எபிரெயர்
Chapter 1
அத்தியாயம்– 1
தீர்க்கதரிசிகளிலும் மேலானவர்
1 முற்காலத்தில் வெவ்வேறு காலங்களில் அநேக விதங்களில் தீர்க்கதரிசிகள் மூலமாக முற்பிதாக்களோடு பேசின தேவன் 2 இந்தக் கடைசிநாட்களில் குமாரன் மூலமாக நம்மோடு பேசினார் இவரை எல்லாவற்றிற்கும் வாரிசாக நியமித்தார் இவர் மூலமாக உலகங்களையும் உண்டாக்கினார் 3 இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும் அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார் 4 இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார் 5 எப்படியென்றால் நீர் என்னுடைய நேசகுமாரன் இன்று நான் உம் தகப்பனானேன் என்றும் நான் அவருக்குப் பிதாவாக இருப்பேன் அவர் எனக்குக் குமாரனாக இருப்பார் என்றும் அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாவது சொன்னது உண்டா 6 மேலும் தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது தேவதூதர்கள் எல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார் 7 தேவதூதர்களைப்பற்றி தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும் தம்முடைய ஊழியக்காரர்களை அக்கினிஜூவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது 8 குமாரனைப்பற்றி தேவனே உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்கும் உள்ளது உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாக இருக்கிறது 9 நீர் நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர் எனவே தேவனே உம்முடைய தேவன் உமது தோழர்களைவிட உம்மை ஆனந்தத் தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும் 10 கர்த்தாவே நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர் வானங்கள் உம்முடைய கைவேலைகளாக இருக்கிறது 11 அவைகள் அழிந்துபோகும் நீரோ நிலைத்திருப்பீர் அவைகள் எல்லாம் ஆடைபோலப் பழைமையாகப்போகும் 12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர் அப்பொழுது அவைகள் மாறிப்போகும் ஆனால் நீரோ மாறாதவராக இருக்கிறீர் உம்முடைய ஆண்டுகள் முடிந்து போவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது 13 மேலும் நான் உம்முடைய எதிரிகளை உமது பாதத்தின் கீழே போடும்வரை நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்திரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாவது அவர் சொன்னதுண்டா 14 அவர்கள் எல்லோரும் இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களுக்காக ஊழியம் செய்வதற்கு அனுப்பப்பட்ட பணிவிடை செய்யும் ஆவிகளாக இருக்கிறார்கள் அல்லவா
Chapter 2
அத்தியாயம்– 2
கவனிக்கவேண்டுமென எச்சரிப்பு
1 எனவே நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும் 2 ஏனென்றால் தேவதூதர்கள் மூலமாகச் சொல்லப்பட்ட வசனத்திற்கு எதிரான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது 3 முதலாவது கர்த்தர் மூலமாக அறிவிக்கப்பட்டு பின்பு அவரிடம் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும் 4 அற்புதங்களினாலும் அதிசயங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும் தம்முடைய விருப்பத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும் தேவன்தாமே சாட்சி கொடுத்ததுமாக இருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலை இல்லாமல் இருப்போம் என்றால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம் 5 இனிவரும் உலகத்தைப்பற்றிப் பேசுகிறோமே அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை 6 ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக மனிதனை நீர் நினைக்கிறதற்கும் மனிதனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் 7 அவனை தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவனாக்கினீர் மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி உம்முடைய கைகளின் செயல்களின்மீது அவனை அதிகாரியாக வைத்து எல்லாவற்றையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான் 8 எல்லாவற்றையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற காரியத்தில் அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றும் இல்லை ஆனால் இன்னும் எல்லாம் அவனுக்கு கீழ்ப்பட்டிருப்பதைக் காணமுடியவில்லை 9 என்றாலும் தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்க்க தேவதூதர்களைவிட கொஞ்சம் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைப் பார்க்கிறோம் 10 ஏனென்றால் தமக்காகவும் தம்மூலமாகவும் எல்லாவற்றையும் உண்டாக்கினவர் அநேக பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கும்போது அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாக இருந்தது 11 எப்படியென்றால் பரிசுத்தம் பண்ணுகிறவரும் பரிசுத்தம் பண்ணப்பட்டவர்களுமாகிய எல்லோரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள் இதினால் அவர்களைச் சகோதரர்கள் என்று சொல்ல அவர் வெட்கப்படாமல் 12 உம்முடைய நாமத்தை என் சகோதரர்களுக்கு அறிவித்து சபை நடுவில் உம்மைத் துதித்துப்பாடுவேன் என்றும் 13 நான் அவரிடம் நம்பிக்கையாக இருப்பேன் என்றும் இதோ நானும் தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார் 14 எனவே பிள்ளைகள் சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருக்க அவரும் அவர்களைப்போல சரீரத்தையும் இரத்தத்தையும் உடையவரானார் மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிப்பதற்கும் 15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரையும் விடுதலைபண்ணுவதற்கும் அப்படியானார் 16 எனவே அவர் தேவதூதர்களுக்கு உதவியாகக் கைகொடுக்காமல் ஆபிரகாமின் வம்சத்திற்கு உதவியாகக் கைகொடுத்தார் 17 அன்றியும் அவர் மக்களின் பாவங்களை நிவர்த்தி செய்வதற்காக தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையும் உள்ள பிரதான ஆசாரியராக இருப்பதற்கு எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரர்களைப்போல மாறவேண்டியதாக இருந்தது 18 எனவே அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுகள்பட்டதினாலே அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராக இருக்கிறார்
Chapter 3
அத்தியாயம்– 3
இயேசு மோசேயிலும் பெரியவர்
