரிப்புக்கூடாரத்தின் வேலைக்கும், அதின் எல்லா ஊழியத்திற்கும், பரிசுத்த ஆடைகளுக்கும் ஏற்றவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். 22 மனப்பூர்வமுள்ள ஆண்கள் பெண்கள் அனைவரும், தங்கத்தினாலான ஊசிகள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான எல்லாவித பொன் ஆபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் தங்கத்தைக் காணிக்கையாகச் செலுத்தினான். 23 இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு முடியையும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலையும் மெல்லிய தோலையும் வைத்திருந்த எல்லோரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். 24 வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கும் அனைவரும் அவைகளைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தை வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். 25 ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள். 26 எந்த பெண்களுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லோரும் வெள்ளாட்டு முடியைத் திரித்தார்கள். 27 தலைவர்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும், 28 நறுமணப் பொருட்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகத் தைலத்திற்கும் வாசனை தூபத்திற்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள். 29 செய்யப்படும்படி யெகோவா மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேலர்களுக்குள் தங்களுடைய இருதயத்தில் உற்சாகமடைந்த ஆண்கள் பெண்கள் அனைவரும் யெகோவாவுக்குக் காணிக்கையை மனப்பூர்வமாக கொண்டுவந்தார்கள்.
பெசலெயேலும் அகோலியாபும். யாத். 31:1-11
30 பின்பு மோசே இஸ்ரவேலர்களை நோக்கி: “பாருங்கள், யெகோவா யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து, 31 அவன் மிகுந்த விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், தங்கத்திலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலை செய்யவும், 32 இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திரவேலை செய்து எல்லா வித்தியாசமான வேலைகளைச் செய்யவும், 33 அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி தேவ ஆவியினாலே அவனை நிரப்பினார். 34 அவனுடைய இருதயத்திலும், தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார். 35 சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல் வேலையையும், எல்லா விசித்திர நெசவு வேலைகளையும் வித்தியாசமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் எல்லாவித வேலைகளையும் செய்யும்படி அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார்” என்றான்.
Chapter 36
அத்தியாயம் 36
ஆசாரிப்புக்கூடார பணிக்கு மக்கள் விருப்பமான காணிக்கைகளை கொண்டுவந்தார்கள்
1 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் திருப்பணிகளைச் சேர்ந்த எல்லா வேலைகளையும், யெகோவா கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், வேலை செய்யத்தெரிந்த யெகோவாவால் ஞானமும், புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரோடும் செய்யத்தொடங்கினார்கள். 2 பெசலெயேலையும், அகோலியாபையும் யெகோவாவால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்களுடைய இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயமுள்ளவர்களாகிய எல்லோரையும், மோசே வரவழைத்தான். 3 அவர்கள், இஸ்ரவேலர்கள் திருப்பணிகளின் எல்லா வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருட்களையெல்லாம், மோசேயிடம் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் மக்கள் காலைதோறும் தங்களுக்கு விருப்பமான காணிக்கைகளை அவனிடம் கொண்டுவந்தார்கள். 4 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகளைச் செய்கிற அனைவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாக வந்து, 5 மோசேயை நோக்கி: “யெகோவா செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை மக்கள் கொண்டுவருகிறார்கள்” என்றார்கள். 6 அப்பொழுது மோசே “இனி ஆண்களோ பெண்களோ பரிசுத்த ஸ்தலத்திற்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம்” என்று முகாம் எங்கும் சொல்லும்படிக் கட்டளையிட்டான்; இப்படியாக மக்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது. 7 செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாகவும் இருந்தது.
