நீதிமொழிகள்
ஆசிரியர்
சாலோமோன் ராஜா நீதிமொழிகளின் முக்கிய ஆசிரியர். நீதிமொழிகள் 1:1 லும், 10: 1 லும், 25:1 லும் சாலோமோனின் பெயர் காணப்படுகிறது. மற்ற ஆசிரியர்கள் ஆகூர், ராஜாவாகிய லேமுவேல் எசேக்கியா ராஜாவின் ஞானிகளும் எழுதியிருக்கிறார்கள். மற்ற வேத புத்தகத்தைப் போல் தேவனுடைய இரட்சிப்பின் திட்டத்தை மறைமுகமாக சுட்டிகாட்டுகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய நீதியின் வழியான தேவனுடைய வழியில் நடக்க போதிக்கிறது. சாலோமோன் தன் வாழ்க்கை அனுபவத்தில் கற்றுக்கொண்ட காரியங்களை எழுதிவைக்க தேவனால் ஏவப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்
ஏறக்குறைய கி. மு. 971 க்கும் 686 க்கும். இடையில் எழுதப்பட்டது.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சாலோமோன் ராஜாவாக ஆட்சி செய்த காலத்தில் எழுதப்பட்ட நீதிமொழிகளில் சொல்லப்பட்ட ஞான வசனங்கள் எல்லாக் காலத்திற்கும் எல்லா கலாச்சார மக்களுக்கும் பொருந்தும் வண்ணமாக இருக்கிறது.
யாருக்காக எழுதப்பட்டது
இதில் எல்லா வயதினர்களுக்கும் சம்பந்தப்பட்ட காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கிறது. இது ஞானத்தைத் தேடும் வாலிப ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருத்தமாயிருக்கிறது. கடைசியாக தேவ பக்தியாய் வாழ விரும்பும் எல்லாருக்கும் அறிவுரை தருகிறது.
எழுதப்பட்ட நோக்கம்
வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காரியங்களுக்கு சொல்லப்பட்ட தேவனின் ஆலோசனைகளை சாலோமோன் இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியுள்ளான். எந்த ஒரு காரியமும் விட்டுவிடாமல் உபதேசங்களை சொல்லியுள்ளான். உடலுறவுக் காரியங்களையும், வியாபாரக் காரியங்களையும், குறித்தும், தனிப்பட்ட நடக்கையைக்குறித்தும் அன்பைக்குறித்தும் ஒழுக்கத்தைக் குறித்தும் பணத்தைக்குறித்தும் கடனைக் குறித்தும் பிள்ளை வளர்ப்பைக்குறித்தும் சாராயம் குடிப்பதைக் குறித்தும் அரசியலைக்குறித்தும், பழிவாங்குவதைக்குறித்தும் தேவபக்தியாய் நடப்பதைக்குறித்தும் எல்லா ஞானமுள்ள ஆலோசனைகளை எழுதியிருக்கிறான்.
மையக் கருத்து
ஞானம்
பொருளடக்கம் 1. ஞானத்தின் மதிப்புகள் — 1:1-9:18 2. சாலோமோனின் நீதிமொழிகள் — 10:1-22:16 3. ஞானிகளின் வாசகங்கள் — 22:17-29:27 4. அகூரின் ஞான வார்த்தைகள் — 30:1-33 5. லேமுவேலின் ஞான வார்த்தைகள் — 31:1-31Chapter 1
அத்தியாயம் 1
மையக் கருத்து
1 தாவீதின் மகனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து,
புத்திமதிகளை உணர்ந்து,
3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.
4 இவைகள் பேதைகளுக்கு புத்தியையும், வாலிபர்களுக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.
5 புத்திமான் இவைகளைக் கேட்டு அறிவில் வளருவான்;
விவேகி நல்ல ஆலோசனைகளை அடைந்து;
6 நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும்,
ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் சொன்ன மறைபொருட்களையும் அறிந்துகொள்வான்.
7 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
மூடர் ஞானத்தையும் அறிவுரைகளையும் அசட்டை செய்கிறார்கள்.
ஞானம் தழுவுவதற்கான அறிவுரைகள்
8 என் மகனே, உன்னுடைய தகப்பன் புத்தியைக் கேள்,
உன்னுடைய தாயின் போதனையைத் தள்ளாதே.
9 அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும்,
உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும்.
10 என் மகனே, பாவிகள் உனக்கு ஆசைகாட்டினாலும்
நீ சம்மதிக்காதே.
11 எங்களோடு வா, இரத்தம்சிந்தும்படி நாம் மறைந்திருந்து,
குற்றமில்லாமல் இருக்கிறவர்களை
காரணமில்லாமல் பிடிக்கும்படி ஒளிந்திருப்போம்;
12 பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்;
குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல்
அவர்களை முழுமையாக விழுங்குவோம்;
13 விலையுயர்ந்த எல்லாவிதப் பொருள்களையும் கண்டடைவோம்;
கொள்ளைப்பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம்.
14 எங்களோடு பங்காளியாக இரு;
நம்மெல்லோருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொன்னால்;
15 என் மகனே, நீ அவர்களோடு வழிநடவாமல்,
உன்னுடைய காலை அவர்களுடைய பாதைக்கு விலக்குவாயாக.
16 அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி,
இரத்தம் சிந்த விரைகிறது.
17 எவ்வகையான பறவையானாலும் சரி,
அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது வீணானது.
18 இவர்களோ தங்களுடைய இரத்தத்திற்கே மறைந்திருக்கிறார்கள்,
தங்களுடைய உயிருக்கே கண்ணிவைத்திருக்கிறார்கள்.
19 பொருளாசையுள்ள எல்லோருடைய வழியும் இதுவே;
இது தன்னை உடையவர்களின் உயிரை வாங்கும்.
ஞானத்தைத் தள்ளுதலுக்கு எதிரான எச்சரிக்கை
20 ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது,
வீதிகளில் சத்தமிடுகிறது.
21 அது ஆள் நடமாட்டமுள்ள தெருக்களின் சந்திப்பிலும்,
நகரத்தின் நுழைவு வாசலிலும் நின்று கூப்பிட்டு,
பட்டணத்தில் தன்னுடைய வார்த்தைகளைச் சொல்லுகிறது:
22 பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், ஏளனம் செய்பவர்களே,
நீங்கள் ஏளனத்தில் பிரியப்படுவதும், அறிவில்லாதவர்களே,
நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
23 என்னுடைய கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்;
இதோ, என்னுடைய ஆவியை உங்களுக்கு அருளுவேன்,
என்னுடைய வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்;
நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25 என்னுடைய ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி,
என்னுடைய கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26 ஆகையால், நானும் உங்களுடைய ஆபத்துக்காலத்தில் சிரித்து,
நீங்கள் பயப்படும் காரியம் வரும்போது ஏளனம்செய்வேன்.
27 நீங்கள் பயப்படும் காரியம் புயல்போல் வரும்போதும்,
ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும்,
நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஏளனம்செய்வேன்.
28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்;
நான் மறுஉத்திரவு கொடுக்கமாட்டேன்;
அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
29 அவர்கள் அறிவை வெறுத்தார்கள்,
யெகோவாவுக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
30 என்னுடைய ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை;
என்னுடைய கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டை செய்தார்கள்.
31 ஆகையால் அவர்கள் தங்களுடைய வழியின் பலனைச் சாப்பிடுவார்கள்;
தங்களுடைய யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
32 அறிவீனர்களின் மாறுபாடு அவர்களைக் கொல்லும்,
மூடரின் பொறுப்பின்மை அவர்களை அழிக்கும்;
33 எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ,
அவன் பயமின்றி தங்கி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாக இருப்பான்.
Chapter 2
அத்தியாயம் 2
ஞானத்தின் நற்பலன்கள்
1 என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து,
உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,
2 நீ என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு,
என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
4 அதை வெள்ளியைப்போல் நாடி,
புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடினால்,
5 அப்பொழுது யெகோவாவுக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து,
தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
6 யெகோவா ஞானத்தைத் தருகிறார்;
அவருடைய வாயிலிருந்து அறிவும் புத்தியும் வரும்.
7 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞானத்தை வைத்திருக்கிறார்;
உத்தமமாக நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாக இருக்கிறார்.
8 அவர் நியாயத்தின் வழிகளைத் தற்காத்து,
தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
9 அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும்,
எல்லா நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.
10 ஞானம் உன்னுடைய இருதயத்தில் நுழைந்து,
அறிவு உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்போது,
11 நல்யோசனை உன்னைக் காப்பாற்றும்,
புத்தி உன்னைப் பாதுகாக்கும்.
12 அதினால் நீ துன்மார்க்கர்களுடைய வழிக்கும்,
மாறுபாடு பேசுகிற மனிதனுக்கும்,
13 இருளான வழிகளில் நடக்க நீதிநெறிகளைவிட்டு,
14 தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கர்களுடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும்,
15 மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும்
நீ தப்புவிக்கப்படுவாய்.
16 தன்னுடைய இளவயதின் நாயகனை விட்டு,
தன்னுடைய தேவனுடைய உடன்படிக்கையை மறந்து,
17 ஆசை வார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கும் தப்புவிக்கப்படுவாய்.
18 அவளுடைய வீடு மரணத்திற்கும்,
அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடத்திற்கும் சாய்கிறது.
19 அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை,
வாழ்வின்பாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
20 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து,
நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்.
21 நன்மை செய்கிறவர்கள் பூமியிலே தங்குவார்கள்;
உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
22 துன்மார்க்கர்களோ பூமியிலிருந்து துண்டிக்கப்பட்டுபோவார்கள்;
துரோகிகள் அதில் இல்லாதபடி அழிவார்கள்.
Chapter 3
அத்தியாயம் 3
ஞானத்தினால் தொடர்ந்துவரும் பலன்கள்
1 என் மகனே, என்னுடைய போதகத்தை மறவாதே;
உன்னுடைய இருதயம் என்னுடைய கட்டளைகளைக் காக்கட்டும்.
2 அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும்,
நீண்ட ஆயுளையும், சமாதானத்தையும் பெருகச்செய்யும்.
3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாமல் இருப்பதாக;
நீ அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டி,
அவைகளை உன்னுடைய இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனிதர்களுடைய பார்வையிலும் தயவையும் நற்புத்தியும் பெறுவாய்.
5 உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல்,
உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,
6 உன்னுடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;
அப்பொழுது அவர் உன்னுடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
7 நீ உன்னை ஞானியென்று எண்ணாதே;
யெகோவாவுக்குப் பயந்து,
தீமையை விட்டு விலகு.
8 அது உன்னுடைய சரீரத்திற்கு ஆரோக்கியமும்,
உன்னுடைய எலும்புகளுக்கு ஊனுமாகும்.
9 உன்னுடைய பொருளாலும்,
உன்னுடைய எல்லா விளைச்சலின் முதற்பலனாலும் யெகோவாவுக்கு மரியாதை செலுத்து.
10 அப்பொழுது உன்னுடைய களஞ்சியங்கள் பூரணமாக நிரம்பும்;
உன்னுடைய ஆலைகளில் திராட்சைரசம் புரண்டோடும்.
11 என் மகனே, நீ யெகோவாவுடைய தண்டனையை அற்பமாக எண்ணாதே,
அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
12 தகப்பன் தான் நேசிக்கிற மகனைத் தண்டிக்கிறதுபோல,
யெகோவாவும் எவனிடத்தில் அன்பாக இருக்கிறாரோ அவனை தண்டிக்கிறார்.