1 இப்படியிருக்க பரலோக அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரர்களே நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலர்களும் பிரதான ஆசாரியருமாக இருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள் 2 மோசே தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்ததுபோல இவரும் தம்மை நியமித்தவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார் 3 வீட்டைக் கட்டுகிறவன் வீட்டைவிட அதிக கனத்திற்குரியவனாக இருக்கிறான் அதுபோல மோசேயைவிட இவர் அதிக மகிமைக்குத் தகுதியானவராக இருக்கிறார் 4 ஏனென்றால் எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும் எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன் 5 சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக மோசே பணிவிடைக்காரனாக தேவனுடைய வீட்டில் எல்லாவற்றிலும் உண்மையுள்ளவனாக இருந்தான் 6 கிறிஸ்துவோ தேவனுடைய வீட்டில் அதிகாரமுள்ள மகனாக உண்மையுள்ளவராக இருக்கிறார் நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுவரைக்கும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம் என்றால் நாமே அவருடைய வீடாக இருப்போம் 7 எனவே பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் 8 வனாந்திரத்திலே கோபமூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் 9 அங்கே உங்களுடைய முற்பிதாக்கள் என்னைச் சோதித்து என்னைப் பரீட்சைபார்த்து நாற்பது வருடகாலங்கள் என் செய்கைகளைப் பார்த்தார்கள் 10 எனவே நான் அந்த வம்சத்தாரை வெறுத்து அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள மக்களென்றும் என்னுடைய வழிகளைத் தெரியாதவர்களென்றும் சொல்லி 11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிக்கமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார் 12 சகோதரர்களே ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் யாருக்கும் இல்லாதபடி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் 13 உங்களில் ஒருவரும் பாவத்தின் ஏமாற்றுதலினாலே கடினப்பட்டுப்போகாமல் இருக்க இன்று என்று சொல்லப்படும் நாள்வரை ஒவ்வொருநாளும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள் 14 நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுவரைக்கும் உறுதியாகப் பிடித்துக்கொண்டிருப்போமானால் கிறிஸ்துவிடம் பங்குள்ளவர்களாக இருப்போம் 15 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று சொல்லியிருக்கிறதே 16 கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார் மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லோரும் அப்படிச் செய்தார்களல்லவா 17 மேலும் அவர் நாற்பது வருடங்களாக யாரை வெறுத்தார் பாவம் செய்தவர்களைத்தானே அவர்களுடைய மரித்த சடலங்கள் வனாந்திரத்தில் விழுந்துபோனதே 18 பின்னும் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கமாட்டார்கள் என்று அவர் யாரைப்பற்றி ஆணையிட்டார் கீழ்ப்படியாதவர்களைப்பற்றித்தானே 19 எனவே அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கமுடியாமல் போனார்கள் என்று பார்க்கிறோம்
Chapter 4
அத்தியாயம்– 4
தேவ பிள்ளைகளுக்கு இளைப்பாறுதல்
1 ஆகவே அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்குத் தகுந்த வாக்குத்தத்தம் நமக்கு உண்டாயிருக்க உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாக இல்லாமலிருக்கக் கவனமாக இருப்போம் 2 ஏனென்றால் நற்செய்தி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது கேட்டவர்கள் விசுவாசம் இல்லாமல் கேட்டதினால் அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கவில்லை 3 விசுவாசித்த நாமோ அந்த இளைப்பாறுதலில் நுழைகிறோம் விசுவாசியாதவர்களைக் குறித்து தேவன் இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார் அவருடைய செயல்கள் உலகம் தோன்றிய காலத்திலேயே முடிந்திருந்தும் இப்படிச் சொன்னார் 4 ஏனென்றால் தேவன் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார் 5 அன்றியும் அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் நுழையமாட்டார்கள் என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார் 6 எனவே சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாக இருக்கிறதினாலும் நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாததினாலே அதில் நுழையாமல்போனதினாலும் 7 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தாமல் இருங்கள் என்று நீண்டகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார் 8 யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குள் நடத்தியிருந்தால் பின்பு அவர் மற்றொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே 9 எனவே தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது 10 ஏனென்றால் அவருடைய இளைப்பாறுதலில் நுழைந்தவன் தேவன் தம்முடைய செயல்களை முடித்து ஓய்ந்ததுபோல தானும் தன் செயல்களை முடித்து ஓய்ந்திருப்பான் 11 எனவே இந்த மாதிரியின்படி ஒருவனும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாமல் இருக்க நாம் இந்த இளைப்பாறுதலில் நுழைய கவனமாக இருப்போம் 12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும் இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும் ஆத்துமாவையும் ஆவியையும் கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது 13 அவருடைய பார்வைக்கு மறைவான படைப்பு ஒன்றும் இல்லை எல்லாம் அவருடைய கண்களுக்குமுன்பாக மறைக்கப்படாததாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறது அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் 14 வானங்களின்வழியாகப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறதினால் நாம் பண்ணின அறிக்கையை உறுதியாகப் பற்றிக்கொண்டிருப்போம் 15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதாபப்படமுடியாத பிரதான ஆசாரியர் நமக்கு இல்லாமல் எல்லாவிதத்திலும் நம்மைப்போல சோதிக்கப்பட்டும் பாவம் இல்லாதவராக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார் 16 எனவே நாம் இரக்கத்தைப் பெற்றுக்கொள்ளவும் சரியான நேரத்தில் உதவிசெய்யும் கிருபையை அடையவும் தைரியமாகக் கிருபையின் சிங்காசனத்திடம் சேருவோம்
Chapter 5
அத்தியாயம்– 5