ஆசரிப்புக்கூடாரத்தை உண்டாக்குதல்
யாத் 26:1-37
8 வேலை செய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள அனைவரும் ஆசரிப்புக்கூடாரத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், வித்தியாசமான நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைச் செய்தான். 9 மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாக இருந்தது. 10 ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான். 11 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது வளையங்களை உண்டாக்கி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டாக்கினான். 12 வளையங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாக இருந்தது. 13 ஐம்பது பொன் கொக்கிகளையும் செய்து, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஆசாரிப்புக்கூடாரம் ஒன்றானது. 14 ஆசரிப்புக்கூடாரத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டு ரோமத்தால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் செய்தான். 15 ஒவ்வொரு மூடுதிரையும் முப்பது முழ நீளமும் நான்கு முழ அகலமுமாக இருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாக இருந்தது. 16 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து, 17 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி, 18 கூடாரத்தை ஒன்றாக இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான். 19 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும் அதின்மேல் போட மெல்லிய தோலினால் ஒரு மூடியையும் உண்டாக்கினான்.
20 ஆசரிப்புக்கூடாரத்தில் நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான். 21 ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரைமுழ அகலமுமாக இருந்தது. 22 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு பொருந்தும் முனைகள் இருந்தது; ஆசரிப்புக்கூடாரத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான். 23 ஆசரிப்புக்கூடாரத்திற்காக செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தெற்குதிசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி, 24 அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டாக்கினான்; ஒரு பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு பொருந்தும் முனைகளுக்கும் இரண்டு பாதங்களையும் செய்துவைத்து; 25 ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப்பாதங்களையும் செய்தான். 26 ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான். 27 ஆசரிப்புக்கூடாரத்தின் மேற்கு பக்கத்திற்கு ஆறு பலகைகளையும், 28 ஆசரிப்புக்கூடாரத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான். 29 அவைகள் கீழே இணைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இணைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலும் உள்ள அந்த இரண்டிற்கும் அப்படியே செய்தான். 30 அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது. 31 சீத்திம் மரத்தால் ஆசரிப்புக்கூடாரத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், 32 ஆசரிப்புக்கூடாரத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்கு புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் செய்தான். 33 நடுத்தாழ்ப்பாள் ஒருமுனை துவங்கி மறுமுனைவரை பலகைகளின் மையத்தில் செல்லும்படி செய்தான். 34 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால்செய்து, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான்.
35 இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும், சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்கள் உள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டாக்கி, 36 அதற்குச் சீத்திம் மரத்தினால் நான்கு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன் தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால்செய்து, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான்.
37 கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்கு திரையையும், 38 அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவான ஆணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாக இருந்தது.
Chapter 37
அத்தியாயம் 37
உடன்படிக்கைப் பெட்டி உண்டாக்கப்படுதல் யாத்திராகமம் 25:10-22.
1 பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டாக்கினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது. 2 அதை உள்ளும் வெளியும் சுத்தப்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி, 3 அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படித் தைத்து, 4 சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, 5 அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான். 6 கிருபாசனத்தையும் [1] சுத்தப்பொன்னினால் செய்தான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது. 7 தகடாக அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே, 8 ஒருபக்கத்து ஓரத்தில் ஒரு கேருபீனும் மறுபக்கத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடு ஒரே வேலைப்பாடாகவே செய்தான். 9 அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளாகவும் இருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.
மேஜை செய்யப்பட்டது, யாத்திராகமம். 25:23-30
10 மேஜையையும் சீத்திம் மரத்தால் செய்தான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது. 11 அதைப் சுத்தப் பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி, 12 சுற்றிலும் அதற்கு நான்கு விரல் அளவான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் விளிம்பையும் உண்டாக்கி, 13 அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நான்கு கால்களுக்கு இருக்கும் நான்கு மூலைகளிலும் தைத்தான். 14 அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாக இருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது. 15 மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, 16 மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிப்பொருட்களையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் சுத்தப்பொன்னினால் உண்டாக்கினான்.
குத்துவிளக்கு செய்யப்பட்டது, யாத். 25:31-40
17 குத்துவிளக்கையும் சுத்தப்பொன்னினால் அடிப்பு வேலையாக உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது. 18 குத்துவிளக்கின் ஒருபக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது. 19 ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது. 20 விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நான்கு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது. 21 அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருந்தது. 22 அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் சுத்தப்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாகச் செய்யப்பட்டது. 23 அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் சுத்தப்பொன்னினால் செய்தான். 24 அதையும் அதின் பணிப்பொருட்கள் யாவையும் ஒரு தாலந்து/ 35 கிலோ. சுத்தப்பொன்னினால் செய்தான்.