13 ஞானத்தைக் கண்டடைகிற மனிதனும்,
புத்தியைச் சம்பாதிக்கிற மனிதனும் பாக்கியவான்கள்.
14 அதின் வியாபாரம் வெள்ளி வியாபாரத்திலும்,
அதின் ஆதாயம் சுத்தப்பொன்னிலும் உத்தமமானது.
15 முத்துக்களைவிட அது விலையேறப்பெற்றது;
நீ ஆசைப்படுவது ஒன்றும் அதற்கு சமமல்ல.
16 அதின் வலதுகையில் நீடித்த ஆயுளும்,
அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
17 அதின் வழிகள் இனிதான வழிகள்,
அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
18 அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவமரம்,
அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
19 யெகோவா ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி,
புத்தியினாலே வானங்களை நிலைநிறுத்தினார்.
20 அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது,
ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
21 என் மகனே, இவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;
மெய்ஞானத்தையும் நல்ல ஆலோசனையையும் காத்துக்கொள்.
22 அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும்,
உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும்.
23 அப்பொழுது நீ பயமின்றி உன்னுடைய வழியில் நடப்பாய்,
உன்னுடைய கால் இடறாது.
24 நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்;
நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.
25 திடீரென வரும் திகிலும்,
துன்மார்க்கர்களின் பேரழிவும் வரும்போது நீ பயப்படவேண்டாம்.
26 யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து,
உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.
27 நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யக்கூடியவர்களுக்குச் செய்யாமல் இருக்காதே.
28 உன்னிடத்தில் பொருள் இருக்கும்போது உன்னுடைய அயலானை நோக்கி:
நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
29 பயமின்றி உன்னிடத்தில் தங்குகிற
உன்னுடைய அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினைக்காதே.
30 ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாமல் இருக்க,
காரணமின்றி அவனோடு வழக்காடாதே.
31 கொடுமைக்காரன்மேல் பொறாமைகொள்ளாதே;
அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
32 மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்;
நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது.
33 துன்மார்க்கனுடைய வீட்டில் யெகோவாவின் சாபம் இருக்கிறது,
நீதிமான்களுடைய வீட்டையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
34 இகழ்வோரை அவர் இகழுகிறார்;
தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
35 ஞானவான்கள் மரியாதையைப் பெற்றுக்கொள்வார்கள்;
மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
Chapter 4
அத்தியாயம் 4
ஞானமே பிரதானம்
1 பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு,
புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
2 நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்;
என் உபதேசத்தை விடாதிருங்கள்.
3 நான் என்னுடைய தகப்பனுக்குப் பிரியமான மகனும்,
என்னுடைய தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
4 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது:
உன்னுடைய இருதயம் என்னுடைய வார்த்தைகளைக் காத்துக்கொள்வதாக;
என்னுடைய கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி;
என்னுடைய வாயின் வார்த்தைகளை மறக்காமலும் விட்டு விலகாமலும் இரு.
6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்;
அதின்மேல் பிரியமாக இரு,
அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
7 ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி;
என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்;
நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உனக்கு மரியாதை செலுத்தும்.
9 அது உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடத்தைக் கொடுக்கும்;
அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
10 என் மகனே, கேள், என்னுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்;
அப்பொழுது உன்னுடைய ஆயுளின் வருடங்கள் அதிகமாகும்.
11 ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்;
செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
12 நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை;
நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
13 புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள்,
அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
14 துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே;
தீயோர்களுடைய வழியில் நடக்காதே.
15 அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே;
அதைவிட்டு விலகிக் கடந்துபோ.
16 தீங்கு செய்யாமல் அவர்களுக்கு தூக்கம் வராது;
அவர்கள் யாரையாவது விழச்செய்யாமல் இருந்தால் அவர்களுடைய தூக்கம் கலைந்துபோகும்.
17 அவர்கள் துன்மார்க்கத்தின் அப்பத்தைச் சாப்பிட்டு,
கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும்
அதிகமதிகமாகப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போல இருக்கும்.
19 துன்மார்க்கர்களுடைய பாதையோ காரிருளைப்போல இருக்கும்;
தாங்கள் எதினால் இடறுகிறோம் என்பதை அறியமாட்டார்கள்.
20 என் மகனே, என்னுடைய வார்த்தைகளைக் கவனி;
என்னுடைய வசனங்களுக்கு உன்னுடைய செவியைச் சாய்.
21 அவைகள் உன்னுடைய கண்களைவிட்டுப் பிரியாமல் இருப்பதாக;
அவைகளை உன்னுடைய இருதயத்திற்குள்ளே காத்துக்கொள்.
22 அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் உயிரும்,
அவர்களுடைய உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
23 எல்லாக் காவலோடும் உன்னுடைய இருதயத்தைக் காத்துக்கொள்,
அதிலிருந்து ஜீவஊற்று புறப்படும்.
24 வாயின் தாறுமாறுகளை உன்னைவிட்டு அகற்றி,
உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
25 உன்னுடைய கண்கள் நேராக நோக்குவதாக;
உன்னுடைய கண்ணின் இமைகள் உனக்கு முன்னே செவ்வையாகப் பார்க்கட்டும்.
26 உன்னுடைய நடைகளைச் சீர்தூக்கிப்பார்;
உன்னுடைய வழிகளெல்லாம் பத்திரப்பட்டிருக்கட்டும்.
27 வலதுபுறமோ இடதுபுறமோ சாயாதே;
உன்னுடைய காலைத் தீமைக்கு விலக்கு.
Chapter 5
அத்தியாயம் 5
விபசாரத்திற்கு எதிரான எச்சரிக்கை
1 என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து,
என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;
2 அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய்,
உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
3 ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்;
அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.
4 அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும்,
இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.
5 அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்;
அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
6 நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி,
அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.
7 ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்;
என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.
8 உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து;
அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.
9 சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும்,
உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடூரமானவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.
10 அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்;
உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.
11 முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
12 ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே,
கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!
13 என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும்,
எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!
14 சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய
எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று முறையிடுவாய்.
15 உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும்,
உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.
16 உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும்
உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல்,
உனக்கே உரியவைகளாக இருப்பதாக.
18 உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக;
உன்னுடைய இளவயதின் மனைவியோடு மகிழ்ந்திரு.
19 அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும்,
அழகான வரையாடும்போல இருப்பாளாக;
அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்;
அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.
20 என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து,
அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?
21 மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது;
அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
22 துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்;
தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
23 அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து,
தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
Chapter 6
அத்தியாயம் 6
அறிவீனத்திற்கு எதிரான எச்சரிக்கை
1 என் மகனே, நீ உன்னுடைய நண்பனுக்காகப் பொறுப்பேற்று,
அந்நியனுக்கு உறுதியளித்தால்,
2 நீ உன்னுடைய வாய்மொழிகளால் சிக்கிக்கொண்டாய்,
உன்னுடைய வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
3 இப்பொழுது என் மகனே, உன்னுடைய நண்பனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டதால்,
நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.
4 உன்னுடைய கண்ணுக்கு தூக்கத்தையும்,
உன்னுடைய கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல்,
உன்னுடைய நண்பனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி,
அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
5 வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல,
நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
6 சோம்பேறியே, நீ எறும்பினிடம் போய்,
அதனுடைய வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாமல் இருந்தும்,
8 கோடைக்காலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து,
அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
9 சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய்?
எப்பொழுது உன்னுடைய தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
10 இன்னும் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்,
இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
11 உன்னுடைய தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும்,
உன்னுடைய வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
12 வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான்.
13 அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி,
தன்னுடைய கால்களால் பேசி,
தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான்.
14 அவனுடைய இருதயத்திலே பொய்யுண்டு;
இடைவிடாமல் தீங்கைப் பிணைத்து,
வழக்குகளை உண்டாக்குகிறான்.
15 ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்;
உதவியில்லாமல் திடீரென நாசமடைவான்.
16 ஆறு காரியங்களைக் யெகோவா வெறுக்கிறார்,
ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு,
குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை,
18 மிகக்கொடிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற இருதயம்,
தீங்கு செய்வதற்கு விரைந்து ஓடும் கால்,
19 பொய்யானதைப் பேசும் பொய்ச்சாட்சி,
சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டாக்குதல் ஆகிய இவைகளே.
20 என் மகனே, உன்னுடைய தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்;
உன்னுடைய தாயின் போதகத்தைத் தள்ளாதே.
21 அவைகளை எப்பொழுதும் உன்னுடைய இருதயத்திலே அணிந்து, அவைகளை உன்னுடைய கழுத்திலே கட்டிக்கொள்.
22 நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்;
நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்;
நீ விழிக்கும்போது அது உனக்கு போதிக்கும்.
23 கட்டளையே விளக்கு,
வேதமே வெளிச்சம், போதகதண்டனையே வாழ்வின் வழி.
24 அது உன்னைத் துன்மார்க்கப் பெண்ணுக்கும்,
ஆசை வார்த்தைகளைப் பேசும் நாக்கை உடைய ஒழுங்கீனமானவளுக்கும் விலக்கிக் காக்கும்.
25 உன்னுடைய இருதயத்திலே அவளுடைய அழகை ரசிக்காதே;
அவள் தன்னுடைய கண்ணின் இமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
26 விபசாரியினால் ஒரு அப்பத்துண்டையும் இழக்கவேண்டியதாகும்;
விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
27 தன்னுடைய உடை வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளமுடியுமா?
28 தன்னுடைய கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கமுடியுமா?
29 பிறனுடைய மனைவியிடம் தவறான உறவுகொள்பவனும்,
அப்படியே அவளைத் தொடுகிற எவனும், தண்டனைக்குத் தப்பமாட்டான்.
30 திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்;
31 அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீர்க்கவேண்டும்;
தன்னுடைய வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
32 பெண்ணுடனே விபசாரம்செய்கிறவன் மதிகெட்டவன்;
அப்படிச் செய்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
33 வாதையையும் வெட்கத்தையும் அடைவான்;
அவனுடைய நிந்தை ஒழியாது.
34 பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்;
அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான்.
35 அவன் எந்த நஷ்டத்தையும் பார்க்கமாட்டான்;
அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.
Chapter 7
அத்தியாயம் 7
விபசாரிக்கு எதிரான எச்சரிக்கை
1 என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து,
என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
2 என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள்,
அப்பொழுது பிழைப்பாய்.
3 அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி,
அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள்.
4 ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
5 ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும்,
புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு.
6 நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று,
அதின் வழியாகப் பார்த்தபோது,
7 பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே
ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன்.
8 அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும்,
இரவின் இருளிலும்.
9 அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று,
அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான்.
10 அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த
தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
11 அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்;
அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
12 சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள்,
சந்துகள்தோறும் மறைந்திருப்பாள்.
13 அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு,
முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
14 சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது,
இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
15 ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு,
உன் முகத்தை ஆவலோடு தேடினேன்;
இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
16 என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும்,
எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன்.
17 என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும்
சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன்.
18 வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம்,
இன்பங்களினால் பூரிப்போம்.
19 கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான்.
20 பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான்,
குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
21 தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி,
தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள்.
22 உடனே அவன் அவள் பின்னே சென்றான்;
ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும்,
ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
23 ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல்
அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும்,
அவளுக்குப் பின்னே போனான்;
அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது.
24 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
25 உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்;
அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே.