1 அன்றியும் மனிதர்களில் இருந்து தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த மனிதர்களுக்காக தேவகாரியங்கள் செய்வதற்கு நியமிக்கப்படுகிறான் 2 பிரதான ஆசாரியனும் பலவீனமுள்ளவனாக இருக்கிறதினாலே அறியாதவர்களுக்கும் வழி தவறிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாக இருக்கிறான் 3 இதனால் அவன் மக்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாக இருக்கிறது 4 மேலும் ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்படாமல் ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்திற்குத் தானாக ஏற்படுகிறதில்லை 5 அப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை நீர் என்னுடைய நேசகுமாரன் இன்று நான் உம் தகப்பனானேன் என்று அவரோடு சொன்னவரே அவரை உயர்த்தினார் 6 அப்படியே வேறொரு இடத்திலும் நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார் 7 அவர் சரீரத்தில் இருந்த நாட்களில் தம்மை மரணத்திலிருந்து இரட்சிக்க வல்லமை உள்ளவரை நோக்கி பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் ஜெபம்பண்ணி வேண்டுதல்செய்து தமக்கு உண்டான பயபக்தியினால் கேட்கப்பட்டு 8 அவர் குமாரனாக இருந்தும் அவர் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு 9 தாம் பூரணரானபின்பு தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி 10 மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது 11 இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் அதிகமாகப் பேசலாம் நீங்கள் கேட்பதில் மந்தமாக இருப்பதினால் அதை உங்களுக்கு விளக்கிச் சொல்லுகிறது எனக்குக் கடினமாக இருக்கும் 12 காலத்தைப் பார்த்தால் போதகர்களாக இருக்கவேண்டிய உங்களுக்கு தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படை உபதேசங்களை மீண்டும் உபதேசிக்கவேண்டியதாக இருக்கிறது நீங்கள் திடமான உணவைச் சாப்பிடுகிறவர்களாக இல்லை பாலைக் குடிக்கிறவர்களானீர்கள் 13 பாலைக் குடிக்கிறவன் குழந்தையாக இருக்கிறதினாலே நீதியின் வசனத்தில் அனுபவம் இல்லாதவனாக இருக்கிறான் 14 திடமான உணவானது நன்மை எது தீமை எது என்று புரிந்துகொள்ளும் பயிற்சியினால் சரியானது என்ன தவறானது என்ன என்று பகுத்தறியும் அனுபவம் உள்ளவர்களாகிய தேறினவர்களுக்கே உரியது
Chapter 6
அத்தியாயம்– 6
1 ஆகவே கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசவசனங்களை நாம்விட்டுவிட்டு செத்த செய்கைகளைவிட்டு மனம்திரும்புதல் தேவன்மேல் வைக்கும் விசுவாசம் 2 ஞானஸ்நான உபதேசம் கரங்களை வைத்தல் மரித்தோரின் உயிர்த்தெழுதல் நித்திய நியாயத்தீர்ப்பு என்ற உபதேசங்களாகிய அஸ்திபாரத்தை மீண்டும் போடாமல் தேறினவர்களாகும்படி கடந்துபோவோம் 3 தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம் 4 ஏனென்றால் ஒருமுறை பிரகாசிக்கப்பட்டும் பரலோக பரிசை ருசிபார்த்தும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றும் 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும் 6 மறுதலித்துப்போனவர்கள் தேவனுடைய குமாரனைத் தாங்களே மீண்டும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறதினால் மனந்திரும்புவதற்காக அவர்களை மீண்டும் புதுப்பிக்கிறது முடியாதகாரியம் 7 எப்படியென்றால் தன்மேல் அடிக்கடி பெய்கிற மழைநீரைக் குடித்து தன்னிடம் பயிரிடுகிறவர்களுக்குத் தேவையான பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும் 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ மதிப்பில்லாததும் சபிக்கப்படுகிறதாகவும் இருக்கிறது சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு 9 பிரியமானவர்களே நாங்கள் இப்படிச் சொன்னாலும் நன்மையானவைகளும் இரட்சிப்பிற்குரிய காரியங்களும் உங்களிடம் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம் 10 ஏனென்றால் உங்களுடைய செயல்களையும் நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியம் செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் அவருடைய நாமத்திற்காகக் காண்பித்த உங்களுடைய அன்பையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவர் இல்லையே 11 நீங்கள் அசதியாக இல்லாமல் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் அதிக பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக இருந்து 12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயம் உண்டாக நீங்கள் எல்லோரும் முடிவுவரைக்கும் அதிக கவனத்தைக் காண்பிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறோம் 13 ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது ஆணையிடுவதற்கு தம்மைவிட பெரியவர் ஒருவரும் இல்லாததினாலே தமது நாமத்தினாலே ஆணையிட்டு 14 நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார் 15 அப்படியே அவன் பொறுமையாகக் காத்திருந்து வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றுக்கொண்டான் 16 மனிதர்கள் தங்களைவிட பெரியவர்கள் பெயரில் ஆணையிடுவார்கள் எல்லா விவாதங்களிலும் உறுதிப்படுத்துவதற்கு ஆணையிடுதலே முடிவு 17 அப்படியே தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாகக் காண்பிக்க விருப்பம் உள்ளவராக ஒரு ஆணையினாலே அதை உறுதிப்படுத்தினார் 18 நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார் 19 அந்த நம்பிக்கை நமக்கு நிலையானதும் ஆத்துமாக்களுக்கு உறுதியான நங்கூரமாகவும் திரைக்குப் பின்னே மகா பரிசுத்த இடத்திற்குள் பிரவேசிக்கிறதாகவும் இருக்கிறது 20 நமக்கு முன்னோடியானவராகிய இயேசுகிறிஸ்து மெல்கிசேதேக்கின் முறைமையில் நித்திய பிரதான ஆசாரியராக நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்
Chapter 7
அத்தியாயம்– 7
ஆசாரியனாகிய மெல்கிசேதேக்கு
