50. இயேசுவின் வருகை
ஏறக்குறைய 2,௦௦௦ ஆண்டுகளுக்கும் மேலாக உலகமெங்கும் மேசியாவாகிய இயேசுவின் நற்செய்தியை கேட்கின்றனர். சபைகள் வளர்ந்து வருகின்றது. உலகத்தின் கடைசியில் இயேசு திரும்ப வருவேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறார். இதுவரை அவர் வரவில்லை ஆனால் அவர் சொன்னபடியே செய்வார்.
இயேசுவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் நம்மை, தேவன் பரிசுத்தமாய் வாழ்ந்து, அவரை மகிமைப்படுத்தும்படி விரும்புகிறார். மேலும் அவருடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் சொல்லும்படி விரும்புகிறார். இயேசு இவ்வுலகத்தில் வாழ்ந்த போது, என்னுடைய சீஷர்கள், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் உலகம் முழுவதும், பிரசங்கம் செய்வார்கள், பின்பு முடிவு வரும் என்று சொன்னார்.
அநேக ஜனங்கள் இன்னும் இயேசுவைக் குறித்துக் கேள்விப்படவில்லை. நீங்கள் போய் எல்லோரையும் என்னுடைய சீஷராக்குங்கள்! இது அறுவடையின் சமயம்! என்றும் அவர் சொல்லியிருக்கிறார். எனவே இயேசு திரும்பி வருவதற்கு முன்பு, அவர் கிறிஸ்தவர்களுக்கு சொன்னது என்னவென்றால், அவரைப் பற்றி இன்னும் கேள்விப்படாத ஜனங்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
இயேசு மேலும் சொன்னது, ஒரு வேலைக்காரன் தன் எஜமானிலும் பெரியவன் அல்ல. இந்த உலகத்தில் இருந்த முக்கியமான ஜனங்கள் என்னை வெறுத்தார்கள். எனவே அவர்கள் உங்களைத் துன்பப்படுத்தி, என்னிமித்தம் கொலை செய்வார்கள். இந்த உலகத்தில் நீங்கள் துன்பப்படுவீர்கள், ஆனாலும் தைரியமாய் இருங்கள். ஏனெனில் இந்த உலகத்தின் அதிபதியான சாத்தனை நான் தோற்கடித்தேன். நீங்கள் கடைசிவரை உண்மையாய் இருந்தால், தேவன் உங்களை இரட்சிப்பார்!
இந்த உலகத்தின் முடிவில் ஜனங்களுக்கு என்ன நடக்கும் என்பதைப் பற்றி இயேசு அவருடைய சீஷர்களுக்கு ஒரு கதை சொன்னார். அதாவது, நல்ல விதையை தன்னுடைய நிலத்தில் ஒருவன் விதைத்தான். அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய எதிரி வந்து, கோதுமை விதைகளின் மத்தியில் களையை விதைத்து விட்டுப் போனான்.
அது வளர்ந்த போது, வேலைக்காரர்கள் வந்து, ஆண்டவரே, நீர் நல்ல விதைகளைத் தான் விதைத்தீர் ஆனால் களைகள் எப்படி முளைத்தது? என்று கேட்டார்கள். அதற்கு அவன், என்னுடைய எதிரிகளில் ஒருவன் தான் இதைச் செய்திருப்பான் என்றான்.
வேலைக்காரர்கள், அவர்களுடைய எஜமானிடத்தில், நாங்கள் அந்த களைகளை எடுத்துப் போடலாமா? என்று கேட்டனர். அதற்கு எஜமான், வேண்டாம். அப்படி நீங்கள் செய்யும்போது, கோதுமையையும் பிடுங்கிப் போடுவீர்கள். அதினால் அறுவடை வரைக்கும் காத்திருங்கள். பின்பு களைகளை தனியே எடுத்து தீயில் போட்டு எரித்துவிட்டு, கோதுமையை களஞ்சியத்தில் சேர்க்கலாம் என்றான்.
சீஷர்களுக்கு இயேசு சொன்ன கதையின் அர்த்தம் புரியாததினால், அவரிடத்தில் தெளிவாகச் சொல்லும்படி கேட்டனர். அவர் சொன்னது என்னவென்றால், நல்ல விதையை விதைக்கிறவர் மேசியா. அந்த நிலம் உலகம். நல்ல விதை தேவுனுடைய ராஜ்யத்தின் ஜனங்களைக் குறிக்கிறது என்று சொன்னார்.
களைகள் அந்த பொல்லாத பிசாசின் ஜனங்கள். களைகளை விதைத்த எதிரி அந்த பிசாசு. அறுவடை இந்த உலகத்தின் முடிவு. அறுவடை செய்கிறவர்கள் தேவனுடைய தூதர்கள்.