26 அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்;
பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
27 அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி;
அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
Chapter 8
அத்தியாயம் 8
ஞானம் அழைக்கிறது
1 ஞானம் கூப்பிடுகிறதில்லையோ?
புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
2 அது வழியருகே உள்ள மேடைகளிலும்,
நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது.
3 அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
4 மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்;
என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும்.
5 பேதைகளே, விவேகம் அடையுங்கள்;
மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள்.
6 கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்;
என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும்.
7 என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும்,
ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது.
8 என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்;
அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.
9 அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும்,
ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும்.
10 வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும்,
சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
11 முத்துக்களைவிட ஞானமே நல்லது;
ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல.
12 ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி,
நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
13 தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்;
பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும்,
மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.
14 ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்;
நானே புத்தி, வல்லமை என்னுடையது.
15 என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள்,
பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.
16 என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும்,
பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள்.
17 என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்;
அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
18 செல்வமும், கனமும், நிலையான பொருளும்,
நீதியும் என்னிடத்தில் உண்டு.
19 பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது;
சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது.
20 என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும்,
அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
21 அவர்களை நீதியின் வழியிலும்,
நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.
22 யெகோவா தமது செயல்களுக்குமுன்
ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார்.
23 பூமி உண்டாவதற்குமுன்னும்,
ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன்.
24 ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன்.
25 மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும்,
குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26 அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும்
நான் உருவாக்கப்பட்டேன்.
27 அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்;
அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும்,
28 உயரத்தில் மேகங்களை அமைத்து,
சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும்,
29 சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி
அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும்,
30 நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்;
எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து,
எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன்.
31 அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு,
மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
32 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
33 நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்;
அதைவிட்டு விலகாமல் இருங்கள்.
34 என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து,
என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து,
எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.
35 என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்;
யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
36 எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ,
தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்;
என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
Chapter 9
அத்தியாயம் 9
ஞானி மற்றும் பேதையர்களுக்கான அழைப்பு
1 ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி,
தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து,
2 தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து,
திராட்சைரசத்தை ஊற்றிவைத்து,
தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,
3 தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி,
பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
4 புத்தியீனனை நோக்கி:
எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.
5 நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு,
நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
6 பேதமையைவிட்டு விலகுங்கள்,
அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்;
புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.
7 பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்;
துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே,
அவன் உன்னைப் பகைப்பான்;
ஞானமுள்ளவனைக் கடிந்துகொள்,
அவன் உன்னை நேசிப்பான்.
9 ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்;
நீதிமானுக்கு உபதேசம் செய்,
அவன் அறிவில் விருத்தியடைவான்.
10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.
11 என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்;
ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
12 நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்;
நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
13 மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
14 அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
15 தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:
16 எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,
17 மதியீனனை நோக்கி:
திருட்டுத்தண்ணீர் தித்திக்கும்,
மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
18 இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும்,
அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான்.
Chapter 10
அத்தியாயம் 10
சாலொமோனின் நீதிமொழிகள்
1 சாலொமோனின் நீதிமொழிகள்:
ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;
மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாக இருக்கிறான்.
2 அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது;
நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
3 யெகோவா நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடமாட்டார்;
துன்மார்க்கர்களுடைய பொருளையோ அகற்றிவிடுகிறார்.
4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்;
சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
5 கோடைக்காலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்;
அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ அவமானத்தை உண்டாக்குகிற மகன்.
6 நீதிமானுடைய தலையின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்;
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
7 நீதிமானுடைய பெயர் புகழ்பெற்று விளங்கும்;
துன்மார்க்கனுடைய பெயரோ அழிந்துபோகும்.
8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்;
அலப்புகிற மூடனோ விழுவான்.
9 உத்தமமாக நடக்கிறவன் பத்திரமாக நடக்கிறான்;
கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான்.
10 கண்சாடை காட்டுகிறவன் தவறு செய்கிறான்;
அலப்புகிற மூடன் விழுவான்.
11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று;
கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும்.
12 பகை விரோதங்களை எழுப்பும்;
அன்போ எல்லாப் பாவங்களையும் மூடும்.
13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;
மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு.
14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்;
மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.
15 செல்வந்தனுடைய பொருள் அவனுக்குப் பாதுகாப்பான பட்டணம்;
ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கச்செய்யும்.
16 நீதிமானுடைய உழைப்பு வாழ்வையும்,
துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்.
17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்;
திருத்துதலை வெறுக்கிறவனோ மோசம்போகிறான்.
18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்;
புறங்கூறுகிறவன் மதிகேடன்.
19 சொற்களின் மிகுதியால் பாவமில்லாமற்போகாது;
தன்னுடைய உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான்.
20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி;
துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது.
21 நீதிமானுடைய உதடுகள் அநேகருக்கு உணவளிக்கும்;
மூடரோ மதியீனத்தினால் சாவார்கள்.
22 யெகோவாவின் ஆசீர்வாதமே செல்வத்தைத் தரும்;
அதனோடு அவர் வேதனையைக் கூட்டமாட்டார்.
23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு;
புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து சம்பவிக்கும்;
நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும்.
25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்;
நீதிமானோ நிரந்தர அஸ்திபாரமுள்ளவன்;
26 பற்களுக்கு புளிப்பும், கண்களுக்குப் புகையும் எப்படி இருக்கிறதோ,
அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான்.
27 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஆயுள்நாட்களைப் பெருகச்செய்யும்;
துன்மார்க்கர்களுடைய வருடங்களோ குறுகிப்போகும்.
28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்;
துன்மார்க்கருடைய வாழ்க்கையோ அழியும்.
29 யெகோவாவின் வழி உத்தமர்களுக்குப் பாதுகாப்பு,
அக்கிரமக்காரர்களுக்கோ கலக்கம்.
30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை;
துன்மார்க்கர்கள் பூமியில் வசிப்பதில்லை.
31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்;
மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோகும்.
32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப்பேச அறியும்;
துன்மார்க்கர்களுடைய வாயோ மாறுபாடுள்ளது.
Chapter 11
அத்தியாயம் 11
நீதியின் பயன்கள்
1 கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது;
சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
2 அகந்தை வந்தால் அவமானமும் வரும்;
தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
3 செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்;
துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
4 கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது;
நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
5 உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்;
துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான்.
6 செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்;
துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள்.
7 துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்;
அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும்.
8 நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்;
அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
9 மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்;
நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
10 நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்;
துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
11 செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்;
துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.
12 மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்;
புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
13 புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்;
ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
14 ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்;
அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.
15 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்;
பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.
16 நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்;
பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள்.
17 தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்;
கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.
18 துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்;
நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
19 நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல,
தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான்.
20 மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்;
உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.
21 கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்;
நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
22 மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண்,
பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
23 நீதிமான்களுடைய ஆசை நன்மையே;
துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும்.
24 வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு;
அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும்
வறுமையடைபவர்களும் உண்டு.
25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்;
எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
26 தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்;
விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்;
தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
28 தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்;
நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.
29 தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்;
மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
30 நீதிமானுடைய பலன் ஜீவமரம்;
ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும்
பாவிக்கும் எத்தனை அதிகம்.
Chapter 12
அத்தியாயம் 12
ஞானியின் செயல்கள்
1 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்;
கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன்.
2 நல்லவன் யெகோவாவிடத்தில் தயவு பெறுவான்;
கெட்டசிந்தனைகளுள்ள மனிதனை அவர் தண்டனைக்கு உட்படுத்துவார்.
3 துன்மார்க்கத்தினால் மனிதன் நிலைவரப்படமாட்டான்;
நீதிமான்களுடைய வேரோ அசையாது.
4 குணசாலியான பெண் தன்னுடைய கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்;
அவமானத்தை உண்டாக்குகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாக இருக்கிறாள்.
5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்;
துன்மார்க்கர்களுடைய ஆலோசனைகளோ வஞ்சனையுள்ளவைகள்.
6 துன்மார்க்கர்களின் வார்த்தைகள் இரத்தம் சிந்த மறைந்திருப்பதைப்பற்றியது;
உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்.
7 துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்;
நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
8 தன்னுடைய புத்திக்குத் தகுந்தபடி மனிதன் புகழப்படுவான்;
மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.
9 உணவில்லாதவனாக இருந்தும்,
தன்னைத்தான் மேன்மைப்படுத்துகிறவனைவிட,
மேன்மை இல்லாதவனாக இருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்.
10 நீதிமான் தன்னுடைய மிருகஜீவன்களைக் காப்பாற்றுகிறான்;
துன்மார்க்கர்களுடைய இரக்கமும் கொடுமையே.
11 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவினால் திருப்தியடைவான்;
வீணர்களைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன்.
12 துன்மார்க்கன் கெட்டவர்களுடைய வலையை விரும்புகிறான்;
நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்.
13 துன்மார்க்கனுக்கு அவனுடைய உதடுகளின் துரோகமே கண்ணி;
நீதிமானோ நெருக்கத்திலிருந்து நீங்குவான்.
14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்;
அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.
15 மதியீனனுடைய வழி அவனுடைய பார்வைக்குச் செம்மையாக இருக்கும்;
ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்.
16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்;
அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.
17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்;
பொய்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.
18 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு;
ஞானமுள்ளவர்களுடைய நாவோ மருந்து.
19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்;
பொய்நாவோ ஒரு நிமிடம்மாத்திரம் இருக்கும்;
20 தீங்கை திட்டமிடுகிறவர்களின் இருதயத்தில் கபடம் இருக்கிறது;
சமாதானம்செய்கிற ஆலோசனைக்காரர்களுக்கு உள்ளது சந்தோஷம்.
21 நீதிமானுக்கு ஒரு கேடும் வராது;
துன்மார்க்கர்களோ தீமையினால் நிறையப்படுவார்கள்.
22 பொய் உதடுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
உண்மையாக நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.
23 விவேகமுள்ள மனிதன் அறிவை அடக்கிவைக்கிறான்;
மூடர்களுடைய இருதயமோ மதியீனத்தைப் பிரபலப்படுத்தும்.
24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகை செய்யும்;
சோம்பேறியோ கட்டாயமாக வேலை வாங்கப்படுவான்.
25 மனிதனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்;
நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.
26 நீதிமான் தன்னுடைய அயலானைவிட மேன்மையுள்ளவன்;
துன்மார்க்கர்களுடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும்.
27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை;
ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது.
28 நீதியின் பாதையில் வாழ்வு உண்டு;
அந்தப் பாதையில் மரணம் இல்லை.
Chapter 13
அத்தியாயம் 13
ஞானியின் நடவடிக்கை
1 ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்;
பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலை கேட்கமாட்டான்.
2 மனிதன் தன்னுடைய வாயின் பலனால் நன்மையைச் சாப்பிடுவான்;
துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையை சாப்பிடும்.
3 தன்னுடைய வாயைக் காக்கிறவன் தன்னுடைய உயிரைக் காக்கிறான்;
தன்னுடைய உதடுகளை விரிவாகத் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெற்றுக்கொள்ளாது;
ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ செழிக்கும்;
5 நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்;
துன்மார்க்கனோ வெட்கமும் அவமானமும் உண்டாக்குகிறான்.
6 நீதி உத்தமவழியில் உள்ளவனைத் தற்காக்கும்;
துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
7 ஒன்றுமில்லாமல் இருக்கத் தன்னைச் செல்வந்தனாக நினைக்கிறவனும் உண்டு;
மிகுந்த செல்வம் இருக்கத் தன்னைத் தரித்திரனாக நினைக்கிறவனும் உண்டு.