1 இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும் உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாக இருந்தான் ராஜாக்களை முறியடித்து திரும்பிவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய் அவனை ஆசீர்வதித்தான் 2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான் இவனுடைய முதல் பெயராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும் பின்பு சாலேமின் ராஜா என்பதற்கு சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாகும் 3 இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன் இவன் வாழ்நாட்களின் துவக்கமும் முடிவும் இல்லாதவனாக தேவனுடைய குமாரனைப்போல என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான் 4 இவன் எவ்வளவு பெரியவனாக இருக்கிறான் பாருங்கள் கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம்கூட கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான் 5 லேவியின் குமாரர்களில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும் ஆபிரகாமின் வம்சத்திலிருந்து வந்த தங்களுடைய சகோதரர்களான மக்களிடம் நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைப் பெற்றிருக்கிறார்கள் 6 ஆனாலும் அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய மெல்கிசேதேக்கு ஆபிரகாமிடம் தசமபாகம் வாங்கி வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்த அவனை ஆசீர்வதித்தான் 7 சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான் அதில் சந்தேகம் இல்லை 8 அன்றியும் இங்கே தசமபாகம் வாங்குகிற மனிதர்கள் ஒருநாளில் மரித்துப்போவார்கள் அங்கேயோ ஆபிரகாமிடம் தசமபாகத்தைப் பெற்றுக்கொண்டவன் உயிரோடு இருப்பவன் என்று சாட்சிபெற்றவன் 9 அன்றியும் மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது லேவியானவன் தன் முற்பிதாவாகிய ஆபிரகாமின் சரீரத்தில் இருந்ததினால் 10 தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாகத் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம் 11 அல்லாமலும் இஸ்ரவேல் மக்கள் லேவி கோத்திர ஆசாரிய முறைமைக்கு உட்பட்டிருந்துதான் நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள் அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால் ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல் மெல்கிசேதேக்குடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டியது என்ன 12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருந்தால் நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டும் 13 இவைகள் யாரைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதோ அவர் வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே அந்தக் கோத்திரத்தில் ஒருவனும் பலிபீடத்து ஊழியம் செய்தது இல்லையே 14 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினார் என்பது தெளிவாக இருக்கிறது அந்தக் கோத்திரத்தாரின் ஆசாரியத்துவத்தைப்பற்றி மோசே ஒன்றும் சொல்லவில்லையே 15 அல்லாமலும் மெல்கிசேதேக்கைப்போல வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பது மிகவும் தெளிவாக விளங்குகிறது 16 அவர் சரீர சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தினால் ஆசாரியர் ஆகாமல் 17 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத் தகுந்தபடி அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியர் ஆனார் 18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயன் இல்லாததுமாக இருந்ததினால் மாற்றப்பட்டது 19 நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை ஆனால் சிறந்த நம்பிக்கை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது அந்த நம்பிக்கையினாலே தேவனுக்கு அருகில் சேருகிறோம் 20 அன்றியும் அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள் இவரோ நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார் மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்மோடு சொன்னவராலே ஆணையோடு ஆசாரியர் ஆனார் 21 எனவே இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு சிறந்த காரியமோ 22 அவ்வளவு சிறந்த உடன்படிக்கைக்கு உத்திரவாதமானார் 23 அன்றியும் அவர்கள் மரணத்தினால் ஆசாரிய ஊழியத்தில் நிலைத்திருக்க முடியாததினால் அநேகர் ஆசாரியர்களாக்கப்படுகிறார்கள் 24 ஆனால் இயேசுகிறிஸ்துவோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறதினால் அவருடைய ஆசாரியத்துவம் என்றும் மாறாதது 25 மேலும் அவர் மூலமாக தேவனிடம் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்ய அவர் எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவர்களை முழுவதும் இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார் 26 பரிசுத்தமுள்ளவரும் குற்றம் இல்லாதவரும் மாசு இல்லாதவரும் பாவிகளுக்கு விலகினவரும் வானங்களிலும் உயர்ந்தவருமாக இருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கு இருக்கிறார் 27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும் பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை ஏனென்றால் தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார் 28 நியாயப்பிரமாணம் பெலவீனமுள்ள மனிதர்களைப் பிரதான ஆசாரியர்களாக ஏற்படுத்துகிறது ஆனால் நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு வந்த ஆணையின் வசனமோ என்றென்றைக்கும் பூரண பிரதான ஆசாரியராக இருக்கிற தேவகுமாரனை பிரதான ஆசாரியராக ஏற்படுத்தியது
Chapter 8
அத்தியாயம்– 8
புதிய உடன்படிக்கையின் பிரதான ஆசாரியன்
1 மேலே சொல்லியவைகளின் முக்கியமான பொருள் என்னவென்றால் பரலோகத்தில் உள்ள மகத்துவமான சிங்காசனத்தின் வலதுபக்கத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாக 2 பரிசுத்த இடத்திலும் மனிதர்களால் அல்ல கர்த்தரால் நிறுவப்பட்ட உண்மையான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியம் செய்கிறவருமாக இருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு 3 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக நியமிக்கப்படுகிறான் ஆகவே செலுத்துவதற்கு எதாவது ஒன்று இவருக்கும் அவசியமாக இருக்கிறது 4 பூமியிலே கிறிஸ்து இருப்பாரானால் ஆசாரியராக இருக்கமாட்டார் ஏனென்றால் நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே 5 இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்தில் இருப்பவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது அப்படியே மோசே கூடாரத்தைக் கட்டப் போகும்போது மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாக இரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார் 6 கிறிஸ்துவானவர் விசேஷித்த வாக்குத்தத்தங்களினால் நிறுவிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராக