27. நல்ல சமாரியனின் கதை
ஒருநாள், நியாயப்பிரமாணம் முழுவதும் தெரிந்த ஒருவன், இயேசுவினிடத்தில் வந்து, இயேசு தவறாக பிரசங்கம் செய்கிறார் என்று எல்லோருக்கும் தெரியப்படுத்த, இயேசுவினிடத்தில், நான் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு இயேசு, தேவனுடைய நியாயபிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? என்று அவனிடத்தில் கேட்டார்.
அவன், தேவனை, முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும், மனதோடும் நேசித்து, நம்மைப்போல மற்றவர்களையும் நேசிக்க வேண்டும் என்று இயேசுவினிடத்தில் சொன்னான். அதற்கு இயேசு, நீ சொன்னது சரிதான். இப்படி நீ செய்தால் நித்திய ஜீவனைப் பெறுவாய் என்றார்.
ஆனால், நியாயப்பிரமாணம் முழுவதும் தெரிந்த அவன், தான் உண்மையாய் வாழ்கிறதை, ஜனங்களுக்கு காட்டவேண்டும் என்று, இயேசுவினிடத்தில், மற்றவர்கள் என்றால் யார் என்று கேட்டான்.
நியாயப்பிரமாணம் தெரிந்தவனுக்கு இயேசு ஒரு கதை சொன்னார். அதாவது, ஒரு யூதன் எருசலேமிலிருந்து, எரிகோவுக்கு போய்க் கொண்டிருந்தான்.
அப்போது, சில திருடர்கள், அவனை சாகும் அளவு அடித்து, அவனிடத்தில் இருந்த எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுப் போய்விட்டனர்.
பின்பு, யூதர்களின் ஆசாரியன் ஒருவன் அந்த வழியாய் வந்து, கீழே விழுந்துகிடக்கிறவனைப் பார்த்துவிட்டு, அவனைக் கண்டு கொள்ளாமல், வேறு வழியாய் போய்விட்டான்.
கொஞ்ச நேரம் கழித்து, லேவியன் ஒருவன் அந்த வழியாய் வந்தான். [தேவாலயத்தில் ஆசாரியர்களுக்கு உதவி செய்யும், யூதர்களின் லேவிக் கோத்திரத்தார்.] அவனும், கீழே விழுந்து கிடக்கிறவனைக் கண்டுகொள்ளாமல், அந்த வழியைக் கடந்து போய்விட்டான்.
இதற்குப் பின்பு, அந்த வழியாய் ஒரு சமாரியன் வந்தான். [யூதர்களும், சமாரியர்களும் ஒருவரையொருவர் வெறுத்தனர்.] அவன் கீழே விழுந்து கிடந்த அந்த மனிதன், யூதன் என்று அறிந்தும், அவனுக்கு மனமிரங்கி, அவனிடத்தில் போய், அவனுடைய காயங்களுக்கு கட்டுப் போட்டான்.
பின்பு அந்த சமாரியன், அவனை தன்னுடைய கழுதையின்மேல் ஏற்றி, அவனுக்கு உதவி கிடைக்கும் இடத்திற்கு கொண்டு சென்று, அவனுக்குத் தொடர்ந்து உதவி செய்தான்.
அடுத்தநாள், சமாரியன் தன்னுடைய வழியில் போக வேண்டியிருந்தது. எனவே அவனை கவனித்துக் கொண்டிருக்கும் மனிதனிடத்தில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, அவனைப் பார்த்துக்கொள். இதை விட அதிக பணம் செலவானால், நான் திரும்பி வரும்போது அதைத் தருகிறேன் என்றான்.
நியாயப்பிரமாணம் முழுவதும் தெரிந்தவனிடத்தில் இயேசு, என்ன நினைக்கிறாய்? திருடர்கள் கையில் அடிபட்டவனுக்கு அந்த மூன்று பேர்களில் யார் அவருக்கு இரக்கம் கட்டினான் ? அதற்கு அவன், அவனுக்கு உதவி செய்தவன் தான் என்றான். இயேசு அவனிடத்தில், நீயும் போய் அப்படியே செய் என்றார்.
வேதாகம கதை: லூக்கா 1௦:25-37