தூப பீடம் செய்யப்பட்டது. யாத்திராகமம். 30:1-5
25 தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாக இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஒரே வேலைப்பாடாக இருந்தது. 26 அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், சுத்தப்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் விளிம்பை உண்டாக்கி, 27 அந்த விளிம்பின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களை செய்து, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து, 28 சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான்.
அபிஷேகத் தைலமும் வாசனைப்பொருட்களும் செய்யப்பட்டது. யாத். 30:22-38.
29 பரிசுத்த அபிஷேகத் தைலத்தையும், சுத்தமான வாசனைப்பொருட்களின் நறுமணங்களையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டாக்கினான்.
Chapter 38
அத்தியாயம் 38
தகனபலிபீடம் செய்யப்பட்டது. யாத். 27:1-8.
1 தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழநீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது. 2 அதின் நான்கு மூலைகளிலும் அதனோடு ஒன்றாக அதின் நான்கு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத்தகட்டால் மூடி, 3 அந்தப் பீடத்தின் எல்லா பணிப்பொருட்களாகிய சாம்பல் எடுக்கும் சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பணிப்பொருட்களையெல்லாம் வெண்கலத்தினால் செய்தான். 4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கும்படியாக வைத்து, 5 அந்த வெண்கலச் சல்லடையின் நான்கு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நான்கு வளையங்களை வார்ப்பித்து, 6 அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் செய்து, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி, 7 பலிபீடத்தை அவைகளால் சுமக்கும்படியாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளால் செய்தான்.
8 ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாகக் கூடின பெண்கள் கண்ணாடியாக பயன்படுத்தின வெண்கலத்தாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.
ஆசரிப்பு கூடாரத்தின் பிராகாரம் உண்டாக்கப்பட்டது. யாத்திராகமம். 27:9-19.
9 பிராகாரத்தையும் உண்டாக்கினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்திற்கு திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்கு திரைகளைச் செய்தான். 10 அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி. 11 வடபக்கத்துத் தொங்கு திரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் கம்பிகளும் வெள்ளி. 12 மேற்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி. 13 சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்கு திரைகள் ஐம்பது முழம். 14 ஒருபுறத்துத் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. 15 பிராகாரவாசலின் ஒருபுறத்திற்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்கு திரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. 16 சுற்றுபிராகாரத்துத் தொங்கு திரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது. 17 தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும், கம்பிகளும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிக்கம்பிகள் போடப்பட்டவைகளுமாக இருந்தது. 18 பிராகாரத்தின் வாசலின் தொங்கு திரை இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட சித்திரத்தையல் வேலையாக இருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்கு திரைகளைப்போல ஐந்து முழம். 19 அவைகளின் தூண்கள் நான்கு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நான்கு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் கம்பிகளும் வெள்ளி. 20 ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பிராகாரத்திற்கும் சுற்றிலும் இருந்த ஆப்புகளெல்லாம் வெண்கலம்.
ஆசரிப்புக்கூடாரத்தின் பொருள்கள்.
21 மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் மகனாகிய இத்தாமாரின் கையிலே லேவியர்களின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் ஆசரிப்புக்கூடாரத்தின் பொருள்களின் தொகை இதுவே. 22 யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் யெகோவா மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான். 23 அவனுடன் தாண் கோத்திரத்தின் அகிசாமாகின் மகனாகிய அகோலியாப் அலங்காரக் கொத்துவேலைக்காரனும், வித்தியாசமான வேலைகளைச்செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத்தையல் வேலை செய்கிறவனுமாக இருந்தான்.
24 பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் எல்லாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் [1] நிறையுமாக இருந்தது.