8 மனிதனுடைய செல்வம் அவனுடைய உயிரை மீட்கும்;
தரித்திரனோ மிரட்டுதலைக் கேட்காமல் இருக்கிறான்.
9 நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்;
துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.
10 அகந்தையினால் மட்டும் விவாதம் பிறக்கும்;
ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
11 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்;
கஷ்டப்பட்டு சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
12 நெடுங்காலமாகக் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கச்செய்யும்;
விரும்பினது வரும்போதோ ஜீவமரம்போல இருக்கும்.
13 திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்;
கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
14 ஞானவான்களுடைய போதகம் வாழ்வுதரும் ஊற்று;
அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
15 நற்புத்தி தயவை உண்டாக்கும்;
துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
16 விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்;
மூடனோ தன்னுடைய மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
17 துரோகமுள்ள தூதன் தீமையிலே விழுவான்;
உண்மையுள்ள தூதுவர்களோ நல்மருந்து.
18 புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் அவமானத்தையும் அடைவான்;
கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ மேன்மையடைவான்.
19 வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது;
தீமையைவிட்டு விலகுவது மூடர்களுக்கு அருவருப்பு.
20 ஞானிகளோடு வாழ்கிறவன் ஞானமடைவான்;
மூடர்களுக்குத் தோழனோ நாசமடைவான்.
21 பாவிகளைத் தீவினை தொடரும்;
நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
22 நல்லவன் தன்னுடைய பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு சொத்தை வைத்துப்போகிறான்;
பாவியின் செல்வமோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
23 ஏழைகளின் வயல் மிகுதியான உணவை விளைவிக்கும்;
நியாயம் கிடைக்காமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
24 பிரம்பைப் பயன்படுத்தாதவன் தன்னுடைய மகனைப் பகைக்கிறான்;
அவன்மேல் அன்பாக இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
25 நீதிமான் தனக்குத் திருப்தியாகச் சாப்பிடுகிறான்;
துன்மார்க்கர்களுடைய வயிறோ பசியாக இருக்கும்.
Chapter 14
அத்தியாயம் 14
விவேகமும் அலட்சியமும்
1 புத்தியுள்ள பெண் தன்னுடைய வீட்டைக் கட்டுகிறாள்;
புத்தியில்லாத பெண்ணோ தன்னுடைய கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
2 நிதானமாக நடக்கிறவன் யெகோவாவுக்குப் பயப்படுகிறான்;
தன்னுடைய வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்செய்கிறான்.
3 மூடன் வாயிலே அவனுடைய அகந்தைக்கு ஏற்ற கோல் உண்டு;
ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
4 எருதுகள் இல்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாக இருக்கும்;
காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
5 மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லமாட்டான்;
பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
6 பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடிக்கமாட்டான்;
புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாகவரும்.
7 மூடனுடைய முகத்தைவிட்டு விலகிப்போ;
அறிவுள்ள உதடுகளை அங்கே காணமாட்டாய்.
8 தன்னுடைய வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்;
மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
9 மூடர்கள் பாவத்தைக்குறித்துப் பரியாசம்செய்கிறார்கள்;
நீதிமான்களுக்குள்ளே தயவு உண்டு.
10 இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்;
அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தை ஆகமாட்டான்.
11 துன்மார்க்கனுடைய வீடு அழியும்;
செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
12 மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழி உண்டு;
அதின் முடிவோ மரணவழிகள்.
13 சிரிப்பிலும் மனதிற்குத் துக்கமுண்டு;
அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
14 பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன்னுடைய வழிகளிலேயும்,
நல்ல மனிதனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
15 பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்;
விவேகியோ தன்னுடைய நடையின்மேல் கவனமாக இருக்கிறான்.
16 ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்;
மதியீனனோ கடுங்கோபம்கொண்டு துணிகரமாக இருக்கிறான்.
17 முன்கோபி மதிகேட்டைச் செய்வான்;
கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
18 பேதையர்கள் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்;
விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
19 தீயோர்கள் நல்லவர்களுக்கு முன்பாகவும், துன்மார்க்கர்கள் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
20 தரித்திரன் தன்னைச் சேர்ந்தவனாலும் பகைக்கப்படுகிறான்;
செல்வந்தனுக்கோ அநேக நண்பர்கள் உண்டு.
21 பிறனை அவமதிக்கிறவன் பாவம்செய்கிறான்;
தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
22 தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ?
நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமும் உண்டு.
23 எல்லா உழைப்பினாலும் பயனுண்டு;
உதடுகளின் பேச்சோ வறுமையை மட்டும் தரும்.
24 ஞானிகளுக்கு முடி அவர்களுடைய செல்வம்;
மூடர்களின் மதியீனம் மூடத்தனமே.
25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களைக் காப்பாற்றுகிறான்;
வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
26 யெகோவாவுக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு;
அவனுடைய பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
27 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்வு தரும் ஊற்று;
அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
28 மக்கள் கூட்டம் ராஜாவின் மகிமை;
மக்கள்குறைவு தலைவனின் முறிவு. 29 நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்;
முன்கோபியோ புத்தியீனத்தை விளங்கச்செய்கிறான்.
30 சமாதானத்துடன் இருப்பது உடலுக்கு வாழ்வு;
பொறாமையோ எலும்புருக்கி.
31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்;
தரித்திரனுக்குத் தயவு செய்கிறவனோ அவரை மேன்மைப்படுத்துகிறான்;
32 துன்மார்க்கன் தன்னுடைய தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்;
நீதிமானோ தன்னுடைய மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
33 புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனர்களிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
34 நீதி மக்களை உயர்த்தும்; பாவமோ எந்த மக்களுக்கும் இகழ்ச்சி.
35 ராஜாவின் தயவு விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேல் இருக்கும்;
அவனுடைய கோபமோ அவமானத்தை உண்டாக்குகிறவன்மேல் இருக்கும்.
Chapter 15
அத்தியாயம் 15
வாழ்வின் ஒழுங்குமுறைகள்
1 சாந்தமான பதில் கடுங்கோபத்தை அடக்கும்;
கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். 2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்;
மூடர்களின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
3 யெகோவாவின் கண்கள் எந்த இடத்திலுமிருந்து,
நல்லவர்களையும், தீயவர்களையும் நோக்கிப்பார்க்கிறது.
4 ஆரோக்கியமுள்ள நாவு ஜீவமரம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5 மூடன் தன்னுடைய தகப்பனுடைய புத்தியை அலட்சியப்படுத்துகிறான்;
கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷம் உண்டு;
துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பம் உண்டு.
7 ஞானிகளின் உதடுகள் அறிவை விதைக்கும்;
மூடர்களின் இருதயமோ அப்படியல்ல.
8 துன்மார்க்கர்களுடைய பலி யெகோவாவுக்கு அருவருப்பானது;
செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
9 துன்மார்க்கர்களுடைய வழி யெகோவாவுக்கு அருவருப்பானது;
நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
10 வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்;
கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
11 பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க,
மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?
12 பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசிக்கமாட்டான்;
ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்;
மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
14 புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்;
மூடர்களின் வாயோ மதியீனத்தை மேயும்.
15 சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்;
மனரம்மியமோ நிரந்தர விருந்து.
16 சஞ்சலத்தோடு கூடிய அதிகப் பொருட்களைவிட,
யெகோவாவைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
17 பகையோடு இருக்கும் கொழுத்த எருதின் கறியைவிட,
சிநேகத்தோடு இருக்கும் இலைக்கறியே நல்லது.
18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்;
நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
19 சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமம்;
நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
20 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்;
மதியற்ற மனிதனோ தன்னுடைய தாயை அலட்சியப்படுத்துகிறான்.
21 மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்;
புத்திமானோ தன்னுடைய செயல்களைச் செம்மைப்படுத்துகிறான்.
22 ஆலோசனை இல்லாததால் எண்ணங்கள் சிதைந்துபோகும்;
ஆலோசனைக்காரர்கள் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
23 மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்;
ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
24 கீழான பாதாளத்தைவிட்டு விலகும்படி,
விவேகிக்கு வாழ்வின் வழியானது உன்னதத்தை நோக்கும் வழியாகும்.
25 அகங்காரியின் வீட்டைக் யெகோவா பிடுங்கிப்போடுவார்;
விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
26 துன்மார்க்கர்களுடைய நினைவுகள்
யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
27 பொருளாசைக்காரன் தன்னுடைய வீட்டைக் கலைக்கிறான்;
லஞ்சங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
28 நீதிமானுடைய மனம் பதில் சொல்ல யோசிக்கும்;
துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
29 துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்;
நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
30 கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்;
நற்செய்தி எலும்புகளை ஆரோக்கியமாக்கும்.
31 வாழ்வுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது
ஞானிகளிடத்திலே தங்கும்.
32 புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை வெறுக்கிறான்;
கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
33 யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்;
மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Chapter 16
அத்தியாயம் 16
தேவ ஞானமும் நீதியும்
1 மனதின் யோசனைகள் மனிதனுடையது;
நாவின் பதில் யெகோவாவால் வரும்.
2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்;
யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
3 உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி;
அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.
4 யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்;
தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
5 மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்;
கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
6 கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்;
யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
7 ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால்,
அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.
8 அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட,
நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.
9 மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்;
அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.
10 ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்;
நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.
11 நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது;
பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
12 அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு;
நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
13 நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்;
நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
14 ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்;
ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
15 ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு;
அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
16 பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது!
வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை
17 தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை;
தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.
18 அழிவுக்கு முன்னானது அகந்தை;
விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
19 அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட,
சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.
20 விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்;
யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.
21 இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்;
உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.
22 புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.
23 ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்;
அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
24 இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும்,
எலும்புகளுக்கு மருந்தாகும்.
25 மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு;
அதின் முடிவோ மரண வழிகள்.
26 உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்;
அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
27 வீணான மகன் கிண்டிவிடுகிறான்;
அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.
28 மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்;
கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
29 கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி,
அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.
30 அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி,
தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.
31 நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது
மகிமையான கிரீடம்.
32 பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்;
பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
33 சீட்டு மடியிலே போடப்படும்;
காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.
Chapter 17
அத்தியாயம் 17
விவேகத்தினால் வரும் நன்மை
1 சண்டையோடுகூடிய வீடுநிறைந்த சுவையான உணவைவிட,
சமாதானத்தோடு சாப்பிடும் வெறும் அப்பமே நலம்.
2 புத்தியுள்ள வேலைக்காரன் அவமானத்தை உண்டாக்குகிற மகனை ஆண்டு,
சகோதரர்களுடைய சுதந்தரத்தில் பங்கை அடைவான்.
3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்;
இருதயங்களைச் சோதிக்கிறவரோ யெகோவா.
4 தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்;
பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
5 ஏழையைப் புறக்கணிக்கிறவன் அவனை உண்டாக்கினவரை சபிக்கிறான்;
ஆபத்தைக் குறித்துக் மகிழ்கிறவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
6 பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோர்களுக்குக் கிரீடம்;
பிள்ளைகளின் மேன்மை அவர்களுடைய தகப்பன்மார்களே.
7 மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது;
பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
8 லஞ்சம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போல இருக்கும்;
அது பார்க்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
9 குற்றத்தை மூடுகிறவன் நட்பை நாடுகிறான்;
கேட்டதைச் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
10 மூடனை நூறடி அடிப்பதைவிட,
புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாக உறைக்கும்.
