நாகூம்
ஆசிரியர்
நாகூமின் ஆசிரியர் நாகூம் என்று 1:1 ல் கூறப்பட்டுள்ளது. நாகூம் என்பதற்கு தேற்றரவாளன் என்று அர்த்தம். அசீரியா ராஜ்ஜியத்தின் நினிவே பட்டணத்து மக்கள் மனம்திரும்பும்படி அழைக்கிறான். 150 வருடங்களுக்கு முன்பு யோனாவின் செய்தியினால் நினிவே மக்கள் மனம்திரும்பினார்கள். இப்பொழுதோ மறுபடியும் விக்கிரகராதனைக்கு போய்விட்டார்கள்.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. 620 க்கும் 612 கிமு. க்கும். இடையில் எழுதப்பட்டது.
இரண்டு சரித்திர நிகழ்ச்சிகள், நினிவேயின் வீழ்ச்சி, மற்றும் தேபெஸின் வீழ்ச்சியின் மத்தியில் நாகூம் புத்தகம் எழுதப்பட்டதால், இதின் காலம் சுலபமாக கண்டுப்பிடிக்கப்பட்டது.
யாருக்காக எழுதப்பட்டது
அசீரியர், இஸ்ரவேலின் பத்து வடஇராஜ்ஜியங்களில் உள்ள கோத்திரங்களை சிறைப்பிடித்து போய் விட்டவர்களுக்கும், இதே மாதிரி நமக்கும் நடக்கலாம் என்று பயந்திருந்த தென்ராஜ்ஜிய யூதா மக்களுக்கும் எழுதப்பட்டது.
எழுதப்பட்ட நோக்கம்
தேவனுடைய நியாயம் சரியானது, நிச்சயமானது. தேவன் தயவு காட்டினாலும் தன்னுடைய நீதி நியாயத்தை புரட்டமாட்டார். இந்த தீய பாதையிலேப் போனால் என்ன அழிவு வரும் என்று 150 வருடங்களுக்கு முன்னரே, யோனா தீர்க்கதரிசி மூலமாக எச்சரிக்கப்பட்டார்கள். யோனாக் காலத்து நினிவே மக்கள் மனம் திரும்பினார்கள், இன்றோ என்னும் அதிகமாக தீமை செய்கிறார்கள். அசீரியர்கள் தாங்கள் அடைந்த வெற்றிகளினிமித்தம் மூர்க்கவெறியர்களாகி விட்டனர். ஆகையால், தேவன் அவர்களை நியாயம் விசாரிக்கபோவதால், யூதா மக்கள் சோர்ந்து போகவேண்டாம் என்று சொல்லுகிறான்.
மையக் கருத்து.
ஆறுதல்.
பொருளடக்கம் 1 தேவனின் மகிமை — 1:1-14 2 நினிவே மேல் வரும் தேவனின் நியாயத்தீர்ப்பு. — 1:15-3:19Chapter 1
அத்தியாயம் 1
தம்முடைய எதிரிகளின்மேல் தேவனுடைய கோபம்
1 நினிவே பட்டணத்தைக் குறித்த எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புத்தகம். 2 யெகோவா எரிச்சலுள்ளவரும் நீதியை நிலைநாட்டுகிறவருமான தேவன்; யெகோவா நீதிசெய்கிறவர், கடுங்கோபமுள்ளவர்; யெகோவா தம்முடைய எதிரிகளுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர். அவர் தம்முடைய பகைவர்கள்மேல் என்றும் கோபம் வைக்கிறவர். 3 யெகோவா நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களைத் தண்டனையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; யெகோவாவுடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்திலுள்ள தூசியாயிருக்கிறது. 4 அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகச்செய்து, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும். 5 அவர் சமுகத்தில் மலைகள் அதிர்ந்து கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் உலகமும் பூமியும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போகும். 6 அவருடைய கோபத்திற்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய கடுங்கோபத்திலே நிலைநிற்பவன் யார்? அவருடைய எரிச்சல் நெருப்பைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பெயர்க்கப்படும். 7 யெகோவா நல்லவர், இக்கட்டு நாளிலே பாதுகாப்பான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். 8 ஆனாலும் நினிவேயின் நிலையை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் முற்றிலுமாக அழிப்பார்; இருள் அவருடைய எதிரிகளைப் பின்தொடரும். 9 நீங்கள் யெகோவாவுக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் முற்றிலுமாக அழிப்பார்; துன்பம் மறுபடியும் உண்டாகாது. 10 அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாக இருக்கும்போதும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கும்போதும், அவர்கள் முழுவதும் காய்ந்துபோன சருகைப்போல எரிந்துபோவார்கள். 11 யெகோவாவுக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற தீய ஆலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான். 12 யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அழிந்துபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன். 13 இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் பாரத்தை எடுத்துப்போட்டு, உன் கட்டுகளை அறுப்பேன். 14 உன்னைக்குறித்துக் யெகோவா கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பெயரை நிலை நாட்ட வாரிசு உருவாவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்டசிலையையும், வார்க்கப்பட்ட சிலையையும், நான் அழியச்செய்வேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன். 15 இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை அனுசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; தீயவன் இனி உன் வழியாகக் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் அழிக்கப்பட்டான்.