25 சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் [2] நிறையுமாக இருந்தது. 26 எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பதுபேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது. 27 அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்க்கப்பட்டது; பாதத்திற்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவானது. 28 அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குக் கொக்கிகளைச்செய்து, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குக் கம்பிகளை உண்டாக்கினான். 29 காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாக இருந்தது. 30 அதினாலே ஆசரிப்புக்கூடாரத்தின் வாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் எல்லாப் பணிப்பொருட்களையும், 31 சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், ஆசரிப்புக்கூடாரத்தின் எல்லா ஆப்புகளையும், சுற்றுப்பிராகாரத்தின் எல்லா ஆப்புகளையும் செய்தான்.
Chapter 39
அத்தியாயம் 39
ஆசாரிய உடைகள் செய்யப்பட்டது யாத். 28:1-14.
1 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய ஆடைகளையும், ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளையும் செய்தார்கள்.
ஏபோத் செய்யப்பட்டது
2 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். 3 அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பர நூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து வித்தியாசமான வேலையாக நெய்யும்படி, மெல்லிய தகடுகளாக அடித்து, அவைகளை கம்பிகளாகச் செய்தார்கள். 4 இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது. 5 அந்த ஏபோத்தின்மேலிருக்கும் வித்தியாசமான வார்க்கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது.
6 இஸ்ரவேலின் பன்னிரெண்டு மகன்களின் பெயர்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள். 7 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேலின் பன்னிரண்டு மகன்களைக் குறித்து ஞாபகக்குறிக் கற்களாக இருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான்.
மார்ப்பதக்கம் செய்யப்பட்டது. யாத். 38:1-7
8 மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த வித்தியாசமானவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். 9 அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாகச் செய்து, ஒரு ஜாண் நீளமும். ஒரு ஜாண் அகலமுமாக்கி, 10 அதிலே நான்கு வரிசை இரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் வரிசை பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், 11 இரண்டாம் வரிசை மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், 12 மூன்றாம் வரிசை கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், 13 நாலாம் வரிசை படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன்குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது. 14 இந்தக் கற்கள் இஸ்ரவேலின் மகன்களுடைய பெயர்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய பெயர்கள் உள்ளவைகளுமாக இருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் பெயர் ஒவ்வொன்றில் முத்திரைவெட்டாக வெட்டியிருந்தது. 15 மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான சுத்தப்பொன் சங்கிலிகளையும் செய்து, 16 இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து, 17 பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி, 18 பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள். 19 பின்னும் இரண்டு வளையங்களைச்செய்து, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்பக்கத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து, 20 வேறே இரண்டு பொன்வளையங்களையும் செய்து, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான வார்க்கச்சைக்கு மேலாகவும் வைத்து, 21 மார்ப்பதக்கம் ஏபோத்தின் வித்தியாசமான வார்க்கச்சைக்கு மேலாக இருக்கும்படியும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடியும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடு இளநீல நாடாவினாலே, யெகோவா மோசேக்குக் கற்பித்தப்படியே, கட்டினார்கள்.
மற்ற ஆசாரிய உடைகள் செய்யப்பட்டது.
யாத். 28:31-43.
22 ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான். 23 அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்திற்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது. 24 அங்கியின் கீழ்ஓரங்களில் தொங்கும்படியாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதுளம்பழங்களைச் செய்து, 25 சுத்தப்பொன்னினால் மணிகளையும் செய்து, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதுளம்பழங்களின் இடையிடையே தொங்கவைத்தார்கள். 26 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதுளம்பழமுமாக இருந்தது.
27 ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும், 28 மெல்லிய பஞ்சுநூலால் தலைப்பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் உள்ளாடைகளையும், 29 திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடுப்புக்கச்சையையும், யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே செய்தார்கள்.
30 பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் சுத்தப்பொன்னினாலே செய்து, யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாகவெட்டி, 31 அதை உயர தலைப்பாகையின்மேல் கட்டும்படி, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள்.
மோசே ஆசரிப்புக்கூடாரத்தைப் பார்வையிடுதல். யாத். 35:10-19.
32 இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் செய்தார்கள்.