11 தீயவன் கலகத்தையே தேடுகிறான்;
கொடிய தூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
12 தன்னுடைய மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைவிட,
குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது மேல்.
13 நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ,
அவனுடைய வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோல இருக்கும்;
ஆதலால் விவாதம் எழும்புமுன்பு அதை விட்டுவிடு.
15 துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும்,
நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இந்த இருவரும் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
16 ஞானத்தை வாங்கும்படி மூடன் கையிலே பணம் என்னத்திற்கு?
அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
17 நண்பன் எல்லாக் காலத்திலும் நேசிப்பான்;
இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
18 புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
19 விவாதப்பிரியன் பாவப்பிரியன்;
தன்னுடைய வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை;
பொய் நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
21 மதிகெட்ட மகனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலம் உண்டாக அவனைப் பெறுகிறான்;
மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
22 மனமகிழ்ச்சி நல்ல மருந்து;
முறிந்த ஆவியோ எலும்புகளை உலரச்செய்யும்.
23 துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட மடியிலுள்ள லஞ்சத்தை வாங்குகிறான்.
24 ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்;
மூடனுடைய கண்களோ பூமியின் கடைசி எல்லைகள்வரை செல்லும்.
25 மதிகெட்ட மகன் தன்னுடைய தகப்பனுக்குச் சலிப்பும்,
தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
26 நீதிமானைத் தண்டிப்பதும், நியாயம்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
27 அறிவாளி தன்னுடைய வார்த்தைகளை அடக்குகிறான்;
விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
28 பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்;
தன்னுடைய உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.
Chapter 18
அத்தியாயம் 18
ஞானம் வாழ்வின் வழிகாட்டி
1 பிரிந்து போகிறவன் தன்னுடைய ஆசையின்படி செய்யப்பார்க்கிறான்,
எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.
2 மூடன் ஞானத்தில் பிரியம்கொள்ளாமல்,
தன்னுடைய மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
3 துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடு இகழ்ச்சியும் வரும்.
4 மனிதனுடைய வாய்மொழிகள் ஆழமான தண்ணீர்போல இருக்கும்;
ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போல இருக்கும்.
5 வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு,
துன்மார்க்கனுக்கு பாரபட்சம் செய்வது நல்லதல்ல.
6 மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும்,
அவனுடைய வாய் அடிகளை வரவழைக்கும்.
7 மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு,
அவனுடைய உதடுகள் அவனுடைய ஆத்துமாவுக்குக் கண்ணி.
8 கோள்சொல்கிறவனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்,
ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.
9 தன்னுடைய வேலையில் அசதியாக இருப்பவன் அனைத்தையும் அழிப்பவனுக்குச் சகோதரன்.
10 யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை;
நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.
11 செல்வந்தனுடைய பொருள் அவனுக்கு பாதுகாப்பான பட்டணம்;
அது அவனுடைய எண்ணத்தில் உயர்ந்த மதில்போல இருக்கும்.
12 அழிவு வருமுன்பு மனிதனுடைய இருதயம் இறுமாப்பாக இருக்கும்;
மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
13 காரியத்தைக் கேட்பதற்குமுன் பதில் சொல்லுகிறவனுக்கு,
அது புத்தியீனமும் வெட்கமுமாக இருக்கும்.
14 மனிதனுடைய ஆவி அவனுடைய பலவீனத்தைத் தாங்கும்;
முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
15 புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்;
ஞானியின் செவி அறிவை நாடும்.
16 ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழி உண்டாக்கி,
பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
17 தன்னுடைய வழக்கிலே முதலில் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்;
அவனுடைய அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.
18 சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து,
பலவான்கள் நடுவே நியாயம்தீர்க்கும்.
19 பாதுகாப்பான பட்டணத்தை வசப்படுத்துவதைவிட
கோபம்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது கடினம்;
அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போல இருக்கும்.
20 அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்;
அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
21 மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்;
அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.
22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்;
யெகோவாவால் தயவையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
23 தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்;
செல்வந்தன் கடினமாக உத்திரவுகொடுக்கிறான்.
24 நண்பர்கள் உள்ளவன் நேசிக்கவேண்டும்;
சகோதரனைவிட அதிக சொந்தமாக நேசிக்கப்படுபவனும் உண்டு.
Chapter 19
அத்தியாயம் 19
ஞானம் நன்மைகளின் ஊற்று
1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட,
உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.
2 ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல;
கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
3 மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்;
என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
4 செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்;
தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
5 பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்;
பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
6 பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்;
கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.
7 தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே,
எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்;
அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான்,
அவைகளோ வெறும் வார்த்தைகளே.
8 ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்;
புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
9 பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்;
பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
10 மூடனுக்குச் செல்வம் தகாது;
பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.
11 மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்;
குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்;
அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
13 மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்;
மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.
14 வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து;
புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.
15 சோம்பல் தூங்கிவிழச்செய்யும்;
அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்;
தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
17 ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்;
அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
18 நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி;
ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.
19 கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்;
நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.
20 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி,
ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
21 மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்;
ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.
22 நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு;
பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.
23 யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது;
அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்;
தீமை அவனை அணுகாது.
24 சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து,
அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
25 பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்;
புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
26 தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன்,
வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
27 என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும்
போதகங்களை நீ கேட்காதே.
28 அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்;
துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
29 பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும்,
மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.
Chapter 20
அத்தியாயம் 20
தீமையைத் தவிர்த்தல்
1 திராட்சைரசம் பரியாசம்செய்யும்; மதுபானம் கூச்சலிடும்;
அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.
2 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமம்;
அவனைக் கோபப்படுத்துகிறவன் தன்னுடைய உயிருக்கே துரோகம்செய்கிறான்.
3 வழக்குக்கு விலகுவது மனிதனுக்கு மேன்மை;
மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.
4 சோம்பேறி குளிருகிறது என்று உழமாட்டான்;
அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காது.
5 மனிதனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போல இருக்கிறது;
புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.
6 மனிதர்கள் பெரும்பாலும் தங்களுடைய தாராள குணத்தை பிரபலப்படுத்துவார்கள்;
உண்மையான மனிதனைக் கண்டுபிடிப்பவன் யார்?
7 நீதிமான் தன்னுடைய உத்தமத்திலே நடக்கிறான்;
அவனுக்குப்பிறகு அவனுடைய பிள்ளைகளும் பாக்கியவான்களாக இருப்பார்கள்.
8 நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா
தன்னுடைய கண்களினால் எல்லாத் தீங்கையும் சிதறச்செய்கிறான்.
9 என்னுடைய இருதயத்தைச் சுத்தமாக்கினேன்,
என்னுடைய பாவம் நீங்க சுத்தமானேன் என்று சொல்லக்கூடியவன் யார்?
10 வெவ்வேறான நிறைகல்லும்,
வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்.
11 பிள்ளையானாலும், அதின் செயல்கள் சுத்தமோ செம்மையோ என்பது,
அதின் செயலினால் வெளிப்படும்.
12 கேட்கிற காதும், காண்கிற கண்ணும்
ஆகிய இந்த இரண்டையும் யெகோவா உண்டாக்கினார்.
13 தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்;
கண்விழித்திரு, அப்பொழுது உணவினால் திருப்தியாவாய்.
14 வாங்குகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்;
போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.
15 பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு;
அறிவுள்ள உதடுகளோ விலை உயர்ந்த இரத்தினம்.
16 அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய ஆடையை எடுத்துக்கொள்;
அந்நிய பெண்ணுக்காக அவனுடைய கையில் ஈடுவாங்கிக்கொள்.
17 வஞ்சனையினால் வந்த உணவு மனிதனுக்கு இன்பமாக இருக்கும்;
பின்போ அவனுடைய வாய் உணவுப்பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.
18 ஆலோசனையினால் எண்ணங்கள் உறுதிப்படும்;
நல்யோசனை செய்து யுத்தம்செய்.
19 தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்;
ஆதலால் தன்னுடைய உதடுகளினால் அதிகம் பேசுகிறவனோடு சேராதே.
20 தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய
தீபம் காரிருளில் அணைந்துபோகும்.
21 ஆரம்பத்திலே விரைவாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.
22 தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே;
யெகோவாவுக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.
23 வெவ்வேறான நிறைகற்கள்
யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்;
கள்ளத்தராசு நல்லதல்ல.
24 யெகோவாவாலே மனிதர்களுடைய நடைகள் வாய்க்கும்;
ஆகையால் மனிதன் தன்னுடைய வழியை அறிந்துகொள்வது எப்படி?
25 பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும்,
மனிதனுக்குக் கண்ணியாக இருக்கும்.
26 ஞானமுள்ள ராஜா துன்மார்க்கர்களை சிதறடித்து,
அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.
27 மனிதனுடைய ஆவி யெகோவா தந்த தீபமாக இருக்கிறது;
அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.
28 தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்;
தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான்.
29 வாலிபர்களின் அலங்காரம் அவர்களுடைய பலம்;
முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.
30 காயத்தின் தழும்புகளும்,
உள்ளத்தில் உறைக்கும் அடிகளும்,
பொல்லாதவனை அழுக்கு நீங்கத் துடைக்கும்.
Chapter 21
அத்தியாயம் 21
யெகோவாவின் ஆளுகை
1 ராஜாவின் இருதயம் யெகோவாவின் கையில் நீரூற்றைப்போல இருக்கிறது;
அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.
2 மனிதனுடைய வழியெல்லாம் அவனுடைய பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்;
யெகோவாவோ இருதயங்களை நிறுத்திப்பார்க்கிறார்.
3 பலியிடுவதைவிட, நீதியும் நியாயமும் செய்வதே யெகோவாவுக்குப் பிரியம்.
4 மேட்டிமையான பார்வையும்,
அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர்கள் போடும் வெளிச்சம் பாவமே. 5 ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்திற்கும்,
பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்திற்கும் ஏதுவாகும்.
6 பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது
சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போல இருக்கும்.
7 துன்மார்க்கர்கள் நியாயம்செய்ய மனமில்லாமல் இருக்கிறபடியால்,
அவர்கள் அழிக்கப்பட்டுபோவார்கள்.
8 குற்றமுள்ளவன் தன்னுடைய வழிகளில் மாறுபாடுள்ளவன்;
சுத்தமுள்ளவனோ தன்னுடைய செயலில் செம்மையானவன்.
9 சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட,
வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.
10 துன்மார்க்கனுடைய மனம் தீங்கைச் செய்ய விரும்பும்;
அவனுடைய கண்களில் அவனுடைய அயலானுக்கு இரக்கம் கிடையாது.
11 பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்;
ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.
12 நீதிபரர் துன்மார்க்கர்களுடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்;
துன்மார்க்கர்களைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.
13 ஏழையின் கூக்குரலுக்குத் தன்னுடைய செவியை அடைத்துக்கொள்ளுகிறவன்,
தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
14 இரகசியமாக கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்;
மடியிலுள்ள லஞ்சம் கோபத்தை ஆற்றும்.
15 நியாயம்தீர்ப்பது நீதிமானுக்கு சந்தோஷமும்,
அக்கிரமக்காரர்களுக்கோ அழிவுமாகும்.
16 விவேகத்தின் வழியைவிட்டுத் தப்பி நடக்கிற மனிதன் செத்தவர்களின் கூட்டத்தில் தங்குவான்.
17 சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்;
மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை.
18 நீதிமானுக்கு பதிலாக துன்மார்க்கனும்,
செம்மையானவனுக்கு பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.