இருக்கிறாரோ அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார் 7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாமல் இருந்தால் இரண்டாம் உடன்படிக்கை தேவையில்லையே 8 அவர்களைக் குற்றப்படுத்தி அவர்களைப் பார்த்து இதோ கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தும் காலம் வருகிறது 9 அவர்களுடைய முற்பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவர நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு செய்த உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைத்து நிற்கவில்லையே நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் 10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடு செய்யும் உடன்படிக்கையாவது என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன் நான் அவர்கள் தேவனாக இருப்பேன் அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் 11 அப்பொழுது சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும் எல்லோரும் என்னை அறிவார்கள் ஆகவே கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும் ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டியது இல்லை 12 ஏனென்றால் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாக மன்னித்து அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினைக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் 13 புதிய உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார் பழமையானதும் நாள்பட்டதுமாக இருக்கிறது உருக்குலைந்துபோகும் காலம் நெருங்கியிருக்கிறது
Chapter 9
அத்தியாயம்– 9
ஆசாரிப்புக்கூடாரத்தில் ஆராதனை
1 அன்றியும் முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது 2 எப்படியென்றால் ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும் மேஜையும் தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன அது பரிசுத்த இடம் எனப்படும் 3 இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது 4 அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும் முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும் ஆரோனுடைய துளிர்த்த கோலும் உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன 5 அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை 6 இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள் 7 இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான் 8 அதினாலே முதலாம் கூடாரம் நிற்கும்வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்குப் போகிற வழி இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார் 9 அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாக இருக்கிறது அதற்கேற்றபடி செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தமுடியாதவைகள் 10 உண்பதும் குடிப்பது பலவிதமான குளியல்களும் சரீரத்திற்குரிய சடங்குகளேதவிர வேறோன்றும் இல்லை இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் செய்வதற்கு கட்டளையிடப்பட்டது 11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும் 12 வெள்ளாட்டுக்கடா இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து நித்திய மீட்பை உண்டுபண்ணினார் 13 அது எப்படியென்றால் காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும் தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் சரீரசுத்தம் உண்டாகப் பரிசுத்தப்படுத்துமென்றால் 14 நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம் 15 ஆகவே முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார் 16 ஏனென்றால் எங்கே மரணசாசனம் உண்டோ அங்கே அந்த சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும் 17 எப்படியென்றால் மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும் அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே 18 அப்படியே முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை 19 எப்படியென்றால் மோசே நியாயப்பிரமாணத்தினால் எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும் சிவப்பான ஆட்டு முடியோடும் ஈசோப்போடும் எடுத்து புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து 20 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான் 21 இவ்விதமாக கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான் 22 நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும் இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது 23 ஆகவே பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள் 24 அப்படியே உண்மையான பரிசுத்த இடத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த இடத்திலே கிறிஸ்துவானவர் நுழையாமல் பரலோகத்திலே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்வதற்காக நுழைந்திருக்கிறார் 25 பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை 26 அப்படியிருந்தால் உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே அப்படி இல்லை அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார் 27 அன்றியும் ஒரேமுறை இறப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே 28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார்
Chapter 10
அத்தியாயம்– 10
கிறிஸ்துவின் தியாகம்