உலகத்தின் முடிவில், பிசாசின் ஜனங்களை தூதர்கள் ஒன்று சேர்த்து, அவர்களை அக்கினியிலே போடுவார்கள். அங்கே அவர்கள் தாங்க முடியாத துயரத்தினால் அவர்களுடைய பற்களைக் கடித்து, கதறி அழுவார்கள். ஆனால் இயேசுவை பின்பற்றின நீதிமான்கள், பிதாவாகிய தேவனுடைய ராஜ்யத்தில் சூரியனைப்போல் பிரகாசித்துக் கொண்டிருப்பார்கள்.
இயேசு மேலும் சொன்னது என்னவென்றால், உலகத்தின் முடிவுக்கு முன்பாக அவர் திரும்பி வருவேன் என்று சொன்னார். அவர் எப்படி போனாரோ அப்படியே திரும்பி வருவார். அவருக்கு உண்மையான சரீரம் இருக்கும், அவர் மேகத்தில் வருவார், இயேசு வரும்போது அவருக்குள் மரித்த எல்லாக் கிறிஸ்தவர்களும் உயிரோடு எழுந்து, அவரை மேகத்தில் சந்திப்பார்கள்.
உயிரோடிருக்கிற கிறிஸ்தவர்கள் வானத்தில் ஏறிக்கொண்டு இறந்துபோன மற்ற கிறிஸ்தவர்களோடு சேர்ந்துக் கொள்வார்கள். அவர்கள் அனைவரும் இயேசுவுடன் இருப்பார்கள். அதன் பிறகு, இயேசு தம் மக்களுடன் வாழப்போகிறார். அவர்கள் ஒன்றாக வாழ்வாதால் அவர்கள் முழுமையான சமாதானத்தை அடைவார்கள்.
அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் கிரீடத்தைத் தருவேன் என்று இயேசு வாக்குப் பண்ணியிருக்கிறார். அவர்கள் தேவனோடு என்றென்றைக்கும் எல்லாவற்றையும் ஆட்சி செய்து, பூரண சமாதானத்தோடு இருப்பார்கள்.
ஆனால் தேவனை விசுவாசியாதவர்களை அவர் நியாயந்தீர்ப்பார். அவர்களை நரகத்தில் போடுவார். அங்கே அவர்கள் தாங்க முடியாத துயரத்தினால் அவர்களுடைய பற்களைக் கடித்து, கதறி அழுது என்றென்றைக்கும் துன்பப்படுவார்கள். அவியாத அக்கினி அவர்களை எரித்துக் கொண்டே இருக்கும், மேலும் அங்கே புழுக்களும் அவர்களைத் தின்பதை நிறுத்தாது.
இயேசு திரும்பி வந்து சாத்தானையும் அவனுடைய ராஜ்யத்தையும் முற்றிலும் அழித்து, சாத்தானை நரகத்தில் தள்ளுவார். அங்கே என்றென்றைக்கும் அவன் தேவனுக்குக் கீழ்படியாமல், தன்னோடு இருந்த ஜனங்களோடு அக்கினியில் எரிந்து கொண்டிருப்பான்.
ஏனென்றால் ஆதாமும், ஏவாளும் தேவனுக்குக் கீழ்படியாமல் இந்த உலகத்திற்கு பாவத்தைக் கொண்டு வந்தார்கள். தேவன் உலகத்தை சபித்து, அழிக்கும்படி முடிவு செய்தார். ஆனால் மறுபடியும் தேவன் புதிய வானம், புதிய பூமியை உண்டாக்குவார். அது பூரணமாயிருக்கும்.
இயேசுவும் அவருடைய ஜனங்களும் அந்த புதிய பூமியில் வாழுவார்கள். அவர் எல்லாவற்றையும் என்றென்றைக்கும் ஆட்சி செய்வார். அவர் ஜனங்களின் கண்ணீரைத் துடைத்து, ஒருவரும் துன்பமோ கவலையோ இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் அழுவதில்லை. அவர்கள் நோயினால் சாவதில்லை. அங்கே பாவம் ஒன்றும் இருக்காது. இயேசு அவருடைய ஜனங்களை நீதியோடும் சமாதானத்தோடும் நடத்தி, அவருடைய ஜனங்களோடு என்றென்றைக்கும் இருப்பார்.
வேதாகம கதை: மத்தேயு 24:14; 28:18; யோவான் 15:20, 16:33; வெளிப்படுத்தல் 2:10; மத்தேயு 13:24-30, 36-42; 1 தெசலோனிக்கேயர் 4:13-5:11; யாக்கோபு 1:12; மத்தேயு 22:13; வெளிப்படுத்தல் 20:10, 21:1-22:21