19 சண்டைக்காரியும் கோபக்காரியுமான பெண்ணுடன் குடியிருப்பதைவிட
வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.
20 வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு;
மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
21 நீதியையும் தயவையும் பின்பற்றுகிறவன்
நல்வாழ்வையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
22 பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து,
அவர்கள் நம்பின மதில்சுவரை இடித்துப்போடுவான்.
23 தன்னுடைய வாயையும் தன்னுடைய நாவையும் காக்கிறவன்
தன்னுடைய ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.
24 அகங்காரமும் அகந்தையும் உள்ளவனுக்குப் பரியாசக்காரன் என்று பெயர்,
அவன் அகந்தையான கோபத்தோடு நடக்கிறான்.
25 சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதிக்காததால்,
அவனுடைய ஆசை அவனைக் கொல்லும்.
26 அவன் நாள்தோறும் ஆவலுடன் விரும்புகிறான்;
நீதிமானோ தனக்கென்று வைத்துக்கொள்ளாமல் கொடுப்பான்.
27 துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது;
அதைத் தீயசிந்தையோடு செலுத்தினாலோ எத்தனை அதிகமாக அருவருக்கப்படும்.
28 பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்;
செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசக்கூடியவனாவான்.
29 துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்;
செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான்.
30 யெகோவாவுக்கு விரோதமான
ஞானமும், புத்தியும், ஆலோசனையும் இல்லை.
31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்;
வெற்றியோ யெகோவாவால் வரும்.
Chapter 22
அத்தியாயம் 22
சமுதாய வாழ்வின் விதிகள்
1 திரளான செல்வத்தைவிட நற்புகழே தெரிந்துகொள்ளப்படக்கூடியது;
பொன் வெள்ளியைவிட தயையே நலம்.
2 செல்வந்தனும், தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்;
அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் யெகோவா.
3 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்;
பேதைகள் நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
4 தாழ்மைக்கும் யெகோவாவுக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் செல்வமும்,
மகிமையும் ஜீவனும் ஆகும்.
5 மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முட்களும் கண்ணிகளும் உண்டு;
தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவன்
அவைகளைவிட்டுத் தூரமாக விலகிப்போவான்.
6 பிள்ளையை நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து;
அவனுடைய முதிர்வயதிலும் அதை விடாமல் இருப்பான்.
7 செல்வந்தன் தரித்திரனை ஆளுகிறான்;
கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை.
8 அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்;
அவனுடைய கடுங்கோபத்தின் கோல் ஒழியும்.
9 கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்;
அவன் தன்னுடைய உணவில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்.
10 பரியாசக்காரனைத் துரத்திவிடு;
அப்பொழுது சண்டை நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
11 சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்;
ராஜா அவனுக்கு நண்பனாவான்.
12 யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்;
துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.
13 வெளியிலே சிங்கம்,
வீதியிலே கொல்லப்படுவேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
14 ஒழுங்கீனமான பெண்களின் வாய் ஆழமான படுகுழி;
யெகோவாவுடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
15 பிள்ளையின் இருதயத்தில் மதியீனம் ஒட்டியிருக்கும்;
அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும்.
16 தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன்,
தனக்குக் குறைச்சல் உண்டாகவே செல்வந்தனுக்குக் கொடுப்பான்.
ஞானிகளுடைய சொல்
17 உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு,
என் போதகத்தை உன் இருதயத்தில் வை.
18 அவைகளை உன் உள்ளத்தில் காத்து,
அவைகளை உன்னுடைய உதடுகளில் நிலைத்திருக்கச்செய்யும்போது,
அது இன்பமாக இருக்கும்.
19 உன் நம்பிக்கை யெகோவாமேல் இருக்கும்படி,
இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.
20 சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும்,
நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை பதிலாக சொல்லும்படிக்கும்,
21 ஆலோசனையையும்,
ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா?
22 ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே;
சிறுமையானவனை நீதிமன்றத்தில் உபத்திரவப்படுத்தாதே.
23 யெகோவா அவர்களுக்காக வழக்காடி,
அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய உயிரைக் கொள்ளையிடுவார்.
24 கோபக்காரனுக்குத் தோழனாகாதே;
கோபமுள்ள மனிதனோடு நடக்காதே.
25 அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு,
உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய்.
26 உறுதியளித்து உடன்பட்டு,
கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
27 செலுத்த உனக்கு ஒன்றும் இல்லாமல் இருந்தால்,
நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
28 உன்னுடைய முன்னோர்கள் நாட்டின ஆரம்ப எல்லைக்குறியை மாற்றாதே.
29 தன்னுடைய வேலையில் ஜாக்கிரதையாக இருக்கிறவனை நீ கண்டால்,
அவன் சாதாரணமானவர்களுக்கு முன்பாக நிற்காமல்,
ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.
Chapter 23
அத்தியாயம் 23
உணவைக்குறித்த எச்சரிக்கை
1 நீ ஒரு அதிபதியோடு சாப்பிடுவதற்கு உட்கார்ந்தால்,
உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாகக் கவனித்துப்பார்.
2 நீ சாப்பாட்டு பிரியனாக இருந்தால், உன்னுடைய தொண்டையிலே கத்தியை வை.
3 அவனுடைய ருசியுள்ள உணவுகள்மீது ஆசைப்படாதே;
அவைகள் வஞ்சக உணவாக இருக்கலாம்.
4 செல்வந்தனாகவேண்டுமென்று முயற்சிக்காதே;
சுயபுத்தியைச் சாராதே.
5 இல்லாமற்போகும் பொருள்மேல் உன்னுடைய கண்களை ஏன் பறக்கவிடவேண்டும்?
அது கழுகைப்போல சிறகுகளைத் தனக்கு உண்டாக்கிக்கொண்டு,
வானில் பறந்துபோகும்.
6 பொறாமைக்காரனுடைய உணவை சாப்பிடாதே;
அவனுடைய ருசியுள்ள உணவுகளில் ஆசைப்படாதே.
7 அவனுடைய இருதயத்தின் நினைவு எப்படியோ,
அப்படியே அவனும் இருக்கிறான்;
சாப்பிடும், குடியும் என்று அவன் உன்னோடு சொன்னாலும்,
அவனுடைய இருதயம் உன்னோடு இருக்காது.
8 நீ சாப்பிட்ட உணவை வாந்தியெடுத்து,
உன்னுடைய இனிய சொற்களை இழந்துபோவாய்.
9 மூடனுடைய காதுகள் கேட்கப் பேசாதே;
அவன் உன்னுடைய வார்த்தைகளின் ஞானத்தை அசட்டை செய்வான்.
10 பழைய எல்லைக்கல்லை மாற்றாதே;
திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
11 அவர்களுடைய மீட்பர் வல்லவர்;
அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார்.
12 உன் இருதயத்தைப் புத்திமதிக்கும்,
உன் காதுகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக.
13 பிள்ளையை தண்டிக்காமல் விடாதே;
அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகமாட்டான்.
14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால்
பாதாளத்திற்கு அவனுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
15 என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால்,
என்னிலே என்னுடைய இருதயம் மகிழும்.
16 உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால்,
என்னுடைய உள்மனம் மகிழும்.
17 உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே;
நீ நாள்தோறும் யெகோவாவைப் பற்றும் பயத்தோடு இரு.
18 நிச்சயமாகவே முடிவு உண்டு;
உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. 19 என் மகனே, நீ கேட்டு ஞானமடைந்து,
உன்னுடைய இருதயத்தை நல்வழியிலே நடத்து.
20 மதுபானப்பிரியர்களோடும்,
இறைச்சி அதிகமாக சாப்பிடுகிறவர்களோடும் சேராதே.
21 குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்;
தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும்.
22 உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு;
உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே.
23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே;
அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்;
ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான்.
25 உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்;
உன்னைப் பெற்றவள் மகிழுவாள். 26 என் மகனே, உன்னுடைய இருதயத்தை எனக்குக் கொடு;
உன் கண்கள் என்னுடைய வழிகளைப் பார்ப்பதாக.
27 ஒழுங்கீனமானவள் ஆழமான படுகுழி;
அந்நியனுடைய மனைவி இடுக்கமான கிணறு.
28 அவள் கொள்ளைக்காரனைப்போல் ஒளிந்திருந்து,
மனிதர்களுக்குள்ளே பாவிகளைப் பெருகச்செய்கிறாள்.
29 ஐயோ, யாருக்கு வேதனை?
யாருக்குத் துக்கம்?
யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்?
யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்?
30 மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி வாழ்பவர்களுக்கும்,
கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும்தானே.
31 மதுபானம் இரத்த நிறமாக இருந்து,
பாத்திரத்தில் பளபளப்பாகத் தோன்றும்போது,
நீ அதைப் பார்க்காதே; அது மெதுவாக இறங்கும்.
32 முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும்,
விரியனைப்போல் தீண்டும்.
33 உன் கண்கள் ஒழுங்கீனமான பெண்களை நோக்கும்;
உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.
34 நீ நடுக்கடலிலே தூங்குகிறவனைப்போலவும்,
பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலவும் இருப்பாய்.
35 என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை;
என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை;
நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.
Chapter 24
அத்தியாயம் 24
ஞானத்திற்கான அறிவுரைகள்
1 பொல்லாத மனிதர்கள்மேல் பொறாமைகொள்ளாதே;
அவர்களோடு இருக்கவும் விரும்பாதே.
2 அவர்களுடைய இருதயம் கொடுமையை யோசிக்கும்,
அவர்களுடைய உதடுகள் தீவினையைப் பேசும்.
3 வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.
4 அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான எல்லாவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும்.
5 ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்;
அறிவுள்ளவன் தன்னுடைய வல்லமையை அதிகரிக்கச்செய்கிறான்.
6 நல்யோசனைசெய்து யுத்தம்செய்;
ஆலோசனைக்காரர்கள் அநேகரால் வெற்றி கிடைக்கும்.
7 மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாக இருக்கும்;
அவன் நீதிமன்றத்தில் தன்னுடைய வாயைத் திறக்கமாட்டான்.
8 தீவினைசெய்ய நினைக்கிறவன் மதிகெட்டவன் என்னப்படுவான்.
9 தீயநோக்கம் பாவமாகும்; பரியாசக்காரன் மனிதர்களுக்கு அருவருப்பானவன்.
10 ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துபோனால்,
உன்னுடைய பெலன் குறுகினது.
11 மரணத்திற்கு ஒப்புவிக்கப்பட்டவர்களையும், கொலைசெய்வதற்கு கொண்டுபோகிறவர்களையும்
விடுவிக்க முடிந்தால் விடுவி.
12 அதை நாங்கள் அறியோம் என்று சொன்னால்,
இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியமாட்டாரோ?
உன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறவர் கவனிக்கமாட்டாரோ?
அவர் மனிதர்களுக்கு அவனவன் செயல்களுக்கு தக்கதாகப் பலனளிக்கமாட்டாரோ?
13 என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது;
கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாக இருக்கும்.
14 அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன்னுடைய ஆத்துமாவுக்கு இன்பமாக இருக்கும்;
அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும்,
உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது.
15 துன்மார்க்கனே, நீ நீதிமானுடைய வீட்டிற்கு விரோதமாக மறைந்திருக்காதே;
அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே.
16 நீதிமான் ஏழுமுறை விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;
துன்மார்க்கர்களோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள்.
17 உன் எதிரி விழும்போது சந்தோஷப்படாதே;
அவன் இடறும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷப்படாமல் இருப்பதாக.