1 இப்படியிருக்க நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாக இல்லாமல் அவைகளின் நிழலாகமட்டும் இருக்கிறதினால் ஒவ்வொரு வருடமும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருபோதும் பூரணப்படுத்தாது 2 பூரணப்படுத்துமானால் ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்டப்பின்பு இன்னும் பாவங்கள் உண்டு என்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாததினால் அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படும் அல்லவா 3 அப்படி நிறுத்தாததினால் பாவங்கள் உண்டு என்று அவைகளினாலே ஒவ்வொரு வருடமும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது 4 அல்லாமலும் காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவர்த்தி செய்யமுடியாதே 5 ஆகவே அவர் உலகத்திற்கு வந்தபோது பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர் 6 சர்வாங்க தகனபலிகளும் பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது இல்லை என்றீர் 7 அப்பொழுது நான் தேவனே உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய இதோ வருகிறேன் புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார் 8 நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேலே சொன்னதுபோல பலியையும் காணிக்கையையும் சர்வாங்கதகனபலிகளையும் பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை அவைகள் உமக்குப் பிரியமானது இல்லை என்று சொன்னபின்பு 9 தேவனே உம்முடைய விருப்பத்தின்படிசெய்ய இதோ வருகிறேன் என்று சொன்னார் இரண்டாவதை நிலைநிறுத்துவதற்காக முதலாவதை நீக்கிப்போடுகிறார் 10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேமுறை பலியிடப்பட்டதினாலே அந்த விருப்பத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம் 11 அன்றியும் எந்த ஆசாரியனும் தினந்தோறும் ஆராதனை செய்கிறவனாகவும் பாவங்களை ஒருபோதும் நிவர்த்திசெய்யமுடியாத ஒரேவிதமான பலிகளை அநேகமுறை செலுத்திவருகிறவனாகவும் நிற்பான் 12 இவரோ பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்து 13 இனித் தம்முடைய எதிரிகளைத் தமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார் 14 ஏனென்றால் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார் 15 இதைப்பற்றி பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிச்சொல்லுகிறார் எப்படியென்றால் 16 அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடு செய்யும் உடன்படிக்கையாவது நான் என்னுடைய கட்டளைகளை அவர்களுடைய இருதயங்களில் வைத்து அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை உரைத்தப்பின்பு 17 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார் 18 இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால் இனிப் பாவத்திற்காக பலி செலுத்தப்படுவது இல்லை 19 ஆகவே சகோதரர்களே நாம் பரிசுத்த இடத்தில் நுழைவதற்கு இயேசுவானவர் தமது சரீரமாகிய திரையின்வழியாகப் புதியதும் ஜீவனுமான வழியை நமக்கு உண்டுபண்ணினதினால் 20 அந்தவழியாக நுழைவதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறதினாலும் 21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான பிரதான ஆசாரியர்கள் ஒருவர் நமக்கு இருக்கிறதினாலும் 22 தீயமனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயம் உள்ளவர்களாகவும் சுத்த தண்ணீரினால் கழுவப்பட்ட சரீரம் உள்ளவர்களாகவும் உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம் 23 அல்லாமலும் நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே 24 மேலும் அன்புக்கும் நல்ல செய்கைகளுக்கும் நாம் ஏவப்படுவதற்காக ஒருவரையொருவர் கவனித்து 25 சபை கூடிவருகிறதைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்திசொல்லவேண்டும் நாட்கள் நெருங்கி வருகிறதை எவ்வளவாகப் பார்க்கிறீர்களோ அவ்வளவாகப் புத்திசொல்லவேண்டும் 26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாகப் பாவம் செய்கிறவர்களாக இருந்தால் பாவங்களுக்காக செலுத்தப்படும் வேறொரு பலி இனி இல்லாமல் 27 நியாயத்தீர்ப்பு வரும் என்று பயத்தோடு எதிர்பார்ப்பதும் எதிரிகளை அழிக்கும் கோபத்தின் தண்டனையுமே இருக்கும் 28 மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே 29 தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து தன்னைப் பரிசுத்தம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தம் என்று நினைத்து கிருபையின் ஆவியை அவமதிக்கிறவன் எவ்வளவு கொடிய தண்டனைக்கு தகுதியானவனாக இருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள் 30 பழிவாங்குதல் என்னுடையது நானே பதில்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும் கர்த்தர் தம்முடைய மக்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் யார் என்று அறிவோம் 31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாக இருக்குமே 32 முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய அதிக போராட்டத்தைச் சகித்தீர்களே 33 நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமட்டுமில்லாமல் அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள் 34 நான் கட்டப்பட்டிருக்கும்போது நீங்கள் என்னைக்குறித்துப் பரிதாபப்பட்டதுமில்லாமல் பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சொத்து உங்களுக்கு உண்டு என்று அறிந்து உங்களுடைய ஆஸ்திகளையும் சந்தோஷமாகக் கொள்ளையிடக் கொடுத்தீர்கள் 35 ஆகவே அதிக பலனைத் தரும் உங்களுடைய தைரியத்தை விட்டுவிடாமல் இருங்கள் 36 நீங்கள் தேவனுடைய விருப்பத்தின்படிசெய்து வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறுவதற்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாக இருக்கிறது 37 வருகிறவர் இன்னும் கொஞ்சக்காலத்தில் வருவார் தாமதம் செய்யார் 38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் பின்வாங்கிப்போவான் என்றால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாக இருக்காது என்கிறார் 39 நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாக இருக்காமல் ஆத்துமாவைக் காக்க விசுவாசிக்கிறவர்களாக இருக்கிறோம்
Chapter 11
அத்தியாயம்– 11
விசுவாசம்