33 பின்பு. வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிப்பொருட்களையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், 34 சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், மெல்லிய தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும், 35 சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், 36 மேஜையையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், சமுகத்து அப்பங்களையும், 37 சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாக ஒழுங்குப்படுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிப்பொருட்களையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும், 38 பொற்பீடத்தையும், அபிஷேகத் தைலத்தையும், நறுமணப் பொருட்களையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்கு திரையையும், 39 வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், தொட்டியையும், அதின் பாதத்தையும், 40 பிராகாரத்தின் தொங்கு திரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் ஆப்புகளையும், ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வேலையின் எல்லா பணிப்பொருட்களையும், 41 பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்குரிய ஆடைகளையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த ஆடைகளையும், அவனுடைய மகன்களின் ஆடைகளையும் கொண்டுவந்தார்கள். 42 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் மக்கள் எல்லா வேலைகளையும் செய்தார்கள். 43 மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; யெகோவா கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.
Chapter 40
அத்தியாயம் 40
ஆசரிப்புக்கூடாரத்தை பிரதிஷ்டைசெய்தல்
1 யெகோவா மோசேயை நோக்கி: 2 “நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசஸ்தலத்தை பிரதிஷ்டைசெய். 3 அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து, 4 மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதை சரியாக வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி, 5 பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்தின் வாசலின் தொங்கு திரையைத் தூக்கிவைக்கக்கடவாய். 6 பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, 7 தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி, 8 சுற்று பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்கு திரையைத் தூக்கிவைத்து, 9 அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்செய்து, அதையும் அதிலுள்ள எல்லாப் பணிப்பொருட்களையும் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது பரிசுத்தமாக இருக்கும். 10 தகனபலிபீடத்தையும், அதின் எல்லா பணிப்பொருட்களையும், அபிஷேகம்செய்து, அதைப் பரிசுத்தப்படுத்து; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாக இருக்கும். 11 தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்செய்து, பரிசுத்தப்படுத்து. 12 பின்பு ஆரோனையும் அவனுடைய மகன்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் வரச்செய்து, அவர்களை தண்ணீரால் குளிக்கவைத்து, 13 ஆரோனுக்குப் பரிசுத்த ஆடைகளை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவனை அபிஷேகம்செய்து, அவனைப் பரிசுத்தப்படுத்து. 14 அவன் மகன்களையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, 15 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்செய்தபடியே, அபிஷேகம்செய்; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நிரந்தர ஆசாரியத்துவத்திற்கு ஏதுவாக இருக்கும் என்றார். 16 யெகோவா தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான்.
17 இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் நிறுவப்பட்டது. 18 மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி, 19 வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, யெகோவா தனக்குக் கற்பித்தபடியே போட்டான். 20 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து, 21 பெட்டியை வாசஸ்தலத்திற்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான். 22 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக்கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாகத் திரைக்குப் புறம்பாக வைத்து, 23 அதின்மேல் யெகோவாவுடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கிவைத்தான். 24 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக்கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து, 25 யெகோவாவுடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான். 26 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக்கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து, 27 அதின்மேல் நறுமணப்பொருட்களால் தூபம்காட்டினான். 28 பின்பு, யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்கு திரையைத் தூக்கிவைத்து, 29 தகனபலிபீடத்தை ஆசரிப்புக்கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான். 30 அவன் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான். 31 அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள். 32 யெகோவா மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே நுழைகிறபோதும், பலிபீடத்தினருகில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள். 33 பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றி பிராகாரத்தை அமைத்து, பிராகாரத்தின் தொங்கு திரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாக மோசே வேலையை முடித்தான்.
யெகோவாவுடைய மகிமை
எண் 9:15-23
34 அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பியது. 35 மேகம் அதின்மேல் தங்கி, யெகோவாவுடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழையமுடியாமல் இருந்தது. 36 வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் மக்கள் பயணம்செய்யப் புறப்படுவார்கள். 37 மேகம் எழும்பாமல் இருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பயணம் செய்யாமல் இருப்பார்கள். 38 இஸ்ரவேல் மக்கள் செய்யும் எல்லாப் பயணங்களிலும் அவர்களெல்லோருடைய கண்களுக்கும் நேரடியாக பகலில் யெகோவாவுடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.