18 யெகோவா அதைக் காண்பார், அது அவருடைய பார்வைக்கு தீங்காக இருக்கும்;
அப்பொழுது அவனிடத்திலிருந்து அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார்.
19 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே;
துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே.
20 துன்மார்க்கனுக்கு நல்ல முடிவு இல்லை;
துன்மார்க்கர்களுடைய விளக்கு அணைந்துபோகும்.
21 என் மகனே, நீ யெகோவாவுக்கும் ராஜாவுக்கும் பயந்து நட,
கலகக்காரர்களோடு சேராதே.
22 திடீரென அவர்களுடைய ஆபத்து எழும்பும்;
அவர்கள் இருவரின் அழிவையும் அறிந்தவன் யார்?
23 பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்:
நியாயத்திலே பாரபட்சம் நல்லதல்ல.
24 துன்மார்க்கனைப் பார்த்து:
நீதிமானாக இருக்கிறாய் என்று சொல்லுகிறவனை மக்கள் சபிப்பார்கள்,
குடிமக்கள் அவனை வெறுப்பார்கள்.
25 அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியம் உண்டாகும்,
அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும்.
26 செம்மையான மறுமொழி சொல்லுகிறவன்
உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமம்.
27 வெளியில் உன்னுடைய வேலையைத் தயாராக்கி,
வயலில் அதை ஒழுங்காக்கி,
பின்பு உன்னுடைய வீட்டைக் கட்டு.
28 நியாயமில்லாமல் பிறனுக்கு விரோதமாகச் சாட்சியாக ஏற்படாதே;
உன்னுடைய உதடுகளினால் வஞ்சகம் பேசாதே.
29 அவன் எனக்குச் செய்தபடி நானும் அவனுக்குச் செய்வேன்,
அவன் செய்த செயல்களுக்குத் தகுந்தபடி நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.
30 சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
31 இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாக இருந்தது;
நிலத்தின் முகத்தை முட்கள் மூடினது,
அதின் கற்சுவர் இடிந்துகிடந்தது. 32 அதைக் கண்டு சிந்தனை செய்தேன்;
அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
33 இன்னும் கொஞ்சம் உறங்கட்டும்,
இன்னும் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு தூங்கட்டும் என்பாயோ?
34 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும்
உன் வறுமை ஆயுதம் அணிந்தவனைப்போலவும் வரும்.
Chapter 25
அத்தியாயம் 25
மேலும் சாலொமோனின் நீதிமொழிகள்
1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள்
பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
2 காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை;
காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
3 வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும்,
ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
4 வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு,
அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும்.
5 ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு,
அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
6 ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே;
பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே.
7 உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல;
அவன் உன்னைப் பார்த்து:
மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
8 வழக்காடப் வேகமாகமாகப் போகாதே;
முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது,
நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
9 நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு,
மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
10 மற்றப்படி அதைக் கேட்கிறவன்
உன்னை நிந்திப்பான்;
உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது.
11 ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை
வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.
12 கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன்,
பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.
13 அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ,
அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்;
அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.
14 கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன்
மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம்.
15 நீண்ட பொறுமையினால்
பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்;
இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
16 தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு;
அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
17 உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி,
அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.
18 பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன்
தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன்.
19 ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது
உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம்.
20 மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன்,
குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும்,
வெடியுப்பின் [1] மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.
21 உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால்,
அவனுக்கு சாப்பிட உணவு கொடு;
அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
22 அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; [2]
யெகோவா உனக்குப் பலனளிப்பார்.
23 வடகாற்று மழையையும்,
புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
24 சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட,
வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
25 தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி
தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம்.
26 துன்மார்க்கர்களுக்கு முன்பாக
நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும்.
27 தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல,
தற்புகழை நாடுவதும் புகழல்ல.
28 தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன்
மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.
Chapter 26
அத்தியாயம் 26
மதியீனன்
1 கோடைக்காலத்திலே உறைந்த பனியும்,
அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல,
மூடனுக்கு மகிமை தகாது.
2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலவும்,
தகைவிலான் குருவி பறந்து போவதுபோலவும்,
காரணம் இல்லாமல் சொன்னசாபம் தங்காது.
3 குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும்,
மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
4 மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடுக்காதே;
கொடுத்தால் நீயும் அவனைப்போல ஆவாய்.
5 மூடனுக்கு அவனுடைய மதியீனத்தின்படி மறுஉத்திரவு கொடு;
கொடுக்காவிட்டால் அவன் தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பான்.
6 மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன்
தன்னுடைய கால்களையே வெட்டிக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
7 நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும்,
அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
8 மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான்.
9 மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி
வெறியன் கையில் அகப்பட்ட முள்.
10 பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து,
மூடனையும் வேலைவாங்குகிறான்,
மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான்.
11 நாயானது தான் கக்கினதை சாப்பிடும்படித் திரும்புவதுபோல,
மூடனும் தன்னுடைய மூடத்தனத்திற்குத் திரும்புகிறான்.
12 தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால்,
அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம்.
13 வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
14 கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல,
சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
15 சோம்பேறி தன்னுடைய கையைக் கலத்திலே வைத்து
அதைத் தன்னுடைய வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
16 புத்தியுள்ள மறுஉத்திரவு சொல்லத்தகும் ஏழுபேரைவிட
சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
17 வழியிலே போகும்போது தனக்கு சம்மந்தமில்லாத வழக்கில் தலையிடுகிறவன்
நாயைக் காதைப் பிடித்து இழுக்கிறவனைப்போல இருக்கிறான்.
18 கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
19 அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து:
நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன்
என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான்.
20 விறகில்லாமல் நெருப்பு அணையும்;
கோள்சொல்லுகிறவன் இல்லாமல் சண்டை அடங்கும்.
21 கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல,
கோபக்காரன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
22 கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போல இருக்கும்;
ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் குத்தும்.
23 நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம்
வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும்.
24 பகைஞன் தன்னுடைய உள்ளத்தில் கபடத்தை மறைத்து,
தன்னுடைய உதடுகளினால் சூதுபேசுகிறான்.
25 அவன் தாழ்மையாக பேசினாலும் அவனை நம்பாதே;
அவனுடைய இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
26 பகையை வஞ்சகமாக மறைத்து வைக்கிறவன் எவனோ,
அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
27 படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்;
கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
28 பொய்நாவு தன்னால் பாதிக்கப்பட்டவர்களைப் பகைக்கும்;
முகஸ்துதி பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.
Chapter 27
அத்தியாயம் 27
குடும்ப வாழ்வு
1 நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபேசாதே;
ஒரு நாள் பிறப்பிப்பதை அறியமாட்டாயே.
2 உன்னுடைய வாய் அல்ல, மற்றவனே உன்னைப் புகழட்டும்;
உன்னுடைய உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
3 கல் கனமும், மணல் பாரமுமாக இருக்கும்;
மூடனுடைய கோபமோ இந்த இரண்டைவிட பாரமாம்.
4 கடுங்கோபம் கொடுமையுள்ளது, கோபம் பயங்கரமானது;
பொறாமையோவென்றால், அதற்கு முன்னே நிற்கக்கூடியவன் யார்?
5 மறைவான நேசத்தைவிட வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.
6 நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்;
சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.
7 திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்;
பசியுள்ளவனுக்கோ கசப்பான ஆகாரங்களும் தித்திப்பாக இருக்கும்.
8 தன்னுடைய கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ,
அப்படியே தன்னுடைய இடத்தைவிட்டு அலைகிற மனிதனும் இருக்கிறான்.
9 வாசனைத் தைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல,
ஒருவனுடைய நண்பன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.
10 உன்னுடைய நண்பனையும், உன்னுடைய தகப்பனுடைய நண்பனையும் விட்டுவிடாதே;
உன்னுடைய ஆபத்துக்காலத்தில் உன்னுடைய சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே;
தூரத்திலுள்ள சகோதரனைவிட சமீபத்திலுள்ள அயலானே சிறப்பானவன்.
11 என் மகனே, என்னை சபிக்கிறவனுக்கு நான் உத்திரவு கொடுக்கும்படியாக,
நீ ஞானவானாகி, என்னுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.
12 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்;
பேதைகளோ நேராகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.
13 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய ஆடையை எடுத்துக்கொள்,
அந்நிய பெண்ணுக்காக ஈடுவாங்கிக்கொள்.
14 ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்த சத்தத்தோடு
தன்னுடைய நண்பனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.
15 அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும்
சண்டைக்காரியான பெண்ணும் சரி.
16 அவளை அடக்கப்பார்க்கிறவன்
காற்றை அடக்கித் தன்னுடைய வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.
17 இரும்பை இரும்பு கூர்மையாக்கிடும்;
அப்படியே மனிதனும் தன்னுடைய நண்பனைக் கூர்மையாக்குகிறான்.
18 அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியை சாப்பிடுவான்;
தன்னுடைய எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.
19 தண்ணீரில் முகத்திற்கு முகம் ஒத்திருப்பதைப்போல,
மனிதர்களில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.
20 பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை;
அதுபோல மனிதனுடைய ஆசைகளும் திருப்தியாகிறதில்லை.
21 வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை;
மனிதனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.
22 மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும்,
அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.
23 உன்னுடைய ஆடுகளின் நிலைமையை நன்றாக அறிந்துகொள்;
உன்னுடைய மந்தைகளின்மேல் கவனமாக இரு.
24 செல்வம் என்றைக்கும் நிலைக்காது;
கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?
25 புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும்,
மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.
26 ஆட்டுக்குட்டிகள் உனக்கு ஆடையையும்,
கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.
27 வெள்ளாட்டுப்பால் உன்னுடைய உணவுக்கும்,
உன் வீட்டாரின் உணவுக்கும்
உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானதாக இருக்கும்.
Chapter 28
அத்தியாயம் 28
நீதிமான்களின் வாழ்க்கை
1 ஒருவனும் பின்தொடராமல் இருந்தும் துன்மார்க்கர்கள் ஓடிப்போகிறார்கள்;
நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாக இருக்கிறார்கள்.
2 தேசத்தின் பாவத்தினால் அதின் அதிகாரிகள் அநேகராக இருக்கிறார்கள்;
புத்தியும் அறிவுமுள்ள மனிதனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.
3 ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன்
உணவு விளையாதபடி வெள்ளமாக அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போல இருக்கிறான்.
4 வேதப்பிரமாணத்தைவிட்டு விலகுகிறவர்கள்
துன்மார்க்கர்களைப் புகழுகிறார்கள்;
வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடு போராடுகிறார்கள்.
5 துன்மார்க்கர்கள் நியாயத்தை அறியார்கள்;
யெகோவாவை தேடுகிறவர்களோ அனைத்தையும் அறிவார்கள்.
6 இருவழிகளில் நடக்கிறவன் செல்வந்தனாக இருந்தாலும்,
நேர்மையாக நடக்கிற தரித்திரன் அவனைவிட சிறப்பானவன்.
7 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மகன்;
உணவுப்பிரியர்களுக்குத் தோழனாக இருக்கிறவனோ
தன்னுடைய தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
8 அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன்னுடைய சொத்தைப் பெருகச்செய்கிறவன்,
தரித்திரர்கள்மேல் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.
9 வேதத்தைக் கேட்காதபடி தன்னுடைய செவியை விலக்குகிறவனுடைய
ஜெபமும் அருவருப்பானது.