Chapter 2
அத்தியாயம் 2
நினிவேயின் அழிவு
1 சிதறடிக்கிறவன் உன் முகத்திற்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல் செய், இடுப்பைக் கெட்டியாகக் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் உறுதிப்படுத்து. 2 வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சைக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், யெகோவா யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரச் செய்வதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரச் செய்வார். 3 அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய போர்வீரர்கள் இரத்தாம்பரம் அணிந்து கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்செய்யும் நாளிலே இரதங்கள் மின்னுகிற சக்கரங்களை உடையதாக இருக்கும்; ஈட்டிகள் குலுங்கும். 4 இரதங்கள் தெருக்களில் கடகட என்று ஓடி, வீதிகளில் இடதுபக்கமும் வலதுபக்கமும் வரும்; அவைகள் தீப்பந்தங்களைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாகப் பறக்கும். 5 அவன் தன் பிரபலமானவர்களை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, கோட்டை சுவருக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும். 6 ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரண்மனை கரைந்துபோகும். 7 அவள் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள். 8 நினிவே ஆரம்பகாலமுதல் தண்ணீர் நிறைந்த குளம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை. 9 வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; செல்வத்திற்கு முடிவில்லை; விரும்பப்படத்தக்க சகலவித பொருட்களும் இருக்கிறது. 10 அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லோருடைய முகங்களும் கருகிப்போகிறது. 11 சிங்கங்களின் குடியிருப்பு எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் வசிக்கிற இடம் எங்கே? 12 சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைக் கொன்று, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், கொன்றுபோட்டவைகளினால் தன் இருப்பிடங்களையும் நிரப்பிற்று. 13 இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களை எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களை அழிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையை தேசத்தில் இல்லாமல்போகச் செய்வேன்; உன் பிரதிநிதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
Chapter 3
அத்தியாயம் 3
நினிவே நகரத்திற்கு ஐயோ
1 இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ, அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது. 2 சாட்டைகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும், 3 வீரர்கள் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் பிரகாசிக்கிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் குவியலும், பிரேதங்களின் மிகுதியும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்கு கணக்கில்லை; அவர்கள் பிணங்களில் தடுக்கிவிழுகிறார்கள். 4 தன் வேசித்தனங்களினால் தேசங்களையும், தன் சூனியங்களினால் மக்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய மிகுதியான வேசித்தனங்களினிமித்தம், 5 இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் ஆடையின் ஓரங்களை உன் முகம்வரை தூக்கியெடுத்து, தேசங்களுக்கு உன் நிர்வாணத்தையும், இராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் வெளிப்படுத்தி, 6 உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 7 அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர்கள் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டு ஓடிப் போவான். 8 நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் [1] பார்க்கிலும் நீ சிறப்பானவனோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் பாதுகாப்பும், சமுத்திரத்தில் இணையும் ஆறுகள் அதின் மதிலுமாயிருந்தன. 9 எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது. 10 ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள். 11 நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் எதிரிக்குத் தப்ப பாதுகாப்பான கோட்டையைத் தேடுவாய். 12 உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம், சாப்பிடுகிறவன் வாயிலே விழும். 13 இதோ, உன் நடுவில் இருக்கிற மக்கள் பயந்தவர்கள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் எதிரிக்குமுன் திறக்கப்பட்டுப்போகும்; நெருப்பு உன் தாழ்ப்பாள்களைச் சுட்டெரிக்கும். 14 முற்றுகைக்குத் தண்ணீர் கொண்டுவந்து வை. உன் பாதுகாப்புகளைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையை உறுதிப்படுத்து. 15 அங்கே நெருப்பு உன்னைச் சுட்டெரிக்கும், பட்டயம் உன்னை அழிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னை அழித்துவிடும்; உன்னைப் பச்சைக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளைப்போல் அதிகமாக்கிக்கொள். 16 உன் வியாபாரிகளை வானத்தின் நட்சத்திரங்களைவிட அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப்பறந்துபோகும். 17 உன் சிறந்த தலைவர்கள் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளபதிகள் பெருங்கிளிகளுக்கும் சமமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் முகாமிட்டு, சூரியன் உதித்த உடனேயே பறந்துபோகும்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது. 18 அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலமானவர்கள் படுத்திருப்பார்கள்; உன் மக்கள் மலைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை. 19 உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர்கள் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார் மேலேதான் பாயாமற்போனது?