1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது 2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள் 3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும் இவ்விதமாக காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம் 4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான் அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான் அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார் அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான் 5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான் தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால் அவன் காணப்படாமல் போனான் அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான் 6 விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம் ஏனென்றால் தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும் அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும் 7 விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று பயபக்தியுள்ளவனாக தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான் அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான் 8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான் 9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான் 10 ஏனென்றால் தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான் 11 விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள் 12 எனவே சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள் 13 இவர்கள் எல்லோரும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல் தூரத்திலே அவைகளைப் பார்த்து நம்பி அணைத்துக்கொண்டு பூமியின்மேல் தங்களை அந்நியர்களும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள் 14 இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள் 15 தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால் அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே 16 அதையல்ல அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள் ஆகவே தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே 17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான் 18 ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து 19 தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான் மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான் 20 விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான் 21 விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான் 22 விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான் 23 மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு விசுவாசத்தினாலே ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள் 24 விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து 25 நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு 26 இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான் 27 விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான் 28 விசுவாசத்தினாலே தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான் 29 விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள் எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள் 30 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது 31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள் 32 பின்னும் நான் என்ன சொல்லுவேன் கிதியோன் பாராக் சிம்சோன் யெப்தா தாவீது சாமுவேல் என்பவர்களையும் தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது 33 விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள் நீதியை நடப்பித்தார்கள் வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள் சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள் 34 அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள் பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள் பலவீனத்தில் பலன் கொண்டார்கள் யுத்தத்தில் வல்லவர்களானார்கள் அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள் 35 பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள் வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு விடுதலைபெறச் சம்மதிக்காமல் வாதிக்கப்பட்டார்கள் 36 வேறுசிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் சிறைக்காவலையும் அனுபவித்தார்கள் 37 கல்லெறியப்பட்டார்கள் வாளால் அறுக்கப்பட்டார்கள் பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள் பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள் செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அனுபவித்தார்கள் 38 உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை அவர்கள் வனாந்திரங்களிலும் மலைகளிலும் குகைகளிலும் பூமியின் வெடிப்புகளிலும் சிதறி அலைந்தார்கள் 39 இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள் 40 நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்
Chapter 12
அத்தியாயம்– 12
தேவனுடைய சீர்படுத்துதல்
1 ஆகவே மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க பாரமான எல்லாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம் 2 அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு அவமானத்தை நினைக்காமல் சிலுவையைச் சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார் 3 ஆகவே நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் 4 பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே 5 அன்றியும் என் மகனே கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே 6 கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள் 7 நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார் தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ 8 எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே 9 அன்றியும் நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைக் கண்டிக்கும்போது அவர்களுக்கு நாம் பயந்து நடந்திருக்க நாம் பிழைப்பதற்காக ஆவிகளின் பிதாவிற்கு அதிகமாக அடங்கி நடக்கவேண்டுமல்லவா 10 அவர்கள் தங்களுக்கு நல்லதென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் கண்டித்தார்கள் இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாவதற்காக நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைக் கண்டிக்கிறார் 11 எந்தக் கண்டித்தலும் தற்காலத்தில் சந்தோஷமாக இல்லாமல் துக்கமாக இருக்கும் ஆனாலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும் 12 ஆகவே நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி 13 முடமாக இருக்கிறது பெலவீனமாகிப்போகாமல் குணமாவதற்காக உங்களுடைய பாதங்களுக்கு வழிகளைச் சீர்ப்படுத்துங்கள் 14 எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் விரும்புங்கள் பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிக்கமுடியாது 15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாமல் இருக்கவும் எந்தவொரு கசப்பான வேர் முளைத்து எழும்பிக் கலகம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாமல் இருக்கவும் 16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும் ஒருநேர உணவிற்காக தன் புத்திரசுவிகாரத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் 17 ஏனென்றால் பின்பதாக அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் தகுதியற்றவன் என்று தள்ளப்பட்டதை அறிவீர்கள் அவன் கண்ணீர்விட்டு கவலையோடு தேடியும் மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை 18 அன்றியும் தொடக்கூடியதும் அக்கினி பற்றியெரிகிற மலையினிடமும் மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளிடமும் 19 எக்காளமுழக்கத்தினிடமும் வார்த்தைகளுடைய சத்தத்தினிடமும் நீங்கள் வந்து சேரவில்லை அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடி வேண்டிக்கொண்டார்கள் 20 ஏனென்றால் ஒரு மிருகமானாலும் மலையைத் தொட்டால் அது கல்லெறியப்பட்டு அல்லது அம்பினால் எய்யப்பட்டுச் சாகவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமுடியாமல் இருந்தார்கள் 21 மோசேயும் நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லும் அளவிற்கு அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது 22 நீங்களோ சீயோன் மலையினிடமும் ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும் ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும் 23 பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும் எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும் பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும் 24 புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடமும் ஆபேலினுடைய இரத்தம் பேசினதைவிட நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடமும் வந்து சேர்ந்தீர்கள் 25 பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள் ஏனென்றால் பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம் 26 அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் 27 இன்னும் ஒருமுறை என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருப்பதற்காக அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது 28 ஆகவே அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாக ஆராதனை செய்வதற்காக கிருபையைப் பற்றிக்கொள்ளவேண்டும் 29 நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே
Chapter 13
அத்தியாயம்– 13
இறுதி ஜெபமும் வாழ்த்துக்களும்
1 சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும் 2 அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள் அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு 3 சிறைச்சாலையில் இருக்கிறவர்களோடு நீங்களும் சிறைச்சாலையிலே இருக்கிறவர்களைப்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள் அவர்களுடைய சரீரங்களைப்போல உங்களுடைய சரீரங்களும் தீங்கு அனுபவித்ததாக நினைத்து தீங்கு அனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள் 4 திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும் பரிசுத்தமாகவும் இருப்பதாக வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார் 5 நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள் நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே 6 அதினாலே நாம் தைரியத்தோடு கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர் நான் பயப்படமாட்டேன் மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே 7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் 8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார் 9 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள் உணவுபொருட்களால் இல்லை கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது உணவுபொருட்களால் பயனில்லையே 10 நமக்கு ஒரு பலிபீடம் உண்டு அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை 11 ஏனென்றால் எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும் 12 அப்படியே இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார் 13 ஆகவே நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம் 14 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம் 15 ஆகவே அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம் 16 அன்றியும் நன்மைசெய்யவும் தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள் இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார் 17 உங்களை நடத்துகிறவர்கள் உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால் அவர்கள் துக்கத்தோடு இல்லை சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள் அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது 18 எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள் நாங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக எல்லாவற்றிலும் யோக்கியமாக நடக்க விரும்புகிறோம் என்று உறுதியாக நம்புகிறோம் 19 நான் மிகவும் சீக்கிரமாக உங்களிடம் வருவதற்கு நீங்கள் தேவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களை அதிகமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன் 20 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன் 21 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமென் 22 சகோதரர்களே நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன் 23 சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள் அவன் சீக்கிரமாக வந்தால் நான் அவனோடுகூட வந்து உங்களைப் பார்ப்பேன் 24 உங்களை நடத்துகிறவர்களையும் பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள் இத்தாலியா தேசத்தார் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள் 25 கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக ஆமென்