10 உத்தமர்களை மோசப்படுத்தி,
பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்;
உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.
11 செல்வந்தன் தன்னுடைய பார்வைக்கு ஞானவான்;
புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.
12 நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்;
துன்மார்க்கர்கள் எழும்பும்போதோ மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்.
13 தன்னுடைய பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்;
அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம்பெறுவான்.
14 எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்;
தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.
15 ஏழை மக்களை ஆளும் துன்மார்க்க அதிகாரி
கெர்ச்சிக்கும் சிங்கத்திற்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாக இருக்கிறான்.
16 தலைவன் புத்தியீனனாக இருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி;
பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.
17 இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிய ஓடிவந்தால்,
அவனை ஆதரிக்கவேண்டாம்.
18 உத்தமனாக நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்;
மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.
19 தன்னுடைய நிலத்தைப் பயிரிடுகிறவன் உணவால் திருப்தியாவான்;
வீணர்களைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.
20 உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;
செல்வந்தனாகிறதற்கு அவசரப்படுகிறவனோ ஆக்கினைக்குத் தப்பமாட்டான்.
21 பாரபட்சம் நல்லதல்ல,
பாரபட்சமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்திற்காக அநியாயம் செய்வான்.
22 பொறாமைக்காரன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான்,
வறுமை தனக்கு வருமென்று அறியாமல் இருக்கிறான்.
23 தன்னுடைய நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைவிட,
கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.
24 தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் கொள்ளையிட்டு,
அது துரோகமல்ல என்பவன் பாழாக்குகிற மனிதனுக்குத் தோழன்.
25 பெருநெஞ்சன் வழக்கை உண்டாக்குகிறான்;
யெகோவாவை நம்புகிறவனோ செழிப்பான்.
26 தன்னுடைய இருதயத்தை நம்புகிறவன் மூடன்;
ஞானமாக நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.
27 தரித்திரர்களுக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையமாட்டான்;
தன்னுடைய கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.
28 துன்மார்க்கர்கள் எழும்பும்போது மனிதர்கள் மறைந்துகொள்கிறார்கள்;
அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
Chapter 29
அத்தியாயம் 29
ஞானத்தின் போதனை
1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன்னுடைய பிடரியைக் கடினப்படுத்துகிறவன்
உதவியின்றி திடீரென்று நாசமடைவான்.
2 நீதிமான்கள் பெருகினால் மக்கள் மகிழுவார்கள்;
துன்மார்க்கர்கள் ஆளும்போதோ மக்கள் தவிப்பார்கள்.
3 ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்னுடைய தகப்பனை
சந்தோஷப்படுத்துகிறான்; வேசிகளோடு தொடர்புள்ளவனோ சொத்தை அழிக்கிறான்.
4 நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்;
லஞ்சப்பிரியனோ அதைக் தலைகீழாக்குகிறான்.
5 பிறனை முகஸ்துதி செய்கிறவன்,
அவனுடைய கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
6 துன்மார்க்கனுடைய துரோகத்திலே கண்ணி இருக்கிறது;
நீதிமானோ பாடி மகிழுகிறான்.
7 நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்து அறிகிறான்;
துன்மார்க்கனோ அதை அறிய விரும்பமாட்டான்.
8 பரியாசக்காரர்கள் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்;
ஞானிகளோ கோபத்தை விலக்குகிறார்கள்.
9 ஞானி மூடனுடன் வழக்காடும்போது,
கோபப்பட்டாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
10 இரத்தப்பிரியர்கள் உத்தமனைப் பகைக்கிறார்கள்;
செம்மையானவர்களோ அவனுடைய உயிரைக் காப்பாற்றுகிறார்கள்.
11 மூடன் தன்னுடைய உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்;
ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
12 அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால்,
அவனுடைய அலுவலர்கள் எல்லோரும் துன்மார்க்கர்களாவார்கள்.
13 தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்;
அந்த இருவருடைய கண்களுக்கும் யெகோவா வெளிச்சம் கொடுக்கிறார்.
14 ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாக விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம்
என்றும் நிலைபெற்றிருக்கும்.
15 பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்;
தன்னுடைய இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ
தன்னுடைய தாய்க்கு வெட்கத்தை உண்டாக்குகிறான்.
16 துன்மார்க்கர்கள் பெருகினால் பாவமும் பெருகும்;
நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
17 உன்னுடைய மகனை தண்டி, அவன் உனக்கு ஆறுதல் செய்வான்,
உன்னுடைய ஆத்துமாவிற்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
18 தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்;
வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
19 அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கமாட்டான்;
அவைகளை அவன் அறிந்தாலும் உத்திரவு கொடுக்கமாட்டான்.
20 தன்னுடைய வார்த்தைகளில் பதறுகிற மனிதனைக் கண்டால்,
அவனை நம்புவதைவிட மூடனை நம்பலாம்.
21 ஒருவன் தன்னுடைய அடிமையைச் சிறு வயதுமுதல் அவனது இஷ்டப்படி வளர்த்தால்,
முடிவிலே அவன் தன்னை மகனாக உரிமைபாராட்டுவான்.
22 கோபக்காரன் வழக்கை உண்டாக்குகிறான்;
கடுங்கோபி பெரும்பாதகன்.
23 மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்;
மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான்.
24 திருடனோடு பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைப் பகைக்கிறான்;
சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
25 மனிதனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்;
யெகோவாவை நம்புகிறவனோ
உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
26 ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்;
ஆனாலும் அவனவனுடைய நியாயம் யெகோவாவாலே தீரும்.
27 நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்;
சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
Chapter 30
அத்தியாயம் 30
ஆகூரின் நீதிமொழிகள்
1 யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து,
ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்:
2 மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்;
மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.
3 நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை,
பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
4 வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்?
காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்?
தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்?
பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்?
அவருடைய பெயர் என்ன?
அவருடைய மகனுடைய பெயர்
என்ன? அதை அறிவாயோ?
5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்;
தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே,
கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார்,
நீ பொய்யனாவாய்.
7 இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்;
நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
8 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்;
தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக.
9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்;
தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும்,
என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும்.
10 எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே;
அவன் உன்னைச் சபிப்பான்,
நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.
11 தங்களுடைய தகப்பனைச் சபித்தும்,
தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு.
12 தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும்,
தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு.
13 வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.
14 தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும்
சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு.
15 கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு.
திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு.
16 அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும்,
தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே.
17 தகப்பனைப் பரியாசம்செய்து,
தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும்,
கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.
18 எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு,
என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு.
19 அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும்,
கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும்,
ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.
20 அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது;
அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து;
நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
21 மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது,
நான்கையும் அது தாங்கமுடியாது.
22 அரசாளுகிற அடிமைக்காகவும்,
உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,
23 பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும்,
தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே.
24 பூமியில் சிறியவைகளாக இருந்தும்,
மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு.
25 அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும்,
கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,
26 பெலமில்லாத உயிரினமாக இருந்தும்,
தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும்,
27 ராஜா இல்லாமல் இருந்தும்,
கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
28 தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி,
அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
29 விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு;
விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு.
30 அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,
31 பெருமையாய் நடக்கிற சேவலும் [1] , வெள்ளாட்டுக் கடாவும்,
ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.
32 நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து,
துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு.
33 பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்;
மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்;
அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
Chapter 31
அத்தியாயம் 31
லேமுவேலிற்கு சொல்லப்பட்ட வசனங்கள்
1 ராஜாவாகிய லேமுவேலின் வசனங்கள்;
அவனுடைய தாய் அவனுக்குப் போதித்த உபதேசம்:
2 என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே,
என்னுடைய பொருத்தனைகளின் மகனே,
3 பெண்களுக்கு உன்னுடைய பெலனையும்
ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே.
4 திராட்சைரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;
லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல;
மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
5 மதுபானம் குடித்தால் அவர்களுடைய நியாயப்பிரமாணத்தை மறந்து,
சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சைரசத்தையும் கொடுங்கள்;
7 அவன் குடித்துத் தன்னுடைய குறைவை மறந்து,
தன்னுடைய வருத்தத்தை அப்புறம் நினைக்காமல் இருக்கட்டும்.
8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்கள் எல்லோருடைய நியாயத்திற்காகவும்
உன்னுடைய வாயைத் திற.
9 உன்னுடைய வாயைத் திறந்து, நீதியாக நியாயம் தீர்த்து,
சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயம் செய்.
10 குணசாலியான பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார்?
அவளுடைய விலை முத்துக்களைவிட உயர்ந்தது.
11 அவளுடைய கணவனுடைய இருதயம் அவளை நம்பும்;
அவனுடைய செல்வம் குறையாது.
12 அவள் உயிரோடிருக்கிற நாட்களெல்லாம் அவனுக்குத் தீமையை அல்ல,
நன்மையையே செய்கிறாள்.
13 ஆட்டு ரோமத்தையும் சணலையும் தேடி,
தன்னுடைய கைகளினால் உற்சாகத்தோடு வேலைசெய்கிறாள்.
14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்;
தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள்.
15 இருட்டோடு எழுந்து தன்னுடைய வீட்டாருக்கு உணவுகொடுத்து,
தன்னுடைய வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள்.
16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்;
தன்னுடைய கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சைத்தோட்டத்தை நாட்டுகிறாள்.
17 தன்னை பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு,
தன்னுடைய கைகளைப் பலப்படுத்துகிறாள்.
18 தன்னுடைய வியாபாரம் பயனுள்ளதென்று அறிந்திருக்கிறாள்;
இரவிலே அவளுடைய விளக்கு அணையாமல் இருக்கும்.
19 தன்னுடைய கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்;
அவளுடைய விரல்கள் கதிரைப் பிடிக்கும்.
20 சிறுமையானவர்களுக்குத் தன்னுடைய கையைத் திறந்து,
ஏழைகளுக்குத் தன்னுடைய கரங்களை நீட்டுகிறாள்.
21 தன்னுடைய வீட்டார் அனைவருக்கும் கம்பளி ஆடை இருக்கிறபடியால்,
தன்னுடைய வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படமாட்டாள்.
22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டாக்குகிறாள்;
மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவளுடைய ஆடை.
23 அவளுடைய கணவன் தேசத்தின் மூப்பர்களோடு நீதிமன்றங்களில் உட்கார்ந்திருக்கும்போது
பெயர் பெற்றவனாக இருக்கிறான்.
24 மெல்லிய புடவைகளை உண்டாக்கி விற்கிறாள்;
கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள்.
25 அவளுடைய உடை பலமும் அலங்காரமுமாக இருக்கிறது;
வருங்காலத்தைப் பற்றியும் மகிழுகிறாள்.
26 தன்னுடைய வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்;
தயையுள்ள போதகம் அவளுடைய நாவின்மேல் இருக்கிறது.
27 அவள் சோம்பலின் அப்பத்தை சாப்பிடாமல்,
தன்னுடைய வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாக இருக்கிறாள்.
28 அவளுடைய பிள்ளைகள் எழும்பி,
அவளை பாக்கியவதி என்கிறார்கள்;
அவளுடைய கணவன் அவளைப்பார்த்து:
29 அநேகம் பெண்கள் குணசாலிகளாக இருந்தது உண்டு;
நீயோ அவர்கள் எல்லோரையும்விட மேலானவள் என்று அவளைப் புகழுகிறான்.
30 செளந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,
யெகோவாவுக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
31 அவளுடைய கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்;
அவளுடைய செயல்கள் வாசல்களில் அவளைப் புகழ்வதாக.